முத்து !வாழ்க்கையென்பது மிக நீண்ட பயணம்.............இப் பயணத்தில் நம்மை நிலைப்படுத்த உறவு, நட்பு, அறிந்தவர் எனும் தரிப்பிடங்கள் நம் வெட்டுமுகங்களாகின்றன.சில நட்புக்கள் காலவோட்டத்தில் கரைந்து போக, சிலவோ ஞாபகப் பரப்பிலிருந்தும் அழியாத உணர்வுப் பதிவாகிக் கிடக்கின்றன.

அந்த வகையில் முகநூல் பயணத்தில் நான் கண்டெடுத்த நட்புச் சரம் முத்து சதீஷ் குமார்......

பாரதம் தந்த பாசக்கிளி...... தற்போது சிங்கப்பூர் வாசம்.....

"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"


இந்தத் தாரக மந்திரத்தால் தன் உள்ளத்தை உரப்பேற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிதயம்..............

முத்து .......!

அன்று...என் முகநூல் ஆரம்பப் பயணத்தில் நண்பராக என்னுள் இறங்கி,
இன்று அன்புத் தம்பியாக என் வாழ்க்கைப்பூமியில் நிலையூன்றியிருக்கும் உறவுத்துடுப்பிவர்...பெயரில் முத்து இருந்தாலும் அவர் எண்ணங்கள் யாவும் வைரத்தை விட பெறுமதியானவை!

அன்பான உள்ளம் அவருக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை. நிறையப் படித்தும் கூட துளியளவு கூட கர்வம் கிடையாதவர். நட்புக்கு இன்முகமும் நேசமும் காட்டி மனசுக்குள் மானசீகமாய் பரவிக் கிடப்பவர்.


மதம் மனிதங்களை மலினப்படுத்தும்.......ஆனால் முத்தோ மதத்தில் "மதம்" கொள்ளாமல், பிற மதத்தவரின் உணர்வுகளைக் கொல்லாமல் தன் மதமாய் பிற மதங்களையும் நேசிக்கும் மானிடப்பண்புள்ள நல்ல இளைஞர்....


பல சோதனை ஆர்ப்பாட்டத்திலும் அமைதி காக்கும் இந்த இளைஞர்....
தன்னம்பிக்கையுடன் வாழ்வை ஜெயிக்கும் செயல்வீரர்.

என் முகநூலின் பல பக்கங்களின் விடியல் அவர் காலை வணக்கத்துடனேயே விடிந்திருக்கின்றது.

"அக்கா"

மலர்ச்சியில் பல வார்த்தைப்பனித்துளிகள் செய்திகளாய் பரவசப்பட்டுக் கொண்டிருக்கின்றன அவர் விடும் பாசத்தூதாய்!

அவர் முகநூல் பக்கங்களிலும் கூட காலை வணக்கம் வெறுமையாக அல்ல நல்ல படிப்பினையூட்டும் சிந்தனை தாங்கிய செய்தியுடன் கூடிய புகைப்படத்துடனேயே எப்பொழுதும் சிரிக்கின்றன....


முத்து............

கலாரசிகன்......கலைத்திறனில் பிடிப்புள்ள கலைஞன்.....!

அவர் சிந்தனைக்குள் வீழ்ந்து கிடப்பவை உயிர்ப்போட்டமுள்ள புகைப்படங்கள் தான்..அவரது புகைப்பட ஆல்பம்...கருத்துச் செறிவுள்ள சேமிப்பகம்!


 அந்தச் சேமிப்பிலிருந்து சில துளிகள் இப் பக்கத்தை நிறைக்கின்றன பெருமிதத்துடன்........

தான் ரசிக்கும் அழகான , அறிவுபூர்வமான, அற்புதமான, கருத்துச் செறிவுள்ள புகைப்படங்களை ரசிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அப் படம் பேசும் பின்னணியையும் அழகாகப் பதிப்பதில் அவருக்கு நிகர் அவரே!

இவரது புகைப்படங்கள் அழகு, வறுமை, அன்பு, இயற்கை, வாழ்க்கை,பொழுதுபோக்கு என பல வார்ப்புக்களிலும் தெறித்துக் கிடக்கின்றன முகநூல் பக்கங்களில்!


தான் கற்ற படிப்பினை , அறிவுத்துடிப்பாக்கி சாதனைகளின் பக்கம் சாய்ந்திருக்கத் துடிக்கும் இந்தச் சகோதரனின் வெற்றியின் கனம் நாளுக்கு நாள் ஏறுமுகம் காட்டியே நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நம் வாழ்வின் ஆயுட் பரப்புக்களின் எல்லைக்குள் நாம் சாதிக்கும் சாதனைகளே நம் பெயரை இப் புவியில் பதிக்கவல்லன. அந்த வகையில் முத்தின் நேசத்துக்குள் பொதிந்திருக்கும் பல உறவுகள் அவர் பெயரை அன்போடு வாசித்துக் கொண்டுதானிருக்கின்றன. எப்பொழுதும் வாசித்துக் கொண்டுதானிருக்கும்.

தொடர்பாடலே மனித உணர்வுகள் பகிரப்படும் வாசற்றலம்!

தொடர்பாடலின் போது மனமுரண்பாடுகளும் தாக்குவது இயற்கையே!
அவ்வாறான சந்தர்ப்பங்களில் சகிப்புத்தன்மையுடன், கண்ணீர்க்கசிவின் வெளிப்படுத்துகையை ரகஸியப்படுத்தி உள்ளத்துக்குள் போராடும் போராட்டமும், அதன் சுமையும் நானறிவேன்..........
இருந்தும் அத்தகைய நிலையில் கூட வழுக்களை வெற்றிப்படுத்தும் ஆற்றலை நானும் கண்ணீரில் கரைந்து உணர்ந்திருக்கின்றேன்...


வாழ்க்கை எட்டாத தூரத்தில் விரிந்து கிடந்தாலும் அதனைத் தொட்டுவிடும் மனோபலத்தின் இருக்கை முத்துவிடம் அதிகமாக இருப்பதைக் காணும் போது மனம் மகிழ்வே.......!

இவற்றுக்கும் மேலாக நான் பதிவிடுபவற்றை உடனுக்குடன் ஆதரித்து விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தரும் இந்த நேசக்கிளியின் பாசத்திற்கு எல்லை கட்டுவது சாத்தியமற்றதே!

முத்து ..........உங்கள் வாழ்க்கைப் பயணம் சந்தோஷமாக விடியட்டும் !

என் வாழ்த்துக்களின் புன்னகை உங்கள் மனதை நிறைக்கட்டும்! 


கவிதைக்காரன்
"தமிழ் எங்கள் உயிருக்கு மேல்"

இந்தத் தாரக மந்திரத்துடன் நடை பயிலும் இந்தக் கவிஞன்.... கவியுலகில் தன் முத்திரையை ஆழப்பதித்து வருகின்றமை யாராலும் மறுக்க முடியாததே.!

கார்த்திக் G.T.M.........(தங்கமணி கார்த்திக்)
சொந்த இடம்- திருநெல்வேலி, 
இந்தியா ( தற்போது கோயம்பத்தூர்)

நான் முகநூலில் கண்டெடுத்த கவிச்சிலம்பம். மனித நேயமிக்க இளையவன். இயற்கையைக் காதலிக்கும் நல்ல ரசிகன், சிரித்துப் பேசி பொழுதை வேடிக்கையாக நகர்த்துபவன், நல்ல கவிஞன், நட்புக்கொண்டோருடன் தன் அன்பை அள்ளி வழங்கும் வள்ளல்...........

கவிதைகள் என்பது ஒருவரின் உணர்வின் ஆளுகை..அந்த உணர்வுகள் பேசும் நளினங்களே பிறர் மனங்களை வசீகரப்படுத்துகின்றன. கார்த்திக்கின் கவி வார்ப்பில் லயித்து முகிழ்த்து நான் வியந்த சந்தர்ப்பங்கள் அதிகம்.

இவரின் அழகான உவமைகளும், நேர்த்தியான சொற் வார்ப்புக்களும் கவித்துவத்தின் உயிர்ப்புத்தன்மையில் ஆணியறைந்து செல்கின்றன.

இவரது கவி வரியொன்று -

" யாழ் போல வளைந்த
உன்னிடையை
தாழ் போடும்
கைகள் கொண்டு பற்றினேன்"

அனுபவங்களின் சேர்க்கைதான் கவித்தாக்கத்தின் மறு பக்கம் எனும் கூற்றில் எனக்கும் உடன்பாடில்லைதான். ஏனெனில் கார்த்திக் எனும் இளங் கவிஞன் இன்னும் கால் நூற்றாண்டைக் கூடத் தொட்டுப் பார்க்காத இளையவன். ஆனால் அவன் விரல்கள், எண்ணங்கள் மேயும் கவித்துவத்தின் ஆழம் பல அனுபவங்களின் வெளிப்பாடுகளாக வெளி வருவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

கவிதைக்காரனின் கவிதைகள் வியப்பின் எல்லைக்குள் நம்மை தட்டி விட்டு, நாம் திண்டாடும் ரசிப்பினை ரசிக்கும் யதார்த்தம் கொண்டவை.

அவரின் கவி வரிகளின் நயப்பிது-

" புற்கள் மட்டும் அடர்ந்த காட்டில்
பூக்களும் ஆனது உன்
புன்னகைச் சிதறலென்பேன்"

புன்னகைக்கு பூக்களாய் உவமிப்போர் பலராக இருந்தாலும் கூட, அடர்ந்த காட்டில் புஷ்பித்து பலர் பார்வைக்குத் தென்படாத அந்தப் பூக்களின் அழகில் அவள் புன்னகையை ரசிக்கும் இந்தக் கவிஞன், இங்கே அவளின் புன்னகையைத் தான் மட்டுமே ரசிப்பதாக மறை பொருளில் குறிப்பிடுகின்றான்.

எழுத்துக்கள் எல்லாம் வார்த்தைகளாகி விடுவதல்ல. அதனைப் போல் சொற்களெல்லாம் கவிதையாகி விடாது. ஆனால் இந்தக் கவிதைக்காரன் எது சொன்னாலும் அது கவிதையாகி விடுகின்றது.

" இப்பொழுதெல்லாம் ஏக்கப் பெருமூச்சுக்களைத் தவிர ஏதுமில்லை
என்னிடம் இழந்து நிற்கும் இடைவெளிக்குள்
வெற்றிடமான காற்று விலை பேசி
வாங்கிச் சென்றது என் கவிதைகளை!"

கற்பனை என்பது உள்ளத்தில் உறைந்து கிடக்கின்ற எண்ணங்களின் சேமிப்பு. எல்லோர் மனங்களிலும் அந்தக் கற்பனை லயிப்பதுண்டு. ஆனால் அந்தக் கற்பனையை சிதைக்காமல் அழகோடு எடுத்துச் சொல்லும் ஆற்றல் கவிஞருக்கேயுண்டு. கார்த்திக்கும் இதற்கு விதிவிலக்கல்ல.

" என்னால்
முழுவதுமாய் உன்னை
முத்தத்தில் நனைக்க முடிந்த
போது இங்கே மோகப் பந்தி
பரிமாறப்படுகின்றதென
மேகங்கள் கூடி மழையானது"

வசந்த காலத்தின் சிலிர்ப்பில் கூதல் பட்டு குயில்கள் தன் ராகங்களை காற்றில் உதிர்ப்பதைப் போல் , அவ்வவ்போது முகநூலின் வாயிலாக இந்தக் கவிதைக்காரனின் கவிதைகளும் எம் நெஞ்சைத் தொட்டுச் செல்கின்றன.

" இடர்களின் இடைவெளியில்
இடறிப்போன
உன் முகவரியில்
முச்சிரைக்கும் என்
கோபம்
மழைக்குள் கண்ணீராகின்றது......."

சில ஆதங்கங்களின் வலி கவிதையாகப் பேசும் போது ,அதில் கூட அழகின் செழுமை வீழ்ந்துதான் கிடக்கின்றது.

" உறங்க நினைக்கும் முன் விடிந்து போகும் இரவுகள்...!
வெளிச்சம் துப்பிக் கொண்டிருக்கும் கிழக்கு வானத்தின்
மேகத்திட்டுக்களை கனத்த மௌனத்தோடு வேடிக்கை பார்க்கும்
ஒற்றை ஜோடிக் கண்கள் என்னுடையதாக இருப்பதில்
ஆச்சரியமில்லைதான்."

கார்த்திக் கின் பல கவிதைகளில் இவ்வாறு அழகான ஏராளமான நெருடல்களும் சிலிர்ப்புக்களுமுண்டு.

நல்ல எழுத்தாளன் நிறைய நூல்களின் நண்பன். கார்த்திக்கும் விதி விலக்கல்ல. அவரின் லயிப்பில் உறைந்து கிடக்கும் இலக்கிய தாகங்களும் அதன் மோகங்களின் தாக்கங்களும் அவர் படைக்கும் கவியினில் கொட்டிக் கிடக்கின்றது

"என்னிலிருந்து விலக
வில்லாய் விறைத்தாய்.!
நான் வீணை நரம்புகளாய்
உன்னை வாசித்துக் கொண்டிருந்தேன்"

ஒவ்வொரு நிழலுக்கும் நிஜமுண்டு. கார்த்தின் இந்தக் கவிவார்ப்பின் பிண்ணனியில் அவரை இயக்கும் சக்தி நிச்சயம் இருக்கும். ஏனெனில் நாம் நேசிக்கப்படும் போது அந்த நேசம் வாசிக்கும் அற்புதங்கள் கவிதைகளாக, உணர்வுகளாக எட்டிப்பார்க்கும்.

கார்த்திக்.............என் தோழமையை விட அவர் ரசிப்பது என் கவிதைகளைத் தான்.......இருந்தும் அவர் கவிதைகளின் ஞாபக வரிகள் பல என் நெஞ்சுக்குழிக்குள்ளும் இறங்கி கிறங்கி என்னை அவர் ரசிகையாய் இனங்காட்டுகின்றன. ...........

இது கார்த்திக்கின் வரிகள்.......
இருந்துமேனோ என் உணர்வுகளும் இந்த வரிக்குள் சிக்கிக் கிடக்கின்றன!

"ஏனெனத் தெரியாமலே
உன்னோடு மௌனித்துக்
கிடக்கின்றேன்...
ஆனால் என் கவிதைகள்
உன்னோடு மட்டும் தான்
இப்போதெல்லாம்
பேசுகின்றதென்பதை
மறைத்துக் கொண்டு"

வாய் விட்டுப் பேசமுடியாதவையெல்லாம் மௌனங்களாகவே சிதறிக்கிடக்கும். பல மௌனங்கள் உயிரோடு பிசைந்து ஊமை வலியாகும்.அந்த வலிக்குள் சில ஞாபக வழிகளாய் சில கவிதைகள் நினைவுகளாக வீழ்ந்து கிடக்கும்!

அதுவொரு கனாக்காலம் .மீளக் கரந் தொடாத நெருடல்.......பதில் கவிதைகளால் எங்கள் கவிதைகள் மோதிக் கொண்ட போது சிலிர்த்தவை எங்கள் கவிகள் மட்டுமல்ல.மனங்களும் தான்.....பசுமை பூத்த எங்கள் கவிதைகளின் நேசிப்புக்களின் ஆயுள் இந்தப் புவியிறக்கும் வரை மேலாதிக்கம் செலுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை..அவை காலத்தால் அழிக்கப்பட முடியாதவை!

காதல், சோகம், வாழ்க்கை, இயற்கை என பல வரிபரப்புக்களினூடாக தன் அழகான உணர்வுகளால் கவி பேசும் இந்தக் கவிதைக்காரனின் கார்த்திக்கின் எழுத்துலகப் பிரவேசம் இன்னுமின்னும் பல தடம் பதிக்க என் வாழ்த்துக்கள்.


சொர்க்கத் தீவு !


வெள்ளி நிலாக் கொஞ்சலில்........
உணர்வுகள் களித்துக் கிடக்கின்றன
இப்போதெல்லாம்!

நேர்த்தியான என் மாளிகையில்..........
சிதறிக் கிடக்கின்ற பொருட்களெல்லாம்
கண்ணடிக்கின்றன வெகுளியாய்!

தூசு கூடச் செல்லாத என் காற்றில்
மாசற்ற அவள் பேச்சொலி..........
சிலிர்த்துக் கிடக்கின்றன சில்லறையாய்!

காலைப் பனிக்குள்ளும் பண்ணிசைக்கும்
சிட்டுக்களின் சிரிப்பலையாய் - அவள்
என்னுள் நிரம்பிக் கிடக்கின்றாள்!

தனிமைக்குள் மந்திரிக்கப்பட்டு
இருளுக்குள் கவிழ்ந்திருந்த என்னுள்........
இப்பொழுதெல்லாம் அவளே விடிவெள்ளி!

என் மனதின் துன்பவலைகளெல்லாம்
அவள் புன்னகைக்குள்..........
கலைந்து செல்கின்றன இதமாய்!

என் விழிகள் விரிகையில் ....
விடியலை சுட்டும் மலரிதழாய்.........
வாசனை விட்டுச் செல்வதும் அவளே!

என் பெயரில் இத்தனை அமிர்தமா........!
அவளென்னை உச்சரிக்கையில்
சிறகடிக்கின்றேன் பல வெளி தாண்டி!

அவள் பார்வை வீச்சில்..........
இத்தனை வசீகரமோ - என்
மனமோ பித்தாகிக் அலைகின்றது
அவள் பின்னால்!

விடியலின் கரமசைப்பில் - எனை
தொட்டுத் தழுவும் அலாரமாய்
வந்து போகின்றாள் அடிக்கடி!

இந்தக் கிளிப்பேச்சில் மயக்கத்தில்
என் சினக் கவசங்கள்...........
துகிலுரிக்கப்படுகின்றன மென்னிசையாய்!

இவள் பதிக்கும் முத்தத்தில் ..........
பவனி வரும் பழரசங்களோ
இடறி வீழ்கின்றன என்னிதழில்!

இப்பொழுதெல்லாம் என் கவனம்
அவள் மீதே சிதறிக்கிடக்கின்றன- இந்த
வெளியுலக வில்லத்தனத்திலிருந்து மீண்டபடி!

உணர்கின்றேன்....என்னை நானே
உணர்கின்றேன் - அவள்
தந்திருக்கும் மொத்த அன்பையும் சேமித்தபடி!

இவள்........
குறும்புகளில் கரும்பு பிசைந்து
பயணிக்கின்றேன் - அந்தச்
சொர்க்கத்தீவின் ஆட்சிக்குள் நான் !

(அஸ்கா....எங்கள் வீட்டுச் செல்லம்...வயது 2  1/2  ..........அவள் என்னுள் தந்த பாச அருட்டலிது.)


Doctor  Jano........ இம் மழலையை எமக்களித்த என் சகோதரி


காத்திரு!
என்னிடம் திரும்பி வா.......
எனக்குன் காதல் வேண்டும்!

என் காற்றில் நெய்த தூதோலைகள்
சமுத்திரம் துளைத்துன் கரம் சேரட்டும்!

விண்வெளிச் சூரியப் பூ- நம்
பிரிவின் தீ வார்ப்பில் நசுங்கிப் போகட்டும்!

என்னிடம் திரும்பி வா.....
எனக்குன் காதல் வேண்டும்!

என் வழிப் பாதையில் ஒட்டிக்கொண்ட
உன் நேசிப்புக்களால்..........
என்னுயிரின் பெண்மை சிலிர்க்கட்டும்!

நம் வேடிக்கைச் சிதறலின்
ஈரத்தில் கூடல் கொஞ்சம்
வெட்கித்து மோகித்துக் கிடக்கட்டும்!

என்னிடம் திரும்பி வா.......
எனக்குன் காதல் வேண்டும்!

ஒவ்வொரு நிசப்தங்களிலும்
என் மூச்சின் விரல்களில் - உன்
முத்த ரேகைகள் சுகமாய் சயனிக்கட்டும்!

நீ தந்த தனிமைப் பொழுதின்
காயங்கள் யாவும்............
கண்ணீரில் மௌனித்து கரையட்டும்!

என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!

உன் நிழலோடு......
என் தடங்கள் அலையும் பயணத்தில்
உன் தேசமே சொந்தமாய் வீழட்டும்!

சோகத்தின் துவம்சத்தில் சொக்கிக் கிடக்கும்
இப் பாவையின் ஏக்கம் தீரவே..........
மாரியாய் உன் தூறல் மாறட்டும்!

என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!

இருள் கவிந்து மிரட்டும் - என்
திக்குத் தெரியா காட்டின்.........
திசைகாட்டியாய் உன் ஞாபகம் வீழட்டும்!

நிசர்சனங்களில் உனையேந்தி
நிழலுக்குள் மறைந்திருக்குமென்னை
உன் கண்கள் மட்டுமே துகிலுரிக்கட்டும்!

என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!

உன் காத்திருப்புக்களின் சுயம்வரத்தில்
தொட்டுக் கொள்ளும் கணங்கள் தோறும்.........
உன் மாலை என் தோள் சேரட்டும்!

என்றோ திரும்பி வருவேன்
உன் காத்திருப்புக்கள் எனக்கானால்.......
உன் வசம் சேர்ந்திருப்பேன்!

சில நினைவுகள்

ஆசிரியர்த் தொழிலில் நானீட்டிய சில பசுமையான சாதனைகளின்  நினைவுகளின் தொகுப்புக்கள் இவை
-----------------------------------------------------------------


வடமத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூல சிறந்த விஞ்ஞான ஆசிரியையாக தெரிவு செய்யப்பட்ட போதுசர்வதேச ஆசிரியா் தினத்திற்காக பாடசாலையில் எனக்குக் கிடைத்த விருது
(குறைந்த லீவு)
தந்தவர் அன்றைய அதிபர் அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்கள் 


தேசிய மட்ட ஆசிரியர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பரிசில் பெறல்
தருபவர் அன்றைய கல்வியமைச்சர் ரிச்சட் பத்திரன அவர்கள்என் இலக்கிய பயணத்திற்காக யாழ் முஸ்லிம் இணையத்தளம் வழங்கிய "விருது " . 

தருபவர் அமைச்சர் ரிசாட் பதியூத்தின் அவர்கள்நான் வரைந்தவை

"பெப்ரிக்" ( இந்தியா) வர்ண நிறுவனம் நடாத்திய துணி ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இருபத்தைந்து பேரில் முதலிடம் பெற்ற என் தூரிகை அசைவுகள் இவை-
மீண்டும் உரிய முன்பக்கத்திற்குச் செல்ல வேண்டுமாயின் இதனை அழுத்துக

விபத்துக்கள்


அழகான வாழ்க்கையின் அர்த்தங்கள் ஓர் நொடிப் பொழுதின் விபத்துக்கள் மூலம் சிதறிப் போய் விடுகின்றன. ஊனங்களும், உயிரிழப்புக்களும் விபத்தின் கொடுரமான பக்கங்கள். பெரும்பாலும் வீதி விபத்துக்களுக்கு கவனயீனம், அவசரமே காரணமாகின்றன. ஓர் நிமிட தாமதங்களை விரும்பாமல் விரைந்து செல்ல முயற்சிக்கும் போக்கு தரும் அழிவுகள் நாள் தோறும் செய்திகளாக அனுபவங்களாக நம் கண்முன்னால் வெடித்துக் கொண்டே இருக்கின்றன.

நானும் வீதி விபத்தொன்றில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிக்கியவள் தான். முகத்தில் காயம். மயிரிழையில் எனது இடது கண் தப்பியது. மழைநாளொன்றில் எனது மோட்டார் வாகனத்தில் செல்லும் போது எதிர்பக்கத்திலிருந்து வந்த வாகனத்திற்கு இடமளிப்பதற்காக விரைவாகப் பாதையைக் கடக்க முயற்சிக்கும் போது மழைநீரில் நிரம்பியிருந்த குழியினுள் மோட்டார் வாகனச்சில்லு உருண்டதால் ஏற்பட்ட அந்த விபத்தின் ஞாபகங்கள் ஒவ்வொரு நாளும் அந்த முகத்தழும்புகளால் உயிர்ப்பூட்டப்படுகின்றன.

இரத்தத்தில் தோய்ந்த ஹெல்மெட் கண்ணாடியும், சிவப்பு நிறமாக மாற்றப்பட்ட என் மழை அங்கியும் இரத்தக் கசிவாகி நின்ற என்னைப் பார்த்த என் உறவுகளின் கதறல்களும் இன்றும் என்னுள் மறக்கப்படமுடியாத பதிவுகள்.

வீதியில் இறங்கும் போதே உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பயணிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் தொழிலுக்குப் போகும் பெண்கள் வீதியை மறந்து வாழ முடியாது.ஆண்களின் இயக்கம் அவர்களுக்கும் மறுக்கப்படாத நிகழ்வாகி விட்டன. விபத்துக்களைப் பொறுத்தவரையில் தாமே பயணித்து விபத்துக்குள்ளாகும் நிலை ஆண்களுக்கே அதிகம்.

நாம் எவ்வளவுதான் கவனமாக ,அவதானமாகச் செயற்பட்டாலும் கூட ஏனையோரின் கவனயீனமும் , அவசரமும் நமக்குள் பாதிப்பைத் தருகின்றன.

வீதியில் அன்றாடம் சதை கிழிந்து ,குருதி கசிந்து மலினப்பட்டுக் கிடக்கும் மனிதங்களின் கோரங்கள் தினம் தினம் செய்தியாக அல்லது கண்ணுள் விழும் காட்சியாகிப் போகின்றது. இந்நிலையில் விபத்தைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்குதாரராக மாற வேண்டும்.

பெரும்பாலான விபத்துக்கள் இரவிலேயே நடைபெறுகின்றன. இதற்கு காரணமாக சாரதியின் தூக்கமோ அல்லது சனநடமாட்டம் குறைந்ததால் வேகமாகப் பயணித்து , அதன் விளைவாக தன்னிலைப்படுத்த முடியாமல் விதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்துடன் மோதுதல் அல்லது குடைசாய்தல் போன்றவற்றைக் குறிப்படலாம்.

எனவே விபத்துக்களைத் தவிர்க்க சில டிப்ஸ்-
---------------------------------------------------------------
பெரும்பாலும் இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் செல்ல வேண்டிய அவசியமேற்பட்டால் வாகனமோட்டுபவர் விழிப்புடன் ஒட்டுதல் வேண்டும். தனித்துப் பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும். உடல் அயர்ச்சியோ அல்லது தூக்கமோ ஏற்பட்டால் வாகனத்தை சற்று நிறுத்தி ஓய்வெடுத்தல் வேண்டும்.

மனஅழுத்தத்துடனோ அல்லது கவன கலைப்புக்களால் மனம் தடுமாறும் போதோ வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

வாகனம் வீதியில் பயணிக்க வேண்டிய குறித்த வேகங்களிலேயே பயணிக்க வேண்டும். பெரும்பாலானோர் தம் திறமையை அடுத்தவருக்கு வெளிப்படுத்த உச்ச வேகத்தில் பயணிப்பார். இத் தவறு கூட நம்முடன் பயணித்துக் கொண்டிருப்போரின் உயிரைக் காவு கொள்ளக்கூடியது.சனத்தொகைப் பெருக்கத்தினதும், நகரமயமாக்கலினதும் முக்கியமான விளைவுகளுள் ஒன்றாக அதிகரித்த வாகனப் பயன்பாடுள்ளது. தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்த நிலையிலும் கூட ஒவ்வொரு வீடுகளிலும் வாகனங்கள் காணப்படுகின்றன. இதனால் வீதியில் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன.

நாம் பயணிக்கும் போது இரண்டு வாகனங்களுக்கிடையில் உள்ள இடைத்தூரத்தை பேணல் வேண்டும்.அத்துடன் வீதி விளக்குகள், சைகை விளக்குகள் உரிய விதத்தில் ஒளிரச் செய்வதும், வாகனப் பயன்பாட்டின் முன்னர் வாகனத்தின் இயக்க நிலையைச் சரி செய்வதும், நன்றாகப் பயிற்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்ற பின்னர் வாகனமோட்டுவதும் நமது கடமையாகின்றது.


பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வாகன பின் இருக்கைகளில் அமரும் போது சேலை சில்லிற்குள் சுற்றுவதால் விபத்துக்கள் நிகழ்கின்றன.

மேலும் பேருந்து போன்ற பொது வாகனங்கள் உரிய தரிப்புக்களில் நிறுத்தும் போது பயணிகளை ஏற்ற அவசரப்படுத்துவார்கள். அவர்கள் ஏறுவதற்கிடையிலோ அல்லது இறங்குவதற்கிடையிலோ வாகனத்தை விரைவுபடுத்துவதாலும் பயணிகள் கீழே விழுந்து விபத்துக்களுக்குள்ளாகின்றனர். அதுமாத்திரமின்றி மதுபாவனை, நோயுடன் வாகனமோட்டுதல், வாகனம் பயணிக்கும் போது வீதியில் நடமாடும் மிருகங்கள் குறுக்கே பாய்வதும் விபத்துக்களின் மூலவேர்களாகும்.

நம் உயிரின் பெறுமதியை ஏனோ நாம் உணர்வதில்லை. எதிர்பாராமல் அசம்பாவிதம் நடைபெற்ற பின்னர் அந்தப் பாதிப்புக்கள் தரும் ஊனமும் உயிரிழப்புக்களும் நம்மை மட்டுமல்ல நம் உறவுகளையும் பாதித்து விடுகின்றன.

வாழ்க்கை என்பது நீண்டகாலப் பயணம். சில அவசரங்களும் கவனயீனமும் அந்த வாழ்க்கையைச் சிதைக்கும் போது அந்த இழப்புக்கள் தாங்க முடியாதவை. நம்மைப் படைத்தவன் நம்மைக் காத்தருளுவானாக!
திருமறை