About Me

2012/08/01

பெண் சாரணிய சில நினைவலைகள்


எல்லோரிடமும் வாழ்க்கை பற்றிய கற்பனை மிக அழகாகத்தான் இருக்கின்றது. ஆனால் நாம் யதார்த்தங்களைச் சந்திக்கும் போதுதான் அது பற்றிய எண்ணங்களும், அனுபவங்களும்  நம் மூச்சுக்காற்றுக்குள் விஷம் கலக்கின்றது.. நாம் சந்திக்கும் துன்பங்களின் கனாதியில், கிடைக்கின்ற சின்னச் சின்னச்  சந்தோஷங்களையும் தொலைத்து விடுகின்றோம்.

ஆனால் மாணவப் பருவமென்பது துன்பங்களை நம் நினைவில் நிலைநிறுத்தாத பருவமாகையால் கவலைகளற்ற சிட்டுக்களாக நாம் நம் கல்லூரி வாழ்க்கையில் ஒன்றித்து அதன் இனிமையான ஞாபகங்களை மறக்காதவர்களாய் மாறி விடுகின்றோம்.

அந்தக் கல்லூரி வாழ்க்கையில் நான் பெற்றுக் கொண்ட அழகிய அனுபவங்களிலொன்றுதான்  பெண்சாரணியப் பயிற்சி...........

.என் கல்வியின் ஆரம்ப அத்திவாரம் யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயத்தில் இடப்பட்டாலும் கூட, நான்காம் வகுப்பில் என்னை உள்வாங்கிக் கொண்ட பாடசாலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி.............தான்! அப்பொழுது என் தந்தை நல்லூர் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தமையால் என்னை அழைத்துச் செல்லும் வசதிக்கேற்ப நானும் கல்விக்காக அங்கே மாற்றப்பட்டேன். தினமும் தந்தையுடன் சைக்கிள் சவாரி...சிறு பிள்ளைப் பருவத்தில் நானிருந்தமையால் என்னை எனது லுமாலா லேடிஸ் சைக்கிளில் தனியாக அனுப்ப என் பெற்றோர் தயங்கியதால் தினமும் நான் என் தந்தையின் துவிச்சக்கர வண்டிக்குப் பாரமானேன்.

நானிணைந்த அந்த நான்காம் வகுப்பு..........!

பெரிதாக உலகத்தை அறிந்து கொள்ளாத, அக்கறைப்படாத சிறு வயதை உள்வாங்கிய வகுப்பு நிலை. விளையாட்டும், படிப்புமாக பாடசாலை நாட்கள் நகர்ந்தன. வகுப்பாசிரியை திருமதி. நடேசுபிள்ளை ரீச்சர். பெரிய குங்குமப் பொட்டும், கொண்டையும், சிறு நட்சத்திர மூக்குத்தியும் அவருக்கே உரிய அழகான அம்சங்கள். எங்களுடன் ரொம்ப அன்பாக இருந்தார். இன்னும் என் ரீச்சரின் உருவம் கண்ணுக்குள் நிற்கின்றது. அப்பொழுதே அவருக்கு வயது ஐம்பதைத் தொட்டிருக்கும்.

அப்பொழுதுதான் பாடசாலையில் பெண்சாரணியப் பயிற்சிக்காக எம்மைத் தெரிவு செய்தார்கள். 

சாரணியம் என்றால் என்ன? 
அதன் இலக்குகள் என்ன? 

எனும் குறிப்புக்கள் எதுவுமின்றி ஏதோ ஆசையினால் நண்பிகள் இணைவதால் நானும் இணைந்தேன்..


அதனை "ப்ரவுனிஸ்" என்றழைத்தார்கள். வித்தியாசமான யூனிபார்ம், சாரணிய சட்டதிட்டங்களுக்கேற்ப தைத்து, ப்ரவுண் டை கட்டி, சலூட் அடிக்கும் விரல்களைப் போன்ற தங்க நிறச் சின்னம் அணிந்து இரட்டை ஜடை கட்டி அந்த சாரணியப் பயிற்சிக்கும், பாசறைக்கும்  கலந்து கொள்வது எனக்கு நாளடைவில் பிடித்துப் போனது. இரு நேரப் பாடசாலையென்பதால் பாடசாலை பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவடையும். அதன் பிறகு கிழமையில் இரண்டு நாள் பயிற்சி 5 மணி வரை தொடர்ந்தது. நாங்கள் மாலைநேரங்களில் உற்சாகமாகக் கலந்து கொண்டோம். நிறையப் பாட்டுப்பாடி ஆடி மகிழ்ந்ததும் இன்னும் என் மனக்கண்ணில் குவிந்து விரிகின்றது..

"பாடுவோம் எல்லோரும்
பாடுவோம் எல்லோரும்
பலவித துன்பங்கள்
பனி போல மறைந்திட
பாடுவோம் எல்லோரும்"

இதுதான் நாங்கள் முதன்முதலாகப் பாடிய பாடல். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப் பாடல் படித்துப் பயிற்சி பெற்றோம்.


இது வேறொரு பாடல் :-

"வாத்தியக் கோஷ்டி எங்கள் வாத்தியக் கோஷ்டி
வேணி பாடுகிறாள் சும்மா வெளுத்துக் கட்டுகின்றாள்
தக்கிடத் தக்கிடத் தோம்
தக்கிடக் தக்கிடத் தோம்......................."

இவ்வாறு இந்தப் பாடல் தொடரும்.

"அண்ணன்ர சைக்கிளுக்கு பெல் இல்லை
பிரேக் இல்லை "......................

இது இன்னுமொரு பாடல்

இவ்வாறு தொடரும் பல பாடலை நாங்கள் ரசித்துப் பாடிய ஞாபகம்  நெஞ்சுக்குள் வருகின்றது....

"சின்னத்தம்பி சின்னத்தம்பி
நித்திரையோ....நித்திரையோ
மணியடிக்கிறது மணியடிக்கிறது
எழும்புங்கோ....எழும்புங்கோ"

இந்தப் பாடல் அடிக்கடி நான் முணுமுணுக்கும் பாடல்....இவ்வாறு பல பாடல்களை மனம் இப்பொழுதும் தொட்டு ரசிக்கின்றது.



சமூகத்தில் நற்பிரஜையாக இணைந்து கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் பயிற்சிக்களமாக சாரணியப் பயிற்சி செயற்படுகின்றது. நான் சாரணியத்தில் கற்றுக் கொண்ட பல விடயங்கள் என் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து என் மனப்பண்புகளாக சேமிக்கப்பட்டுள்ளன. இன்றும் அது என் வாழ்வுடன் தொடர்ந்த நிலையில்  என்னைத்  தன் செல்வாக்குக்குள் உள்ளடக்கி வருகின்றது. இதனை என்னால்  உணரக்கூடியதாக உள்ளது.

என் பெண் சாரணிய மாணவப் பருவத்தில் பயிற்சிப் பாசறைக்காக  பல தடவைகள் யாழ்ப்பாண பழைய பூங்காவில் உள்ள திடலில் மாணவர் ஒன்றுகூடலில் ஈடுபட்டோம். குழுக்களாகப் பிரிந்து உணவுக்காக  "சன்விச்' செய்ததும், நாங்கள் பெற்ற பயிற்சியைப் பிரயோகித்து அனுபவித்ததும், முகாம் அமைத்ததும், ஆடிப் பாடியதும் என்னால் மறக்க முடியாதவை...

ஆறாம் வகுப்பிற்கு வந்ததும் நாங்களும் சற்றுப் பெரியவர்களானோம். பெண் சாரணியர் என அழைக்கப்பட்டோம். நீல நிற டையும், மூவித இலைச் சின்னமும் எங்கள் அடையாளங்களாகின். நான் க.பொ.த சா/த பரீட்சை (தரம் 11) எழுதும் வரை பெண் சாரணியாகச் செயற்பட்டதும், சாரணியத் தந்தை "பேடன் பவல்" அவர்களின் பிறந்த நாளில் பாடசாலைகளூடாக ஒன்று கூடுவதும் , விழாக்களில் கலந்து கொள்வதும் மறக்க முடியாததொன்று.

சாதி, மத, பேத வேறுபாடின்றி நாங்கள் சகலரும் ஒன்றாக உணர்வில் ஒன்றித்திருந்தோம். நல்ல மனப்பான்மையுடன் சமூகத்தை நோக்கும் திறன் எமக்குள் இயல்பானது. உயர்தர படிப்புக்குள் நுழைந்ததும் படிப்பு, புத்தகம் எனும் வேறொரு உலகின் சங்கமிப்புக்களால்  என் சாரணியத்துவ செயற்பாடுகளுக்கு பாடசாலையில் முற்றுப்புள்ளியிடப்பட்டது.

நாட்கள் நகர்ந்தன. ஆசிரியர்த் தொழிலுக்குள் உள்வாங்கப்பட்டேன். புதிய பாடசாலை, புதிய இடம்..., புதிய மொழி....என் கடந்த காலம் பகிரப்படாத நிலையில்,.............


 ஒரு நாள் என் பாடசாலை அதிபர் என்னை அழைத்து நடைபெறவுள்ள சாரணியர் பயிற்சி செயலமர்வுக்கு செல்லும்படி கூறினார். பயிற்சி சிங்கள மொழியில் நடைபெறுவதால் தயங்கினேன். ஆனாலும் அவர் பிடிவாதமாக அச்செயலமர்வுக்கு என்னை அனுப்பியதால் என் பெயர் சாரணியப் பயிற்சிக்காக கல்வித்திணைக்களத்தில் பதிவாகியது. அதனைத் தொடர்ந்து பல பயிற்சிகள். ஆரம்பத்திலிருந்த மொழியச்சம் இப்பொழுது நீங்க தொடர்ந்தும் பயிற்சி பெற்றேன். பயிற்சி பெற்று வருகின்றேன்.......

கொழும்பிலிருந்து வருகை தந்த ஜனாதிபதி சாரணியத் தலைவி ஜெஸீமா (அவர்தான் இலங்கையில் பெரியவர்) அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து, சல்யூட் அடித்து உரிய சாரணியப் பதக்கத்தை அவர் எனக்குச் சூட்ட சாரணியத் தலைவியாக நியமனம் பெற்றேன். இது சாரணியத்துவத்தின் முதல் நிலை. இதனை என்னால் மறக்கவும் முடியாது. 

இந் நிகழ்வு அநுராதபுரத்திலுள்ள சம்பத் - கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது. எமது கல்வி நிலைய அதிகாரியொருவர் பெண் சாரணியத் தலைவியாக இருப்பதால் அவர் எமது பிரதேச பாடசாலை மாணவிகளின் பெண் சாரணியத்தினை ஊக்குவிப்பவராகவுள்ளார். இதனால் அடிக்கடி கூட்டங்களும், செயலமர்வுகளும்  எமக்கு கிடைக்கின்றன. எமக்கு பயிற்சிப் பொறுப்பாக நயினா மெடம் உள்ளார். அவருக்கு என்மீது ரொம்ப விருப்பம். வீதியில் சந்திக்கும் போதெல்லாம் எனது சாரணியச் செயற்பாடுகள் தொடர்பாக விசாரிப்பார். அநுராதபுர நகரில் சாரணியப் பயிற்சிக்காக ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ்மொழி மூலப் பாடசாலை எமது பாடசாலையே ஆகும். நானும் எனது சக ஆசிரியை ஒருவரும் இப் பயிற்சியைப் பெறுகின்றோம்.

மாணவியாக யூனிபார்மில் தொடரப்பட்ட எனது சாரணிப்பயிற்சி, இன்று வெள்ளை நிறச் சேலையும், கை முழுவதையும் மறைக்கும் வெள்ளை நிற மேற்சட்டையும், கொண்டையும் என்ற தேசியமாக மாற்றப்பட்டு, நான் மாணவிகளுக்கு வழிகாட்டும் பொறுப்போடு நிற்கின்றேன்.......

அன்று தமிழ் பாடல்களுள் மகிழ்ந்த நான் இன்று சிங்களப்பாடல்களுடன் ஒன்றித்துக் கிடக்கின்றேன். மாணவப் பருவத்திலிருந்த அதே குழந்தைத்தனமான எங்கள் மனங்கள் மாறவில்லை. ஆனால் வயதுதான் கடந்து விட்டன.

ஆகஸ்ட் முதலாம் திகதி உலக சாரணியர் தினம் எனும் ஞாபக அலை நெருடலால் இந்நினைவுகளின்று என் வலைப்பூவுக்குள் தன் கரங்களையசைத்துக் கொண்டிருக்கின்றது.............

சாரணியர் இயக்க வரலாறு
---------------------------------------

1857 .02.22 ந் திகதி பிறந்த சாரணத் தந்தையான "சேர் றொபர்ட் ஸ்டீவன் ஸ்மீத் பேடன் பவல் " என்பவரால் 20 இளைஞர்களுடன் இணைந்து சாரணிய இயக்கம் 1907.07.28ல் ஆரம்பமானது. பெண் சாரணிய இயக்கம் அவரது பாரியார் "ஓபேவா பேடன் பவல்" என்பவரால் 1910 ல் ஆரம்பிக்கப்பட்டது. 1916 ல் குருளைச் சாரணர் இயக்கமும், 1918 ல் ரோவர்ஸ் சாரணர் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டது. சிறுவர்களுக்கான சாரணியர் தொடர்பான நூல் 1908 ஆம் ஆண்டு அவரால் பதிக்கப்பட்டது. பேடன்பவலின் தந்தை அவரது 3 வது வயதில் காலமானதால் பவல் எனும் தந்தையின் பெயர் குடும்பப் பெயரானது.

லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மாநாடும், சாரணியப் பாசறையும் ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை நடைபெற்றது. அதனை மையப்படுத்தியே உலக சாரணர் இயக்கம் கொண்டாடப்படுகின்றது.

வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை , தேசப்பற்று, தைரியம், மனிதாபிமானம் போன்ற பல உயரிய பண்புகளைத் தூண்களாகக் கொண்ட சாரணர் இயக்கத்தின்  தொனிப் பொருள் "எதற்கும் தயாராக இரு " என்பதாகும்.

1910 ஆம் ஆண்டு உலகெங்கும் சாரணியம் பரவத் தொடங்கியது. தற்போது 216 நாடுகளில் சாரணியர் இயக்கங்கள் தொழிற்படுகின்றன. இத்தொகை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளின் தொகையை விட அதிகமாகும். உலக முழுவதும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். 1912 ல் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேடன்பவல் உலகப் பயணமொன்றையும் மேற் கொண்டார். 1921, 1931 ம் ஆண்டுகளில் பேடன்பவல் இலங்கைக்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அந்த முயற்சி இன்று பல நாடுகளில் சாரணர் இயக்கங்களாக விழுது பரப்பியுள்ளது.

1920 ல் பேடன் பவல்  அவர்கள் சாரணர் ஜம்போரி ஒன்றை இங்கிலாந்தில் ஒலிம்பியாவில் ஏற்படுத்தினார். அந்நிகழ்வில் 34 நாட்டு சாரணர் முன்னிலையில் பேடன்பவல் அவர்கள் உலக சாரணர் "பிதாவாக" முடிசூட்டப்பட்டார். இங்கிலாந்து மன்னர் 5 ஆம் ஜோர்ஜ் மன்னராலும் கௌரவிக்கப்பட்டார். அன்றிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ் ஜம்போரி நடைபெறுகின்றது. சாரணிய இயக்கம் உலகமயப் படுத்தப்பட்டதொரு அமைப்பாகும். எனவே இவ் ஜம்போரி பாசறை முக்கியமானவை. உலகின் பல பாகங்களில் இவ் ஒன்று கூடல் பல நாட்டு சாரணியர்களின் இணைவுடன் நடைபெறுகின்றன. இப் பாசறைகளிலேயே சாரணியர்கள் ஒன்றிணைக்கப்படுகின்றனர். டென்மார்க், இங்கிலாந்து, ஹங்கேரி,ஹொலண்ட், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், கிரேக்கம், ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, கனடா, நெதர்லாந்து, சிலி, தாய்லாந்து
போன்ற பல இடங்களில் ஜம்பொரி பாசறை நடைபெற்றது.


2007 ஆம் ஆண்டு சாரணிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜம்போரி பாசறை இங்கிலாந்தில் நடைபெற்றது. இது 21 வது பாசறையாகும். இதில் 147 நாடுகள் பங்கேற்றன. கடைசியாக நடைபெற்ற ஜம்போரி சுவீடன் நாட்டில் நடைபெற்றது. 23வது ஜம்பொரியை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இலங்கை சாரணர் சங்கம் கிறின் என்பவரால் 1912ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் சாரணர் இயக்கம் மாத்தளை கிறிஸ்து கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று எமது சாரணர் இயக்கம்  2012 ஆம் ஆண்டில் நூற்றாண்டைத் தொட்டாலும் கூட இன்னும் உலக சாரணர் இயக்கத்தில் அங்கத்துவம் பெறவில்லை. உலக சாரண இயக்கத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு அச்சங்கம் ஒரு லட்சம் சாரணர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்ற நிபந்தனைப்பாடுள்ளதால் இன்று கல்வித்துறையின் இணைப்பாடச் செயற்பாடாக சாரணர் இயக்கத்தை பாடசாலைகள் ஊக்குவிக்கவேண்டிய கடப்பாடுள்ளது.

நீல்ஆம்ஸ்ரோங், கென்னடி, ஜோர்ஜ் புஷ், பில் கேட்ஸ் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற பலர் சாரணியர்கள் என்பதும் பெருமைக்குரிய விடயங்களே!

சாரணிய இயக்கமும், பெண் சாரண இயக்கமும் சமூக வளர்ச்சிக்கும், வழிகாட்டலுக்கும் வழிகோலக்கூடிய மிகச்சிறந்த அமைப்பாகும் என்பதில் சிறிதளவேனும் ஐயமில்லை.


2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!