இதயம் நுழைந்துஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு.......இன்று  (05.08.2012) !

உலக அரங்கினிலே தன் அன்பான கரங்களை அசைத்து வருகின்றது உலக நட்பு தினம்.

1935 ம் ஆண்டுப் பொழுதொன்றில், கொல்லப்பட்ட தன் நண்பனுக்காக மறுநாள் தற்கொலை செய்து கொண்ட நண்பர்களின் உயிர்த்தியாகமே இன்று உலக நட்பு தினமாக அமெரிக்க அரசின் அங்கீகாரம் பெற்று நம்மையும் அணைத்து நிற்கின்றது.

இங்கு நான் பேசப் போகின்ற நட்பு உண்மையான நட்பைப் பற்றியே!

ஏனெனில் சுயநலம் அதிகரித்த நிலையில் தம் தேவைகளை நிறைவேற்றும் குறுகிய நோக்கோடு நட்பு வேடமிடும் வேடதாரிகள் இன்று சமூகத்தில் தாராளமாக உலவுகின்றார்கள். அவ்வாறான  நட்பை மாசுபடுத்தும் கொடுங்கோலர்களை   புறந்தள்ளியவளாகவும் , பஞ்சமா பாதகங்களுடன் கூடிய , காமம், இனவாதம், வன்முறை , போதைப் பொருள் பாவனை போன்ற தீமைகளின் ஒன்றுகூடலுக்காக தீய நட்பைக் கூடி சமூகத்தையும், தனி மனிதரையும் சீரழிக்கும் தீய நட்பினரின் வேரை அடியோடு கத்தரித்து விடத் தயங்கக் கூடாது எனும் சிந்தனையோடும் என் கரங்கள் இணைய வலைப்பூவை உயிர்ப்பிக்கின்றன இப்போது !.

மனித உணர்வுகளிலேயே உன்னதமான உணர்வே நட்பு. இங்கு இதயங்கள் தம் வேறுபாடுகளைக் களைந்தெறிந்தே பேசுகின்றன..இன்பத்தில் சிரித்தும், துன்பத்தில் கண்ணீர் விட்டும் அழக்கூடிய உன்னதமான  உயிரின் நெருடலே நட்பாகும்!

நம் வாழ்வுப் பயணத்தில் நம்மோடு பயணிக்கக்கூடிய ஒத்த மனவெண்ணமுள்ளவரே நமக்குள் நண்பராக முகங் காட்டுகின்றார்கள். நமது சிந்தனைகளை வழிப்படுத்தக் கூடிய ஆற்றல் இந்த நட்புமுகங்களுக்கே உள்ளது. ஏனெனில் இரத்த உறவுகளுக்கிடையே ஊடுருவும் பாச அதிர்வுகளையும் விட, எவ்வித எதிர்பார்ப்புமில்லாத இந்த நட்பினரின் நேச அதிர்வுகளின் வலிமை அதிகமானதுதான். நம்மை நாமே உணர்ந்து கொள்ள முகங் காட்டும் கண்ணாடியே இந்த நட்பினர்.....நம் வாழ்க்கைப் போக்கைத் தீர்மானிக்கும் விதிக் கரங்களாக இந் நட்பினர் திகழ்கின்றனர்...

நட்பினருக்கிடையே பேதமைகள் பெரிதாக முளைவிடாது, முளைவிடவும் கூடாது. சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் எட்டிப்பார்த்தாலும் கூட  அவை உடனடியாக அகற்றப்பட்டு தம் அன்பை மென்மேலும் விசாலப்படுத்துவதாகவே அமையும். ஒழுக்கம், விழுமியம் , கலாசாரம் என்பவற்றினை உயர்ந்த மட்டத்தில் வழங்குபவராக இந் நண்பர் விளங்கும் போது அது நம்மில் நிரந்தரப் பதிவாகி நம் ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது..

ஆண்- ஆண், பெண்- பெண் எனும் ஒருபால் நட்பானது கலாசாரத்தின் சிறந்த பேணலாக எப்பொழுதும் விளங்கினாலும் கூட , இன்று உலகமானது நவீனத்தின் பால் நகர்ந்து கொண்டிருப்பதாலும், உலகத்தின் செயற்பாடுகள் தகவல் தொழினுட்பத்தினூடு  விரைவுபடுத்தப்பட்டிருப்பதாலும் ,ஆண்- பெண்  நட்பானது சாதாரண விடயமாகவே  இவ்வுலகத்தில் உலா வருகின்றது.ஆண்- பெண் நட்பானது கண்ணாடியில் பயணிக்கும் பயணத்திற்கு ஒப்பானது. ஏனெனில் நட்பில் காட்டப்படும் அதிக நெருக்கமானது காதலாக மாறக்கூடிய அதிக சந்தர்ப்பங்களுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும்பாலான காதலின் இதயங்கள் இளைப்பாறத் துடிப்பது காமத்தின் மடிதனிலேயே! இக் காமத்தின் முதல் தொடுகையாக இருப்பதென்னவோ முத்தப்பரிமாற்றமே!இந்த நெருக்கம் சற்று இடறினால் சேதமடைவது பெண்கள் வாழ்க்கையே......!
இருந்தும் இன்று ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் பழகக் கூடிய தூய்மையான பல ஆண்- பெண் நட்புக்கள் தம பெயரை ஆரோக்கியமாக காலத்தின் சுவற்றில் பதித்து வருவது மனநிம்மதி தரக்கூடியதே!

நம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் முகங் காட்டியிருப்பார்கள்.
பால்ய பருவத்தில் ஆண் பெண் பேதமில்லாத , விளையாட்டிலும் கல்வியிலும் அக்கறை செலுத்தும் சிறு வயது நண்பர்  கூட்டங்கள்...

கல்லூரியில் கற்கின்ற காலத்தில் ,வாழ்க்கையைப்  ஓரளவு புரிந்து அதற்கேற்ப நாம் இலட்சியங்கள் வகுத்து நடைபயில முயற்சிக்கையில் அதற்கு  ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும், நேசமும் ,அறிவுத் தேடலில் பங்களிப்பும் தருவதுடன், நமக்குள் முகிழ்க்கும் கனவுகளை அரங்கேற்ற அழகான மடி தரும் வாலிப வயதைச் சார்ந்த நட்பினர்...

கல்வி கற்று முடிந்து தொழில் தேடும் தருணத்தில் வாழ்வில் நாம் பல பொழுதுபோக்கு அம்சங்களில் இணைந்து கொள்வதுடன் , நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு ஆறுதலும், தீர்வும் தரக் கூடிய நம் தேவைகளை இனங்கண்டு உதவக்கூடிய வாலிப வயது நட்பினர்............

தொழில் வாழ்வில் இணையும் போது அத் தொழில் உலகோடும், புற வாழ்வின் இயல்பான போக்கோடும் ஒத்துப் போகக்கூடிய , ஆலோசனை தரக்கூடிய, அனுபவங்களோடு நட்பையும் திரட்டக்கூடிய இள வயது நட்பினர்...

முதுமை வாழ்விலோ தம் கடந்த காலத்தில் உதிர்க்கப்பட்ட  இளமையான ஞாபகங்களையும், தம் குடும்ப உறவுகளின் செழிப்புக்களையும் , வாழ்க்கை கண்டெடுத்த வெற்றி , தோல்விகளை மீட்டும் மனநிலையை பகிரக்கூடிய, வாழ்வின் இறுதிநாட்களை நகர்த்துகின்ற முதுமைப் பருவ நட்புக் கூட்டத்தினர்.........

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் நாம் மறக்க முடியாத ஒவ்வொரு முகங்கள்...நம்மைப் பிண்ணிப்பிணைந்து கொண்டுதான் வருகின்றன.

நம் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத போது, அங்கு எட்டிப்பார்ப்பவை ஏமாற்றங்கள் மட்டுமல்ல பிரச்சினைகளும் தான். பிரச்சினைகள் நம் வாழ்வைத் தொட்டுப்பார்க்கும் போதெல்லாம் தேவைகள் நம்மால் நிறைவேற்றப்பட முடியாமற் போகின்றன. எனவே பிரச்சினையெனும் இந்தச் சிக்கலை அவிழ்க்கும் ஆலோசகர்களாக நம் முன்னே வருபவர்களும், நாம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்திருப்பவர்களும் நமது நண்பர்களே! ஏனெனில் வாழ்க்கையானது பிரச்சினைக்குள் அமிழ்ந்து விடும் போது நாம் மனஅழுத்தங்களோடு போராடுபவர்களாகவே இருக்கின்றோம். அத் துயரத்தைத் தூசாக்கும் கரங்களாக நம்மை அரவணைப்பவை இந் நட்பினர் கரங்களும், அவர்களது ஆறுதலான வார்த்தைகளும் தான்!

"உன் நண்பனைக் காட்டு, உன்னைப் பற்றிக் கூறுகின்றேன்"

இது ஓர் அனுபவ மொழி....!

உண்மையில் நம் நண்பர்களின் நடை, உடை, பாவனை நம்மில் செல்வாக்குச் செலுத்தக்கூடியது..அதுமட்டுமல்ல நாம் அறிவைத் தேடக் கூடிய, கண்டெடுத்த விடயங்களைப் பரிமாறக்கூடிய நம் அந்தரங்கங்களைக் கூட நம்பிக்கையோடு பகிரக்கூடிய இடம்தான் நண்பர்களின் மனம்!

உண்மை நட்பின் நேச ஆழம் சமுத்திரங்களை விட ஆழமானவை..இந்தப் பிரபஞ்சத்தை விட பரந்தது..அதனை அளவிடமுடியாது. உணர்வுகளால் மட்டுமே பசுமைப்படுத்தவே முடியும்.இவ்வுலக வாழ்வின் போக்கு செல்வத்தால் தீர்மானிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் கூட, அவற்றையெல்லாம் ஓரந் தள்ளிவிட்டு இந் நட்புச் செல்வம் நம் மனங்களை மங்களகரமாக முடிசூட்டிக் கொள்ளும் என்பது மறுக்கமுடியாத உண்மை!

மதம், மொழி, நாடு, இனம், வயது , அந்தஸ்து போன்ற அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டு , மனங்களால் ஒன்றிணைந்து மகிழ்வோடு நாம் நடமாடும் உலகமே இந்த நட்புலகம். நம் பரஸ்பர நட்பின் இதமான பரிமாற்றம் உயிர், உணர்வுகளை ஊடுருவக்கூடியதென்பதால்தான்  நம் பழைய சிந்தனைகள் களையப்பட்டு ஒவ்வொரு கணங்களும் நட்பால் மீளப் புதுப்பிக்கப்படுகின்றோம்.

தத்தமது விருப்பு வெறுப்புக்களை மறந்து, மறுத்து பொதுப்படையான ஒருமித்த எண்ணத்துடன் பயணிக்கும் இந்த  நட்பின் ஆரோக்கியம் , ஆயுள்  அழகான கவிதையாய் வார்க்கப்படுகின்றது. நட்பின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளால் நாம் வடிக்க முடியாது. ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் பிடித்தமான நட்பின் ஞாபகங்கள் அவர்கள் மனதை சிறைப்பிடித்து ரசித்துக் கொண்டுதானிருக்கின்றது..உண்மை நட்பால் அன்பைத் தவிர வேறெந்த பலனையும் எதிர்பார்க்கமுடியாது.

"உயிர் காப்பான் தோழன்"

எனும் இந்த வாக்கியமே அதன் ஆழச்சிறப்புக்குப் பொருத்தமான முகப்பாகும். இரு மனங்கள் வரைந்திடும் இந்த நேசச் சாதனம் நாள்தோறும் பொலிவிழக்காது வளர்பிறையாய் வளரக்கூடியது. வாழ்க்கையில் முகம் காட்டிச் செல்லும் நட்பினரின் பாசமும், முகங் காட்டாத முகநூல் நட்பினரின் நேசமும் நம்முள் தந்து நிற்கும் அழகிய நினைவுகளை ஆழ் மனதிலிருந்து மீட்டும் தருணமிது.

நாம் நேசிப்பவர்களை கைகுலுக்கி, வாழ்த்துக்களைப் பரிமாறும் ஆனந்த நாளின்று! நாம் இன்றைய நாளில் நம் எண்ணங்களில் நறுமணம் பூசி நம் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை வார்த்தைகளாகவோ அன்றி செய்திகளாகவோ பரிமாறும் போது அந்த நட்பின் பெருமை இன்னும் பல படிகள் மேலே உயர்த்தப்படுகின்றது..அன்பின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்படுமிந்த நட்பை மதங்களும் , நூல்களும் , காவியங்களும் போற்றத் தவறவில்லை.

பொய்யா மொழிப்புலவராம் வள்ளுவர் தன் திருக்குறளில் நட்பின் சிறப்பை மேன்மைப்படுத்தியுள்ளார். "நட்பு" , "நட்பாராய்தல்". "பழைமை", "தீ நட்பு", "கூடா நட்பு" எனும் ஐந்து அதிகாரங்களில் நட்பின் பண்பு சொல்லப்பட்டுள்ளது. வெறும் முக பாவத்திலல்ல உள்ளத்தின் மேற்பரப்பிலிருந்து இந் நட்பு எழ வேண்டுமென்பதே வள்ளுவரின் ஆதங்கம் என்பதனை இக் குறள் துல்லியமாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு" (குறள் 786)

எம் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் , மகாபாரத்தில் செஞ்சோற்றுக் கடன் செலுத்தும் கன்னனும், இராமாயணத்தில் ராமன் உயிர் காக்கும் சடாயுவும், அனுமானும் இன்னும் பலரும் நட்பின் இதிகாசங்களாய் நம் ஞாபகப் பரப்பில் வந்து போகின்றனர்.

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே " என உயர்ந்தவர்களில் நடிகர் திலகமும், மேஜர் சுந்தரராஜனும் நம்மை நெகிழ்வித்தனர். நட்பின் பிணைப்பைப் பற்றி பல சினிமாப் பாடல்கள் அன்றாடம் வந்து கொண்டுதானிருக்கின்றன.

உன்னதமான  இந் நட்பைப் பகிர்ந்து கொண்ட நாம் , இன்றைய தினம் மட்டுமல்ல என்றும் அந் நட்பைக் கௌரவப்படுத்தி அதனை நம்முடன் அணைத்துக் கொள்வோமாக

என் நட்பினர் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்..

ப்ரியத்துடன்-

       -----ஜன்ஸி கபூர் -------No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை