About Me

2012/07/27

நண்பர்


ஒக்டோபர் 01 ....... 

என் வாழ்வில் மறக்க முடியாத நாள். அன்றுதான் நான் ஆசிரியர்த் தொழிலுக்குள் உள்வாங்கப்பட்ட நாள். பல வருடங்களின் பின்னர் 2010 அதே தினத்தில் தான் முகநூல் பக்கத்துக்குள்ளும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் . அந்த நுழைவு கூட எதிர்பாராமல் கிடைத்தவொன்று !

முகநூலின் ஏற்ற இறக்கங்கள், சாதக பாதகங்கள் எதுவுமே அறிந்திராத, அனுபவமில்லாத நுழைவு என்பதால் இணைக்கப்பட்ட நண்பர்கள் மானசீகமாக என்னைத் தொட்டார்கள். அவர்களின் பதிவுகளை ஆச்சரியத்தோடு விழி பருகினேன்.

முகநூல் புதிய அனுபவம். அழகான பயணம். இலக்கிய வார்ப்புக்களுக்கு தாராளமாய் மடி தரும் களம். பல முகங்கள் நட்பு பட்டியலை மானசீகமாய் நிறைத்து நிற்க, என் பதிவுகளுக்கான அவர்களின் எண்ணப்பரிமாற்றங்கள் உற்சாகமாக என்னுள் பரவி மனதை இதப்படுத்தியது! ரசித்தேன் என் பயணப்பாதையில் கிடந்த பசுமைகளை !

இருந்தும் மறுபுறம்................. 

மிக அவதானமாகவே ஒவ்வொரு நகர்வுகளையும் பதிக்க வேண்டுமென்ற எச்சரிக்கையுணர்வு என் பயணத்திற்கு வழிகாட்டியாய் நின்றது. எல்லோரும் நண்பர்களல்லர். நண்பர்கள் வடிவில் வம்பர்களும் உள் நுழையலாம் என்பதற்காக நண்பர்களை மிக அவதானமாகவே தெரிவுசெய்தேன்.

என் பதிவுகளுக்கு விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தாராளமாக வழங்கி ஊக்குவித்த நல்ல நண்பர். வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டுமென்ற நினைப்பில் போராடும் இளைஞர். என்னை விட வயதில் இளையவர். இருந்தும் புற வேறுபாடுகளைக் களைந்தெறிந்து விட்டு தன்னகத்துள் நேசம் நிரப்பி என்னுள் நல்ல நண்பராக முகங்காட்டியவர் துன்பங்களைப் பகிர்ந்தோம். இன்பங்களை ரசித்தோம். பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி அலைந்தோம். மொத்தத்தில் அன்பு தவிர்ந்த வேறெந்த எதிர்பார்ப்புமில்லாத பிணைப்பு எமக்கு சொந்தமானது.

இன்ஷா அல்லாஹ்..................!

என் ஆரம்ப கால நகர்வுகளில் நட்புள்ளங்கள் என் பதிவுகளுக்கு தந்த ஊக்குவிப்புக்கள் தான் இன்றும் என்னை  சிந்தனைக்குள் குவியப்படுத்தி நிறைய எழுத வைத்துள்ளது. என்னாலும் எழுதமுடியும் எனும் நம்பிக்கையை என்னுள் வார்த்து நிற்கின்றது. ...இன்று முகநூலில் எனக்கென்றும் சிறு நட்பு வட்டங்களை உருவாக்க என் எழுத்துப் பிரவேசம் களம் தந்திருப்பதை நான் மறுப்பதற்கில்லை. நன்றியோடு என் நண்பர்களை நினைவுகூறுகின்றேன்

நம் வாழ்வில் நடைபெறும் எந்த முதல் சம்பவங்களும் மறக்கப்பட முடியாதவை. அவை நெஞ்சக்கல்வெட்டில் பதிக்கப்பட்டு நம் ஆயுள் முழுதும் நடமாடக்கூடியவை . அதனை அன்றுணர்ந்ததால் இன்றிந்தப் பதிவும் எனக்குச் சொந்தமாகிக் கிடக்கின்றது.........................

எல்லாம் நேற்று நடந்தது போல நாட்கள் எவ்வளவு விரைவாக நகர்கின்றன. இந்த நகர்வில் எத்தனை அனுபவங்களை உள்வாங்கி எம் நிதர்சன வாழ்வில் பதிக்கின்றோம். பல புதிய நண்பர்களின் சேர்க்கை. பழைய நட்புக்களின் பிரிதல், முரண்பாடுகள், சீண்டல்கள்,  நேசப்பகிர்வுகள், முகநூல் ராஜ்ஜியத்திலும் இவை தாராளமாக இருக்கின்றன. ஏனெனில் நாம் நடமாடிக் கொண்டிருப்பது உயிர்ப்புள்ள உலகம்.







2 comments:

  1. Thanks for honoring me Janzy always its nice to read you writings

    ReplyDelete
    Replies
    1. உங்க நட்பு தந்த உணர்வோட்டமிது றஸீன்......நன்றி !

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!