About Me

2012/07/18

கற்றலில் வீழ்ந்தே !


"ஓதுவீராக"

எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முறையாக அருளப்பட்டதன் வாயிலாக எம் வாழ்வுக்குள் வழிகாட்டப்பட்ட புனித திருமறை வசனமிது.

"வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான் :
என் இறைவா, கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே) நீர் பிரார்த்திப்பீராக (20:114)

இதுவும் கல்வியை இயம்பும் திருமறை வசனமே!

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக"

திருக்குறளின் கல்வி பற்றிய அதிகாரத்தில் (391வது குறள்) திருவள்ளுவர் அழகாக கல்வியின் சிறப்பையுணர்த்தி நிற்கின்றார் மேலே காட்டப்பட்டவாறு!

"இளமையிற் கல்வி சிலையிலெழுத்து"

இது அழகிய அனுபவப் பழமொழி !

இவ்வாறாக மனிதனுக்குள் மானுடப்பண்பைப் போதிக்கும் சகல மதங்களும் கல்வியை முக்கியத்துவப்படுத்துகின்றன. இந்து மக்கள் கல்விக்குரிய கடவுளாக சரஸ்வதியை வழிபடுகின்றனர்.


இவ்வாறான சிறப்புப்பெற்ற கல்வியானது மனிதருள் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. பாடசாலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நாம் பெற்றுக் கொள்ளும் கல்வியறிவை விட வாழ்க்கையனுபவங்களால் பெற்றுக் கொள்ளும் அறிவு தரும் திறனே விசாலித்து பயன் தரக்கூடியது.

அன்று ஆசிரியர்கள்  எம்முள் அறிவைத் திணித்து மனநிறைவு கண்டார்கள். ஆனாலின்று நாங்கள் (இன்றைய ஆசிரியர்கள்) அந்த வழிப்படுத்தலை மேற்கொள்ளக் கூடாதவராய் தடைப்பட்டு நிற்கின்றோம்.  

கற்பித்தல் என்பது போதித்தலல்ல வழிப்படுத்தல் எனும் தத்துவத்தை நவீனத்துவத்துடன் சுருங்கிக் காணப்படும் உலகம் எமக்கு போதித்து நிற்பதால் கற்பித்தல் வழங்கலும் அதற்கேற்ப மாற்றம் கண்டுள்ளது.

பொதுவாக ஒருநாட்டின் கல்வியமைப்பில் சமூக, பொருளாதார, அரசியல் துறைகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அரசியல் மாற்றங்களால் கல்வி வழங்கும் நடைமுறைகள் அடிக்கடி புனரமைக்கப்படுவது தவிர்க்க முடியாத தொன்றாகக் காணப்படுகின்றது. காலத்துக்கு காலம் உலகமயமாக்கலின் விளைவும் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் இவ்வாறான மாற்றங்களை உள்வாங்குவது அத்தியாவசியமாகவே உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை கல்வி வழங்கல் ஐக்கிய இராச்சியத்தின் சுவட்டிலேயே பதிக்கப்படுகின்றது.

இன்றைய கல்வி வழங்கலானது எம் நாட்டில் தேர்ச்சிமுறைக்கல்வி முறையாக வழங்கப்படுகின்றது. இதன் எதிர்பார்ப்பானது ஒரு பிள்ளை பாடசாலைக் காலத்தில் தான் பெறும் கல்வியறிவு, அனுபவத்தை தனது வாழ்க்கை காலம் முழுவதும் பிரயோகிக்க வேண்டுமென்பதே!

எம் நாட்டைப் பொறுத்தவரை கல்வியறிவைப் பெற்றுள்ளோர் தொகை 98% ஆகக் காணப்படுவது ஓர் ஆரோக்கிய சமூகத்திற்கான தொடக்கவுரையாகக் கருதலாம்.

அந்த தொடக்கவுரை பற்றிய திருப்தியான மனநிலையுடன் ,என் பாடசாலை தந்த அனுபவங்களுடன் பயணித்தவாறு என் தொழில் சார் பார்வையை செலுத்துகின்றேனிப்போது . .......

அதன் வெட்டுமுகப்பார்வையில் ஆசிரியர்கள் பொதுவாக எதிர்நோக்கும் சவால்களே பதிவாகின்றன.

கல்விக்கான நோக்கங்கள், வழங்கல் பற்றிய முன்னாயத்தங்கள் யாவும் மிகச்சிறப்பாகவே அரசால் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் சிக்கல் ஏற்படுவது அதனை வழிப்படுத்தும் போதே

மாணவர்கள் விரிந்த சூழல் அனுபவங்கள், தேடல், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றுடன் பாடசாலை வருகின்றார்கள். இவர்களுக்கேற்ற ஆற்றலை வழங்காத போது அவர்கள் கல்வி மீது அசிரத்தையும், கற்பிப்போன் மீது விருப்பமின்மையையும் வெளிப்படுத்தி கற்றலின் இலக்கிலிருந்து விலகிப் போகின்றனர். இவ்வாறான மனநிலையில் மாணவர்களை அணுகுவதென்பது ஆசிரியர்களுக்கான சவாலாகும்.

"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்"

எனப் புனிதப் படுத்தப்பட்ட ஆசான் கேலிப்படுத்தப்படும் மலினம் ஒருசிலரின் நடவடிக்கைகளால் கல்வித்துறையில் பொதுவாகவே காணப்படுகின்றது....

அன்று நாங்கள் கற்கும் போது எமக்கும் ஆசிரியருக்குமிடையில் நீண்ட இடைவெளி காணப்பட்டது. ஆனால் இன்றோ அந்த இடைவெளியை நாங்கள் இயன்றளவு சுருக்கி விட்டோம். மாணவர்கள் தோழமையுடன் எம்மை நெருங்கி தமக்குத் தேவையான அறிவை , திறனை அள்ளிக் கொள்ள நாங்கள் பாதையமைத்து கொடுத்துள்ளோம்!

ஒழுக்கத்திலிருந்து இடறும் ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர பிரம்பு மறந்து போகக் கூடிய இந் நாளில் அன்பைக் குலைத்தே நாம் கல்வியூட்ட முயற்சிப்பதால் பல மாணவர்களின் சிந்தையைத் தொட்டு எம்மாலும் கல்வியை வழங்க முடிகின்றமை பெரும் பாக்கியமே!

இன்று எம்மைப் பொறுத்தவரையில் கற்பித்தலில் நாம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று பெரும்பாலான மாணவர்களின் சுயகற்றல் ஆர்வம் பூச்சியநிலையைத் தொட்டு நிற்பதே! கற்பிக்கும் விடயங்கள் அவர்கள் உள்வாங்கும் போது மாத்திரமே ஞாபகநிலையைத் தொட்டு நிற்கின்றது. மறுநாள் அவை பற்றிய வினாக்களை எழுப்பும் போது அப்பாவிகளாய் "திருதிரு" வென முழிப்பதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய முடிவதில்லை. இந்த இயலாமைக்குக் காரணம் அவர்களின் சுயகற்றல் இன்மையும், போதிய பயிற்சியின்மையுமாகும் !

தமது கனவுகளை பிள்ளைகள் மீது சுமத்தி விட்டு அவர்களின் நகர்வுகளுக்கான பாதையை செப்பனிட்டு கொடுக்க காத்திருக்கும் பெற்றோரின் எதிர்பார்ப்பை நசுக்கும் இந்த இளஞ்சமுதாயம் தோல்விகளின் விளிம்பிலிருந்து தம் வரலாற்றையெழுத முயற்சிப்பது வேதனையே!

இன்றைய கல்விச் சூழலில் நாங்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினை "தனியார் கல்வி நிறுவனங்கள்" ஆகும்....பாடசாலையில் ஏனோ தானோ வென்று கற்பிக்கும் பலர் இந்த தனியார் நிறுவனக் கல்வியில் மிகக் கரிசனத்துடன் செயல்வீரர்களாகத் தம்மை இனங்காட்ட முனைவதை நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்..மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கேற்ற கல்வியூட்டலை ரியூஷன் ஆசிரியர்கள் வழங்கினால் அது சேவையாக எமக்கும் பயன் தரும்..ஆனால் இந்த நிறுவனங்களில் கடைப் பொருட்களைப் போல் மாணவர்கள் நிரப்பப்பட்டு தலையாட்டும் கிளிப்பிள்ளைகளாக தம்மை உருமாற்றுகின்றனர். நன்கு கற்கும் பிள்ளைக்கு தனியார் நிறுவன வழிகாட்டல் பேருதவியாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந் நிறுவனங்களில் தம் பெரும் பொழுதுகளைக் கழித்து விட்டு வெறும் பூச்சியமாக வகுப்பறைக்குள் நுழையும் மாணவர்கள் வகுப்பில் கற்கும் பாடத்தையும் கவனிக்காது தவணைப்பரீட்சைகளில் புள்ளிகளைக் "கோட்டை விடுபவர்களாக மாறுவதை நினைத்தால் கவலை நெஞ்சையடைக்கின்றது.


மேலும் இந்த மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் வருகை தராத சந்தர்ப்பங்களில் தாம் ஏற்கனவே கற்ற பாடங்களை மீட்டல் செய்யும் பண்பும் மிகக் குறைவாகவேயுள்ளது. அந்நேரங்களில் தாமாகவே அதி "சுதந்திரத்தை " கைப்பற்றிக் கொண்டு பெரும் சப்தத்துடன் வகுப்பறையைச் சந்தையாக மாற்றிக் கொண்டு பிற வகுப்பு மாணவர்களின் கற்றலையும் குழப்பும் வன்முறையாளர்களாக தம்முள் பதவி சூடிக் கொண்டு ஆசிரியர்களிடம் தண்டனை பெறும் நிலையும் இன்றைய கால கட்டத்தில் அதிகமாகவே காணப்படுகின்றது..

இன்று தகவல் தொழினுட்பம் அதி வேகமாக நம் வாழ்வை பிணைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் பிற கலாசார தாக்கங்களும் பண்பாடுகளும் இம் மாணவர்களின் மொழி, வாழ்க்கை நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. பாடசாலைகளில் களவாக கைபேசி பாவிப்பதும், இணையங்களினூடாக பெற்றுக் கொள்ளும் பாலியல் சார் விடயங்களை நண்பர்களினூடாக பரிமாறிக் கொள்வதும், அதன் தூண்டுதலால் அப் பாதை வழியில் தாம் இயங்க முயற்சிப்பதும் இன்று மாணவர்களை நெறிபிறழ வைத்துள்ளது..

மாணவர்கள் பெரிதும் விரும்பும் விடயங்கள் பாலியல் சார் விடயங்கள். இவற்றினை நண்பர்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளும் போது வழி தவறிவிடப்படுகின்றனர். இதனால் பாலியல்சார் விடயங்கள் பாடத்திட்டத்தில் உட்புகுத்தப்பட்டு விஞ்ஞான ஆசிரியர்களாகிய எமக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது....இருந்த போதிலும் வளர்ந்த ஆண் மாணவர்களுக்கு பெண் ஆசிரியர்களாகிய எம்மால் பாலியல் விடயங்களைப் போதிப்பது சற்று சங்கடம் தருவதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் மறைமுகமாக சில வழிப்படுத்தல்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். இதுவும் எமக்கு சவாலே!

"சென்ற வருடம் தரம் 11 கற்கும் மாணவனிடமிருந்து "போன் ஷிப்" ஒன்று கைப்பற்றப்பட்டது. அதனை கைபேசியிலிட்டு பரீட்சித்த போது அதில் நிறைந்திருந்தவை "நீலப் படங்களே". அம் மாணவன் இன்னுமொரு மாணவனிடம் அதனைப் பார்வையிடக் கொடுக்கும் போதே பிடிபட்டான். விசாரணை தொடர்ந்த போது, அவன் சொன்ன பதில் தனது தந்தையார் அதனை அடிக்கடி பார்ப்பதாகவும், அதனாலேயே அதனை தான் தந்தையின் கைபேசியிலிருந்து களவாகக் கழற்றி பாடசாலைக்குக் கொண்டு வந்ததாகவும் வாக்களித்தான். அவனைச் சீர்படுத்த வேண்டிய தாயாரோ வெளிநாட்டில் மாடாய் உழைக்க, தந்தையோ பொறுப்பற்றுத் திரிய .........

வழிப்படுத்த வேண்டிய பிள்ளையோ சீர்கெட்டவனாய் சமூகத்துள் நுழைய முயற்சிக்கின்றான்.

யாரைத் தண்டிப்பது பெற்றோரையா......பிள்ளையையா !

ஆசிரியர்கள் வெறும் அறிவு போதிப்பவர்களலல்ல.....

ஆலோசகர்களாகவும் வகிபாகம் காட்ட வேண்டிய நிலையிலுள்ளார்கள்.

ஏனெனில் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் வெளிப்படுத்த விரும்பாத பல பிரச்சினைகளை எம்முடன் பரிமாறி தீர்வைத் தேடி நாடி துடித்து நிற்கின்றனர்..இவர்களை வழிப்படுத்துவது எம் கடமை. சேவை. இக் கடமையைப் புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களால் அந்நியப்படுத்தப்படுகின்றார்கள் இது வரலாறு.

இன்று பாடசாலைகளில் நாங்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினையே மாணவ- மாணவியர்களுக்கிடையிலான காதல் தொடர்பு...........கட்டிளமைப் பருவத்தினரிடையே "இலிங்க ஓமோன்" செயற்பாட்டினால் ஏற்படக்கூடிய இயல்பான நிகழ்வொன்றே இந்தக் காதல். விஞ்ஞானம் போதித்து நிற்கும் உண்மையிது! எதிர்ப்பாலியல் கவர்ச்சி இயல்பாகவே மனித சமூகத்தை ஊடுறுவிக் காணப்படும் வேர். இதனை வலுக்கட்டாயமாக அறுத்தெடுக்கும் போதே சமூகம் அங்கீகரிக்காத பல தவறுகள் மேடையேற்றப்படுகின்றன.


ஆனால் இந்த உண்மையை மறுதலிக்கும் சில ஆசிரியர்கள் இவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்து "கூச்சல்" போட்டு அம்பலப்படுத்தும் போது இம் மாணவர்களின் சிறு தவறுகள் வழிப்படுத்தலின்றி பெரிதாக்கப்பட்டு பறைசாட்டப்படுகின்றது. இதனால் இவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல தவறான பாதைக்குள் தம்மை வீம்போடு நுழைத்துக் கொள்ளத் தூண்டப்படுகின்றார். தற்கொலைகளும், தவறான வாழ்க்கைத் தெரிவுகளும் இதன் விளைவுகளாக இன்றும் சமுகத்தை எட்டிப்பார்க்கின்றன..

பள்ளிக் காதலும் காலைப் பனியும் நிலையற்றது. ஒருவருடைய ஏதோவொரு கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அவருடன் விசேட தொடர்புகளை பேணும் போது இயற்கையாகவே அன்பு உருவாகும். அந்த அன்பே பிறர் பார்வையில் "காதலாக" பெயர் சூடிக் கொள்கின்றது. ஆனாலிந்த அன்பு பாடசாலைப்பருவத்தில் பெரும்பாலும் வெறும் இளமைக் கவர்ச்சியாகவே தன்னை இனங்காட்ட முனைகின்றது, தம் உணர்வுகளை கடிதங்களினூடாகப் பரிமாறிய இந்த இளசுகள் பிறரின் தவறான பார்வை, வழிப்படுத்தலின்மையால் முத்தம் வரை தம்மையிழந்து நிற்கின்றனர். பள்ளிப்பருவத்தில் முத்தம் தந்த ஈர்ப்பால் மொத்தமாக தம்மையிழந்து வாழ்வை பறிகொடுத்த பலர் இன்றும் இந்த சமுகத்தின் "விமர்சனச் சகதிக்குள்" வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆசான்களைக் கனம் பண்ணாமை, பாடசாலைச் சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற வன்முறையாளர்களையும் பாடசாலைகள் தான் உருவாக்குின்றன என்பதும் வேதனையான வெட்கப்பட வேண்டிய உண்மையாகும்.

இயந்திரமயமான இவ்வுலக வாழ்வில் போராட பல மணித்தியாலயங்களைச் செலவிட வேண்டிய நிலையில் , ஆசிரியர்கள் தம் போராட் வாழ்விலிருந்து விலகி மிக அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கரிசனத்துடன் செயற்படும் போதே கல்வியின் நோக்கம் நிறைவேற்றப்பட முடியும்...

சிறந்த கல்விப் பாதையொன்றைச் செதுக்க ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நிர்வாகம், அதிகாரிகள், சமூகம், அரசு ஆகிய மானுட வளங்கள் ஓரணியில் திரள வேண்டும். ஓர் புள்ளியில் அவர்கள் சிந்தனை மையப்படுத்தப்பட வேண்டும்..

ஆசிரியர்த் தொழில் ஓர் தொழிலல்ல சேவை........கால் இலட்சத்தை தொட்டு நிற்கும் எமது ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் 20 ம் திகதி பெற்றுக் கொள்ளும் போது அந்தக் காசோலை எம் மனசாட்சியைத் தொட்டுப்பார்க்க வேண்டும்..மக்களால் சேகரிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து அரசு தரும் இந்தச் சம்பளப் பணத்திற்காக சமூகம் எதிர்பார்க்கும் நற் பிரஜைகளை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குகின்றோமா எனும் கேள்வியே ஆசிரியர் மனங்களைத் தட்டியெழுப்பும் வினாவாகும்..........!

நாங்கள் ஓர் தொழில் பார்க்கும் தகைமைக்குப் பொருத்தமாக கற்றவர்கள்.  பயிற்சி பெற்றவர்கள். ஆனால் எங்கள் கற்றல் பயணம் குறுகியதல்ல.. முடிவுறக்கூடாது..முடிவிலியாக தொடர வேண்டும். ஏனெனில் இவ்வுலகின் புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு அறிவையும் மாணவர்களுக்கு ஆற்றலாக வழங்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு........

அதற்கேற்ப எங்களை நாங்கள் புதுப்பிக்க வேண்டும்.


என்னைப் பொறுத்தவரை என் ஆசிரியர்த் தொழிலில் நான் மானசீகமாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, என்னை நம்பி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்  மாணவ சமுதாயத்திற்குரிய வழிகாட்டலை என் விஞ்ஞானப் பாடத்தினூடாக வழங்கிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையே!  என் பொறுப்புணர்ச்சி காரணமாக என்னுடன் கடமையாற்றுபவர்கள் சிலர் வெளிப்படுத்தும் தடைகளைக் கூடத் தகர்த்தெறிந்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளோடு தடையின்றி என் பயணத்தைத் தொடர்கின்றேன். அவற்றின் வெற்றி வாசம் மேலும் என்னை உற்சாகப்படுத்துகின்றது.......

நான் ஆசிரியப் பயிற்சி பெறும் காலத்தில் என் பயிற்சிப் பாடங்கள் சகலவற்றிலும் பெற்ற அதி திறமை A சித்திகள், என் மொழி வள மேம்பாட்டுக்காக மஹரகம கல்வி நிறுவனம் நடத்திய ALIC பாடநெறி சிங்கள, ஆங்கிலப் பரீட்சைகளில் பெற்ற A திறமைச்சித்திகள், கல்விமாணிப் பட்டப் பயிற்சி நெறி தெரிவுப் பரீட்சையில் வவுனியா நிலையம் சார்பில் பெற்ற முதலிடம் , வடமத்திய மாகாணத்தின் தமிழ்மூல சிறந்த ஆசிரியையாக 2005ம் ஆண்டு நான் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டமை போன்ற என் ஒவ்வொரு வெற்றியும்  புதுப்பிக்கப்பட்டவாறே என்னை இன்னும் இன்னும் ஊக்குவிக்கின்றது. என்னை நன்கறிந்த நட்புக்கள், பெற்றோர், சகோதரிகள், உறவுகள் என விரியும் என்னைச் சூழவுள்ளோரின் அன்பும் ஆதரவும் இந்த வெற்றியின் ரகஸியங்களில் படிந்து கிடக்கும் வைரத்துளிகள்.

ஊக்கமளிக்காத பாடசாலை நிர்வாகம் கூட என் உந்து சக்தியை மிகைப்படுத்தி சாதனைகளின் முகடுகளை தொடச் செய்கின்றது.பழைய அதிபரின் முகாமைத்துவப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றியமைக்காக மறைமுகப் பழிவாங்கலைத் தூவி நிற்கும் நிர்வாகத்தின் அலட்சியம் கூட என் நகர்வைத் தடுக்கவில்லை..என் திறமையை சிதைக்கவில்லை. இன்று நான் என்னையே பட்டை தீட்ட இவர்கள் எல்லோரும் தம்மையுமறியாமல் காரணமாகி விட்டார்கள். அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை கல்வி நிர்வாகப் பரீட்சையில் 183 புள்ளிகள் பெற்று எனது பாடசாலையில் மட்டுமல்ல எனது பிரதேசத்திலும் நான் தலை நிமிர்ந்து நிற்க "இந்த ஒடுக்கலும் " ஓர் காரணமே!

என் மீது வீசப்படும் கற்களைக் கூட மாலையாக்கும் பொறுமையும், இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும், முயற்சியும் என்னிடம் அதிகமாகவேயுள்ளது. அந்த தைரியமூட்டலில் நான் பயணிக்கும் பாதையெல்லாம் என் சோகங்களையும் மறைத்து வசந்தத்தின் அரவணைப்புடன் என்னையும் அழைத்துச் செல்லட்டும்.




- Ms. Jancy Caffoor -









2 comments:

  1. மேலும் மேலும் வளர வாழ்த்துகள் ஜான்சி............. மாணவர்களின் மனநிலையை நீங்கள் ஆராய்ந்த விதம அருமை... உங்கள் வளர்ச்சி ஆசிரியருக்கு பெருமை

    ReplyDelete
  2. நன்றி உதயா ..............

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!