About Me

2012/07/29

சர்வதேச தொலைத்தொடர்பு தினம்


மே 17
---------
விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி காரணமாக வியக்கத்தக்க முறையில் தொலைத் தொடர்பு சாதனத்துறையின்று வளர்ச்சியடைந்துள்ளது. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தொலைத்தொடர்புத் துறையும் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் சைகை, பின்னர் புறா விடு தூது, முரசறைதல் போன்ற பல்வேறு முறைகளால் வெளிப்படுத்தப்பட்ட இத்தொடர்பாடல் கடிதம், தந்தி, மின்னஞ்சல் மூலமாகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நவீன தொடர்பாடல் முறையானது 1450 களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வுடன் ஆரம்பித்தது. பத்திரிகை வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்பாடலை "கிரஹம்பெல்" தொலைபேசி அலைவரிசைக்குள் நகர்த்தினார். தந்தி முறையை மேம்படுத்த கிரஹம்பெல் மேற்கொண்ட முயற்சி தொலைபேசி  பயன்பாட்டுக்கு வித்திட்டது . தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைக்க ,கிரகம்பெல் மின்சாரம் மூலம் ஒலியைக் கடத்துவது தொடர்பான யோசனையை முன்வைத்தார். 1875 ஆம் ஆண்டு ஒரே சமயத்தில் 2 சமிக்ஞ தந்தி வயர் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு அரசின் அனுமதி கிடைத்ததுடன் 1876 மார்ச் 6 ஆம் திகதி கிரகம்பெல் ஒலியை தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.

கம்பியில்லாத் தந்தியறிமுகத்தைத் தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி கையடக்க தொலைபேசி, 3G கைபேசி), டெலக்ஸ், மின்நகல், மின்னஞ்சல், இணையம் , செய்மதித் தொடர்புகள் என்பன நவீன தொலைத் தொடர்பு சேவைக்குள் உள்வாங்கப்பட்டன.

தொழினுட்ப வளர்ச்சிக்குள் இலத்திரனியல் நுட்பங்களைப் புகுத்தி தொலைபேசியை இலத்திரனியலுக்குள் வசப்படுத்தியவர்கள் ஜப்பானியராவார். இன்று மக்களிடையே செல்லிடத் தொலைபேசிப் பாவனை ஏறுமுகம் காட்டி நிற்கின்றது.

அதுமாத்திரமின்றி தொழினுட்பத் தொலைத்தொடர்பு வளர்ச்சியினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாக இணையம் கருதப்படுகின்றது. நாமுட்புகுத்தும் தரவுகளை எமக்குத் தகவலாகச் சேமித்து மீளத் தரக்கூடிய கணனிப்பாவனை இணையச் சேவையில் தொடர்புபட்டுள்ளதால் வலைப்பின்னல்கள் மூலம் பல நாட்டு மக்கள் தமக்கிடையே தகவல் பரிமாற்றங்களை இலகுவாகவும், வினைத்திறனுடனும் , நட்புடனும் பேணி வருகின்றனர்.

ஆரம்பகாலத்தில் இந்த இணையச்சேவை ஆங்கில மொழியிலான வல்லரசின் இராணுவத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  எனினும் பின்னர் உலகமயமாக்கலின் பன்முகப்படுத்தலின் கீழ் தொலைத் தொடர்பு சாதனமாக மாற்றம் கண்டது. இன்று மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளீயீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை என்பன மூலம் நவீன தொடர்பாடல் துறை எமக்குச் சேவையளித்து வருகின்றது.

தொடர்பாடல், தகவல் பரிமாறல் எனும் இருவகையினாலான இணைய தகவற்றுறையின்  சேவை மக்களின் அன்றாட வாழ்விற்கு முதுகெலும்பாய்த் திகழ்கின்றது.

அதேபோல் நவீன தொலைத் தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பைச் செய்கின்றன. மேற்குல நாடுகளே இதனை வினைத்திறனுடன் அதிகளவில் பயன்படுத்துகின்றன. இந்நாடுகளில் வாகனங்களில் "நெவிகேடர்" பொருத்தப்பட்டுள்ளன. இவை பாதை வழிகாட்டியாகும். நாம் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணையுடன் குரல் சமிக்ஞயாக எமக்கது பாதையை வழிகாட்டிச் செல்லும்.

எமது அன்றாட வாழ்வோடு பிணைந்துள்ள இத் தொடர்பாடல்கள் மூலம் மக்களின் கலை, வர்த்தகம், பொழுதுபோக்கு மேம்படுத்தப்படுகின்றது. அதுமாத்திரமுன்றி அனர்த்தவேளைகளில் எமதுயிர்களைப் பாதுகாக்கவும் இது உதவுகின்றது.

தொலைத்தொடர்பானது  தொழினுட்பத்தின் வளர்ச்சியோடு போஷிக்கப்பட்டு  வருவதால் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கும் ஒப்பற்ற சாதனமாகவும் விளங்குகின்றது.

1865 ல் உருவான சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் குரலாக (International Telecommunication Union)  உலக தொலைத் தொடர்பு தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 17ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன் வளர்ச்சியினால் மறுபக்கம் நாடுகளை வேவு பார்த்தல், கலாச்சார சீரழிவு, முரண்பாடுகளும் பகைமைகளும் தோன்றுதல் போன்ற பிரதிகூலங்களும் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் இன்றைய நவீன வாழ்வில் இத் தொலைத்தொடர்புச் சேவையின் பங்களிப்பு இன்றியமையாததொன்றாகும்.

2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!