கவிதைக்காரன்
"தமிழ் எங்கள் உயிருக்கு மேல்"

இந்தத் தாரக மந்திரத்துடன் நடை பயிலும் இந்தக் கவிஞன்.... கவியுலகில் தன் முத்திரையை ஆழப்பதித்து வருகின்றமை யாராலும் மறுக்க முடியாததே.!

கார்த்திக் G.T.M.........(தங்கமணி கார்த்திக்)
சொந்த இடம்- திருநெல்வேலி, 
இந்தியா ( தற்போது கோயம்பத்தூர்)

நான் முகநூலில் கண்டெடுத்த கவிச்சிலம்பம். மனித நேயமிக்க இளையவன். இயற்கையைக் காதலிக்கும் நல்ல ரசிகன், சிரித்துப் பேசி பொழுதை வேடிக்கையாக நகர்த்துபவன், நல்ல கவிஞன், நட்புக்கொண்டோருடன் தன் அன்பை அள்ளி வழங்கும் வள்ளல்...........

கவிதைகள் என்பது ஒருவரின் உணர்வின் ஆளுகை..அந்த உணர்வுகள் பேசும் நளினங்களே பிறர் மனங்களை வசீகரப்படுத்துகின்றன. கார்த்திக்கின் கவி வார்ப்பில் லயித்து முகிழ்த்து நான் வியந்த சந்தர்ப்பங்கள் அதிகம்.

இவரின் அழகான உவமைகளும், நேர்த்தியான சொற் வார்ப்புக்களும் கவித்துவத்தின் உயிர்ப்புத்தன்மையில் ஆணியறைந்து செல்கின்றன.

இவரது கவி வரியொன்று -

" யாழ் போல வளைந்த
உன்னிடையை
தாழ் போடும்
கைகள் கொண்டு பற்றினேன்"

அனுபவங்களின் சேர்க்கைதான் கவித்தாக்கத்தின் மறு பக்கம் எனும் கூற்றில் எனக்கும் உடன்பாடில்லைதான். ஏனெனில் கார்த்திக் எனும் இளங் கவிஞன் இன்னும் கால் நூற்றாண்டைக் கூடத் தொட்டுப் பார்க்காத இளையவன். ஆனால் அவன் விரல்கள், எண்ணங்கள் மேயும் கவித்துவத்தின் ஆழம் பல அனுபவங்களின் வெளிப்பாடுகளாக வெளி வருவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

கவிதைக்காரனின் கவிதைகள் வியப்பின் எல்லைக்குள் நம்மை தட்டி விட்டு, நாம் திண்டாடும் ரசிப்பினை ரசிக்கும் யதார்த்தம் கொண்டவை.

அவரின் கவி வரிகளின் நயப்பிது-

" புற்கள் மட்டும் அடர்ந்த காட்டில்
பூக்களும் ஆனது உன்
புன்னகைச் சிதறலென்பேன்"

புன்னகைக்கு பூக்களாய் உவமிப்போர் பலராக இருந்தாலும் கூட, அடர்ந்த காட்டில் புஷ்பித்து பலர் பார்வைக்குத் தென்படாத அந்தப் பூக்களின் அழகில் அவள் புன்னகையை ரசிக்கும் இந்தக் கவிஞன், இங்கே அவளின் புன்னகையைத் தான் மட்டுமே ரசிப்பதாக மறை பொருளில் குறிப்பிடுகின்றான்.

எழுத்துக்கள் எல்லாம் வார்த்தைகளாகி விடுவதல்ல. அதனைப் போல் சொற்களெல்லாம் கவிதையாகி விடாது. ஆனால் இந்தக் கவிதைக்காரன் எது சொன்னாலும் அது கவிதையாகி விடுகின்றது.

" இப்பொழுதெல்லாம் ஏக்கப் பெருமூச்சுக்களைத் தவிர ஏதுமில்லை
என்னிடம் இழந்து நிற்கும் இடைவெளிக்குள்
வெற்றிடமான காற்று விலை பேசி
வாங்கிச் சென்றது என் கவிதைகளை!"

கற்பனை என்பது உள்ளத்தில் உறைந்து கிடக்கின்ற எண்ணங்களின் சேமிப்பு. எல்லோர் மனங்களிலும் அந்தக் கற்பனை லயிப்பதுண்டு. ஆனால் அந்தக் கற்பனையை சிதைக்காமல் அழகோடு எடுத்துச் சொல்லும் ஆற்றல் கவிஞருக்கேயுண்டு. கார்த்திக்கும் இதற்கு விதிவிலக்கல்ல.

" என்னால்
முழுவதுமாய் உன்னை
முத்தத்தில் நனைக்க முடிந்த
போது இங்கே மோகப் பந்தி
பரிமாறப்படுகின்றதென
மேகங்கள் கூடி மழையானது"

வசந்த காலத்தின் சிலிர்ப்பில் கூதல் பட்டு குயில்கள் தன் ராகங்களை காற்றில் உதிர்ப்பதைப் போல் , அவ்வவ்போது முகநூலின் வாயிலாக இந்தக் கவிதைக்காரனின் கவிதைகளும் எம் நெஞ்சைத் தொட்டுச் செல்கின்றன.

" இடர்களின் இடைவெளியில்
இடறிப்போன
உன் முகவரியில்
முச்சிரைக்கும் என்
கோபம்
மழைக்குள் கண்ணீராகின்றது......."

சில ஆதங்கங்களின் வலி கவிதையாகப் பேசும் போது ,அதில் கூட அழகின் செழுமை வீழ்ந்துதான் கிடக்கின்றது.

" உறங்க நினைக்கும் முன் விடிந்து போகும் இரவுகள்...!
வெளிச்சம் துப்பிக் கொண்டிருக்கும் கிழக்கு வானத்தின்
மேகத்திட்டுக்களை கனத்த மௌனத்தோடு வேடிக்கை பார்க்கும்
ஒற்றை ஜோடிக் கண்கள் என்னுடையதாக இருப்பதில்
ஆச்சரியமில்லைதான்."

கார்த்திக் கின் பல கவிதைகளில் இவ்வாறு அழகான ஏராளமான நெருடல்களும் சிலிர்ப்புக்களுமுண்டு.

நல்ல எழுத்தாளன் நிறைய நூல்களின் நண்பன். கார்த்திக்கும் விதி விலக்கல்ல. அவரின் லயிப்பில் உறைந்து கிடக்கும் இலக்கிய தாகங்களும் அதன் மோகங்களின் தாக்கங்களும் அவர் படைக்கும் கவியினில் கொட்டிக் கிடக்கின்றது

"என்னிலிருந்து விலக
வில்லாய் விறைத்தாய்.!
நான் வீணை நரம்புகளாய்
உன்னை வாசித்துக் கொண்டிருந்தேன்"

ஒவ்வொரு நிழலுக்கும் நிஜமுண்டு. கார்த்தின் இந்தக் கவிவார்ப்பின் பிண்ணனியில் அவரை இயக்கும் சக்தி நிச்சயம் இருக்கும். ஏனெனில் நாம் நேசிக்கப்படும் போது அந்த நேசம் வாசிக்கும் அற்புதங்கள் கவிதைகளாக, உணர்வுகளாக எட்டிப்பார்க்கும்.

கார்த்திக்.............என் தோழமையை விட அவர் ரசிப்பது என் கவிதைகளைத் தான்.......இருந்தும் அவர் கவிதைகளின் ஞாபக வரிகள் பல என் நெஞ்சுக்குழிக்குள்ளும் இறங்கி கிறங்கி என்னை அவர் ரசிகையாய் இனங்காட்டுகின்றன. ...........

இது கார்த்திக்கின் வரிகள்.......
இருந்துமேனோ என் உணர்வுகளும் இந்த வரிக்குள் சிக்கிக் கிடக்கின்றன!

"ஏனெனத் தெரியாமலே
உன்னோடு மௌனித்துக்
கிடக்கின்றேன்...
ஆனால் என் கவிதைகள்
உன்னோடு மட்டும் தான்
இப்போதெல்லாம்
பேசுகின்றதென்பதை
மறைத்துக் கொண்டு"

வாய் விட்டுப் பேசமுடியாதவையெல்லாம் மௌனங்களாகவே சிதறிக்கிடக்கும். பல மௌனங்கள் உயிரோடு பிசைந்து ஊமை வலியாகும்.அந்த வலிக்குள் சில ஞாபக வழிகளாய் சில கவிதைகள் நினைவுகளாக வீழ்ந்து கிடக்கும்!

அதுவொரு கனாக்காலம் .மீளக் கரந் தொடாத நெருடல்.......பதில் கவிதைகளால் எங்கள் கவிதைகள் மோதிக் கொண்ட போது சிலிர்த்தவை எங்கள் கவிகள் மட்டுமல்ல.மனங்களும் தான்.....பசுமை பூத்த எங்கள் கவிதைகளின் நேசிப்புக்களின் ஆயுள் இந்தப் புவியிறக்கும் வரை மேலாதிக்கம் செலுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை..அவை காலத்தால் அழிக்கப்பட முடியாதவை!

காதல், சோகம், வாழ்க்கை, இயற்கை என பல வரிபரப்புக்களினூடாக தன் அழகான உணர்வுகளால் கவி பேசும் இந்தக் கவிதைக்காரனின் கார்த்திக்கின் எழுத்துலகப் பிரவேசம் இன்னுமின்னும் பல தடம் பதிக்க என் வாழ்த்துக்கள்.


13 comments:

 1. பிழைபட்டு கசங்கிய காகிதம் கவி பாடலாம்
  ஆனால் வெற்று காகிதம்......?
  ம்ம்.... கவிபாடும்

  வெள்ளை களம் ; வெற்று தளம்
  இவன் பார்வையில் நிச்சயம்
  கவிபாடும்

  பொட்டலும்
  வருணனின் தயவில்லாமல்
  பூந்தோட்டமாகும்
  இவன் ரசனையில்

  திருடபட்ட வரிகளை நினையாது
  எழுத படா வரிகளே கவிஞனுக்கு
  சொந்தமென சிலாகிப்பவன்

  நிச்சயம் இவனுலகில்
  அனைத்தும் கவிபாடும்

  கவிதாயினியே எம் கவிஞனுக்கு
  உம் பெருமிதம் ஓர் சாகித்ய அகதாமியே

  வாழ்க எம் தமிழ் வளர்க உம் எழுத்து பணி
  வெல்லட்டும் எம் தோழனின் களப்பணி

  ReplyDelete
 2. கவிதையாய் வடிக்க தெரியல எனக்கு... ஆனா ஜான்சி, இதை படித்ததும் ஏனோ மனம் முழுதும் ஏதோ ஒரு நிறைவு... சொல்ல வார்த்தைகள் இல்லை...

  ReplyDelete
 3. இந்த "கவிதைகாரனின்" ரசனையும்..சொல்வலத்தையும் கண்டு பிரமித்த கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதே எனக்கு (என்றும்) பெருமையாக இருக்கு.எழுத்துக்கள்...என்றும் நிலைத்து வாழக்கூடியவை.அதிலும் "இக்கவிதைகாரனின்" வரிகள் அனைத்தும்..."சாகாவரம்" பெற்றவையாக இருந்திட வேண்டுமென்பதில் ஆசைபடும் உள்ளங்களின் எண்ணிக்கையில் முதலாவதாக எனதெண்ணம் இருக்கு என்பதில்...(இன்னும்) மகிழ்வாக இருக்கு...!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக ஷேர்கான்.....கவிதைக்காரன் வரிகள் யாவும் சாகாவரம் பெற்றவை

   Delete
 4. இவரது நண்பரில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம்

  ReplyDelete
 5. கார்த்திக் கவியால் மட்டுமல்ல, நேசத்தாலும் நெஞ்சை நிறைத்துக் கிடப்பவர் ............

  நன்றி Karan Krishna ......

  ReplyDelete
 6. நல்ல கவிதைகள். கார்த்திக்கின் கவிதைகள் பற்றிய உங்கள் நோக்கும் சிறப்பாக இருக்கிறது ஜன்சி கபூர். வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலைமகன் பைரூஸ்

   Delete
 7. என் நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமான உள்ளங்களுக்கு..
  பதிலுக்கு...
  என்செய்வேன்! நான்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி கார்த்திக் ராஜா

   Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை