விரல் தொடும் ஸ்பரிசங்கள்அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

நம்மை விட்டுக் கடந்து சென்றவை ஏதோவொரு பொழுதினில் ஞாபகப்படுத்தப்படும்போது மனசெங்கும் மகிழ்ச்சி நிரப்பப்படுகின்றது. அந்த வகையில் நான் கடந்து சென்ற பாதையில், விட்டுச்சென்ற சில தடங்களை அதாவது கணினி தொடர்பான நினைவுகளைப் பகிரப்போகின்றேன்......

அறியாமையையை அறியாமலிருப்பதுதான் அறியாமை!

நான் படிக்கின்ற காலத்தில் கணனி எங்கள் பாடசாலைக்குள் அறிமுகப்படுத்தப்பட்டது. விஞ்ஞான ரீச்சர் அவற்றைப் பாடத்திற்காக இயக்க, நாம் அவற்றை ஆச்சரியத்துடன் பார்த்து விழிபிதுக்குவோம். ஆனால் அதனை இயக்கவேண்டுமென்ற ஆசை , நிறைவேறாத அழுத்தங்களாக நெஞ்சில் படிந்து கிடந்தது..

அது யுத்தகாலம்...பொம்பரும், ஹெலியும் , ஆட்லறியும் மனதில் பீதியை விதைத்துக்கொண்டிருந்ததால் கணனி கற்கை பற்றிய கனவும் காய்ந்துதான் போனது......

நாலைந்து வருடங்களின் பின்னர் க.பொ.த  உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று, உயர்படிப்புக்கோ தொழிலுக்கோ தயாராகிக் கொண்டிருந்த காலம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கணனி கற்கைநெறிக்காக விண்ணப்பிக்கும்படி அறிவித்தலை வெளிவிட்டுக்கொண்டிருக்க, மீண்டும் மனதில் ஆசை தளிர்த்தது...ஆனால் அன்றைய காலத்தில் கணனி பற்றிய பெரிய எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் பெற்றவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன்  யுத்தச் சூழ்நிலை வேறு......சற்று தொலை நோக்கி படிக்க அனுமதி கேட்டால் நிச்சயம் வீட்டில் ஏச்சு விழும் என்ற காரணத்தால் சொல்லாமல் மறைக்கவும், யுத்தம் தீவிரமாகி நாம் இடம்பெயரவும் காலம் சரியாகிக் கிடந்தது..

இடம்பெயர்ந்தோம்......எதிர்பாராத சூழ்நிலையில்...!

புதிய இடம், புதிய சூழல், புதிய மொழி .......வாழ்வையே திசை மாற்ற , மனதில் கருக்கட்டப்பட்டிருந்த கனவுகளும், ஆசைகளும் மறைந்து போயின.

இருந்தும் ஓரிரு வருடங்களில் பத்திரிகையில் காணப்பட்ட விளம்பரமொன்று மீண்டும் கணனி தொடர்பான ஆசைத்தணலை என்னுள் உசுப்பேற்ற..  போராட்டத்துடன் வலியை உணர்ந்து , பெற்றவர்களிடம் முறையிட்டேன் நானும் கணனி கற்கவேண்டுமென!..

அது.டெக் ஸ்ரீலங்காவின் கணனிக்கற்கை பற்றிய விளம்பரம்.. நுண்மதி தெரிவுப்பரீட்சை நடத்தப்பட்டு, அதன் மூலமாகப் புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டன. அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு இலவசமாகவும், இன்னும் தொகுதியினருக்கு கால்வாசிக் கொடுப்பனவிலும் , அடுத்த தொகுதியினருக்கு அரைவாசிக் கொடுப்பனவிலும் புலமைப்பரிசில் வழங்கப்படுமெனவும், தெரிவு செய்யப்படாதவர்கள் முழுக்கட்டணம் செலுத்தி கற்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது.   எனினும் நாடுமுழுவதும் ஆயிரம் பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்படுவார்களென்ற கட்டுப்பாடும் வரையறையும் இவ்விளம்பரத்தை அழுத்தின.

நானும் என் இருசகோதரிகளும் அப்பரீட்சைக்கு முகங் கொடுத்து எழுதினோம். ஆயிரக்கணக்கானோர் பரீட்சை மண்டபங்களை நிறைத்திருந்தனர். பரீட்சை முடிவுகள் வெளிவந்தபோது என் சின்னத்தங்கைக்கு (தற்போது டாக்டராக உள்ளார்) மாத்திரம் இலவச புலமைப்பரிசிலும், எனக்கும் மற்ற தங்கைக்கு கால்வாசிக் கட்டணமாக 3 ஆயிரம் மாத்திரம் செலுத்தி 6 மாதக் கற்கையைத் தொடரும்படியும் கூறப்பட்டது. அப்பொழுது கணனிக் கட்டணமாக 12 ஆயிரம் அறவிடப்பட்ட காலம்....

3 ஆயிரம்................!

அகதியாக நாம் இடம்பெயர்ந்த நிலையில் மூவாயிரம் என்பது நினைத்தும் பார்க்க முடியாத பிரமிப்பான ஒரு தொகை.  மறுபுறம் சிங்கள மொழியிலான அக் கற்கையை மேற்கொள்ள முடியாதளவு மொழிப்பிரச்சினையும் தடைகளாக இருந்தன. அக்கற்கைக்கான அனுமதிக் கடிதம் இன்னும் என் பைலை (கோவையை) நிரப்புகின்றது.மீண்டும் என் கணனிக்கனவுகள் உடைந்ததால்  , கருக்கட்டப்பட்டிருந்த  அவ்வாசைகளும்  காணாமல் போயின. 

அதைத்தொடர்ந்து வந்த காலத்தில் எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கவே, அக் கடமைகளில் தீவிரமாக நானும் மூழ்கி கணனியையே மறந்து போனேன். அவ்வாறான ஓர் காலத்திலேயே எமது பாடசாலைக்கும் நலன்விரும்பியொருவர் கணனியொன்றை அன்பளிப்புச் செய்திருந்தார். அக் காலத்தில் கணனிப்பயிற்சி பெற்றோர் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே!

அப்போது எம் பாடசாலையில்  அதிபராக இலக்கியவாதியும் கலாபூஷணமுமாகிய அன்பு ஜவஹர்ஷா சேர் கடமையாற்றிக் கொண்டிருந்தார். எனது சிறப்பான கடமைகளின் நிமித்தம், பாடசாலை முகாமைத்துவக் கடமைகளும் எனக்கு பங்கிடப்பட்டிருந்தன. என் கையெழுத்துக்கள் அழகாக இருக்கும். எனவே பாடசாலை முகாமைத்துவம் சார்பான கடிதங்கள், அறிக்கைகள் எல்லாமே என் எழுத்துக்களால் நிரம்பிக் கொண்டிருந்தன.

ஒரு நாள்........................!

அதிபர் ஜவஹர்ஷா சேர் , என்னை அழைத்து , மர்ஹூம் வஹாப் சேர் கொடுத்திருந்த ஒரு மீலாத்விழா தொடர்பான கடிதத்தைக் கொடுத்து அதனைத் கணனியில் அதுவும் தமிழில் தட்டச்சு செய்து தரும்படி கூறினார்.

மிரண்டேன்......கணனியிலா........!

சேர்......எனக்கு கம்பியூட்டர் தெரியாது......விழிகள் கலங்க, மனம் பீதியுடன் வார்த்தைகளை உதிர்த்தபோதும் ,அவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

"உங்களுக்கு இது பெரிய விசயமில்ல மகள்.கெதியில தெரிஞ்சுக்கலாம்"

நம்பிக்கையை எனக்குள் விதைத்து ,கணனியையும் இயக்கித் தந்தார். தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணக்கூடிய குறிப்புக்களையும் தந்தார்.

மகள்....! (அப்படித்தான் அவர் சின்னவர்களை அழைப்பார்)

இதப் பார்த்து டைப் பண்ணித்தாங்க...........மற்றதெல்லாம் நான் செய்கின்றேன்"
.
வேறு வழியின்றி பயத்துடன் ரைப் செய்தேன். ரொம்ப ரொம்ப அவதானமாக என் விரல்கள் விசைப்பலகைகளை அழுத்தி முடிக்க அதிக நேரமெடுத்தது. அன்று ஒரு கடிதத்திற்காக நான் செலவழித்த நேரம் ஒரு மணித்தியாலம்.

(முதன் முதலாக கணனியில் எனது பெயரையும், என் குடும்பத்தார் பெயரையும் திகதியிட்டுத் தட்டச்சுச் செய்தேன். இன்றும் அப்பதிவைப்
பத்திரப்படுத்தியுள்ளேன்.)

எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் நிறைவேற்றி அவரிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அவர் அக்கடிதத்தை மெருகூட்டினார். அவர் மெருகூட்டும் போது கடைப்பிடித்த விடயங்களை அவதானித்து உள்வாங்கினேன். இவ்வாறாக பல தடவைகள் நிகழ்ந்தன.என்னைச் சுற்றி வந்த  பார்வை, கேட்டல் ஞானத்தினூடாக ஒரு சில கணனி அடிப்படை விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.

அதன் பின்னர் , அதிபர் ஜவஹர்ஷா சேர் அவர்கள் தனது லாப்டொப்பை எனது வீட்டில் தானாகவே கொண்டு வந்து தந்தார். நான் ஏற்கனவே கற்றுக் கொண்ட விடயங்களின் அடிப்படையில்,  சுயமாக அவரது லாப்டொப்பில் ஒரு வாரம் முயற்சித்து  சில விடயங்களைக் கற்றுக் கொண்டேன். எனது முயற்சி, ஆர்வத்தைப் பார்த்த என் வாப்பாவும் கணனி தொடர்பான சஞ்சிகைகள், புத்தகங்கள் வாங்கித்தருவதில் ஆர்வங் காட்ட,  சுயமாக வேர்ட், பவர் பொயின்ட், எக்ஸல் என்பவற்றையும் புத்தகம் மற்றும் தேடல் மூலமாகக் கற்றுக்கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து வந்த வருடங்களில், சுயமாக நான் கற்றுக் கொண்ட கணனி பற்றிய அதிகமான விடயங்களைப் பரீட்சித்துப்பார்க்கும் தளமாக பாடசாலைக் கணனி எனக்கு கைகொடுத்தது. கல்வியமைச்சால் பாடசாலைக்கு 20 கணனிகள் வழங்கப்பட்டபோது அதற்கென கணனி கூடமும் தயாரிக்கப்பட்டது, அக் கணனி கூடம் (Computer Lab) என் பொறுப்பிலே விடப்பட்டது. க.பொ. த (உ/த) வகுப்பிற்கும் GIT படிப்பிக்கும் ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். இதன் பொருட்டு கல்வியமைச்சு இசுருபாயாவிலும் , அநுராதபுர கணனிக்கற்கை வள நிலையத்திலும் எனக்கு சில கணனிப்பயிற்சிகளும் வழங்கப்பட்டன. பயத்துடன் ஆரம்பிக்கப்பட்ட என் கணனிப் பயணம், என் முயற்சியால் சிறப்பாக நடைபயின்றது. மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டுமென்பதற்காக நான் இன்னும் பல கணனி தொடர்பான விடயங்களைத் தேடிக் கற்றுக்கொண்டேன்.

காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, பாடசாலை முகாமைத்துவச் செயற்பாடுகளின் கணனி வழங்கும் வேலைகள் யாவும் என்னால் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக நிறைவேற்றிக் கொடுக்குமளவிற்கு என்னை வளர்த்துக் கொண்டேன்.

 இவ்வாறாக என் தேடலை வளர்த்தும், விருத்தி செய்தும் கொண்ட போதுதான் எங்கள் வீட்டிலும் தந்தையும் கணனியொன்றை வாங்கியிருந்தார்.

அது தந்தையின் கணனி..தேவைக்கு மாத்திரமே நான் பயன்படுத்தினேன். பிறர் பொருட்களை நான் அதிகம் அனாவசியமாகப் பயன்படுத்துவதில்லை.....
என்னுழைப்பில் கணனியொன்றை வாங்க வேண்டுமென்ற ஆசையொன்றும் மெல்ல முகிழ்த்தது. அக் காலத்தின் வருகைக்காக காத்திருந்தேன்.

அப்பொழுது இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகள் பலருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களுக்கு கணனியும் பயிற்சியளிக்கப்பட்டது. நானும் கணனிப்பயிற்சியளிக்கும் வளவாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். வவுனியா நைட்டா நிறுவனத்தில் மூன்றுமாதம் கணனிப் பயிற்சியளித்தேன். இது எனக்கு வித்தியாசமான அனுபவம்.

முறைப்படி பயிற்சியேதுமின்றி தைரியமாகவும், நம்பிக்கையுடனும் கணனியுலகில் வலம் வந்த என்னை கல்வியமைச்சு ICDL பயிற்சியளிக்க தெரிவு செய்தது. அநுராதபுரம் IDM நிறுவனமே இப்பயிற்சியளித்தது. எமக்கான கட்டணங்களை அரசு செலவளித்தது. பல போட்டிக்கு மத்தியில் இந்தப் புலமைப்பரிசில் கிடைத்தது எனக்குரிய அதிஷ்டமே என்றுதான் சொல்ல வேண்டும். இது விடுமுறை தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வருடப்பயிற்சியாகும். நான் சுயமாக கற்றுக்கொள்ளாத  MS ACCESS  ஐ இங்குதான் கற்றுக் கொண்டதுடன், ஏற்கனவே அறிந்து வைத்துள்ள ஏனைய விடயங்களை மேலும் மெருகேற்றிக் கொண்டேன். இப்பயிற்சியில் மொடியூல்கள் வழங்கப்பட்டது. ஆனாலும் இப் பயிற்சியில் Internet ஓரம்சமாக இருந்தாலும் கூட அந்த விடயங்கள் சரிவரப் பயிற்சியளிக்கப்படவில்லை. ஆக மொத்தத்தில் இணையம் சார்பான செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய துறைகள் என்னுள் மேலும் மெருகூட்டப்பட்டன.

ஈராண்டு காலம் கழிந்தது..... ICDL  பயிற்சியை முடித்தவர்களுக்கு கல்வியமைச்சு  IPICDL பயிற்சியை வழங்கியது. என் பெயரிலேயே பயிற்சிக்கான கடிதம் வந்ததால், புதிய அதிபரும் என்னை பயிற்சிக்காக அனுப்பி வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்.. இதுவும் விடுமுறை தினங்களில் கற்றுக் கொண்ட மூன்றுமாத பயிற்சியாகும். .மூன்று மாதமும் இணையமே ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டது.

என் வாழ்வின் போக்குகளை மாற்றித் தந்தது இப் பயிற்சிநெறியே ஆகும்.. ஒவ்வொருவருக்கும் காலை 9 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை கணனியில் இணையத்தைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. ஏனெனில் பாடசாலைகளுக்கிடையில் வலைப்பின்னல்களை உருவாக்கி. அப் பாடசாலைக் கல்வி வழங்கலை ஆசிரியர்கள் தமக்குள் பரிமாறி, மாணவர்களின் கல்வி வழங்கலை அதிக வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடனேயே இப்பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சி 2010 ஒக்டோபர் 1 ல் ஆரம்பிக்கப்பட்டது. அன்றுதான் என் முகநூல் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. எனது இப்பயணத்தின் வயது 2 வருடமேயாகும். ஆனால் நானிங்கு கற்றுக் கொண்ட விடயங்களும் அனுபவங்களும் அதிகம்.

பயிற்சிக்காக கட்டாயம் மின்னஞ்சல் தயாரித்த போதுதான் பயிற்சியில் கலந்து கொண்ட  நட்புள்ளங்கள் முகநூல் பற்றிக் கூறி , என்னையும் ஆரம்பிக்கும்படி வற்புறுத்தினார்கள். அவர்களிடம் ஏற்கனவே முகநூல் பக்கங்கள் இருந்ததால் பயிற்சி தொடர்பான விடயங்களை சட் மூலம் பரிமாற அறிவுறுத்தப்பட்டபோது, எனக்கு முகநூல் பக்கம் அவசியப்பட்டது. ஆனால் முகநூல் பக்கத்தை எப்படி ஆரம்பிப்பது.................. தெரியவில்லை எனக்கு!

 அச்சூழலில் பயிற்சியில் கலந்து கொண்ட சிங்கள மொழி பேசும் நண்பனே (எரிக் ) என் முகநூல்பக்கத்தை உருவாக்கி சில அடிப்படை விடயங்களையும் சொல்லித் தந்தான்.. அவ்வாறே இன்னுமொரு சிங்கள நண்பன் (அஜித்) வலைப்பூ பக்கமொன்றை எனக்குள் அறிமுகப்படுத்தி அதனையும் உருவாக்கித் தந்தான். இணையத்தில்  பதிவுகளை தமிழில் வெளியிடவே ஆர்வப்பட்ட நிலையில் Tamil Font ஒன்றும் எனக்குத் தேவைப்படவே, எங்களுக்குப் பயிற்சியளித்த சிங்கள சகோதரியிடம் எனது தேவையைக் கூறினேன். அவர் தாம் சேமித்து வைத்திருந்த Tamil Font  ஐ எனக்குத் தந்துதவ, எனது இணையப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.  ஆக மொத்தத்தில் இன்று நான் இணையத்தில் தமிழில் வலம் வரக் காரணமாகவிருந்தோர் சிங்களமொழி பேசும் எனது சகோதரர்களே!

அதன்பிறகே கணனியொன்றை வாங்கி, நானாக மேலும் பலவிடயங்களைக் கற்றுக் கொண்டேன். தினமும் பார்வை, கேட்டல் ஞானங்களுடன் எனது அறிவினைப் புதுப்பிப்பதில் நான் சற்றும் தயங்கவதில்லை.

ஒரு சில மாதங்களில் நிறைய விடயங்களை கணனிப்பயிற்சி மூலமாகக் கற்றுக்கொள்வதிலும் பார்க்க, பல வருடங்கள் நானாகவே முயன்று தேடி சிறுகச்சிறுகக் கற்றுக் கொண்டது, கொள்வது எனக்கு சாதனையாகத்தான் இருக்கின்றது.

இந்தக் கணனிப்பயணத்தில் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் நிறையவுள்ளது. அவற்றைக் கற்றுக்கொள்ள  தயார்படுத்தியபடியே , ஆர்வம், தன்னம்பிக்கை, முயற்சியுடன் அவற்றைத் தேடிப் பயணிக்கின்றேன்........ !

நட்புள்ளங்களே.........

என் இச்சுய கற்றலின் முன்னேற்றத்தை அளப்போரும், விமர்சிப்போரும் நீங்களே........என் வழிப்பயணத்தின் துணையாக உங்கள் நட்பும் வாழ்த்தும் ஊக்குவிப்பும் தொடர்ந்துவர வேண்டுமென்பதே என் அவா!......................
.இன்ஷா அல்லாஹ்..!

ஊற்று

தொடருமோ காமம்


கழுகுகளாய் காமக் கண்கள்
பறக்கின்றன சதைப் பிண்டங்களுக்காய்.......
மாற்றுப் பிறப்புறுப்புத் தேடிச்
சிரிக்கின்றன  மன்மதன்களாய்!

உடல்கள் உரசி
விழிகள் விழுங்கி
எழுதப்படும் காதல் சரித்திரங்கள்.....
இப்போதெல்லாம்
காமத்தின் அர்ப்பணிப்பில்
சுருண்டு கிடக்கின்றன.........
எங்கோ அன்பைத் துவம்சம் செய்தபடி!

காதலை மந்திரமாக்கி
பென்மைக்குள் நா சுவைக்குமிந்த
பொறுக்கிகளின் மனசுகள்.......
வரம் வாங்கி வந்தனவோ "சாபங்களை"
சரித்திரங்களின் உமிழ்நீரால்
இவர்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்!

கண்டதும் காதலென்பார்...
கருத்தினில் நிறைந்ததும்
இதழ்களை இறுக்கிடுவார்.......
முத்திரைகள் பல பொறித்திட்டே
நித்திரைக்குள்ளும் ஆணியறைவார்
நிம்மதி பிடுங்கி!

ஆசையின் பலத்தில்
பழம் பறிக்கும் ஏவாள்களை
கண்டாலோ இவர்கள்
பெண் ....................
பலவீனத்திற்குள் தம் பலம் புதைத்து
வளைத்துப் பிடித்திடுவார்
வின்னர்களாய்
இந் நவீன ஆதாம்கள்!

வெட்ட வெளிகளும்
வெளிச்சம் துறந்த பற்றைகளும்........
காதல் தேசத்தின் விலாசங்களாய்
மாறிப் போகும்
காதலால் வெம்பிப் பழுத்த - இவர்கள்
சதையுறுஞ்சுவதற்காய்!

கூரை மறந்த காற்றாடையில்
பிண்ணிப் பினைந்து காதல் செய்து......
காமம் சுவாசிக்கும்
இவர்கள் வாழ்வில்.................
மோகித்துக் கிடக்கும் பொய்மைகள்
மெய்போல் மெய்க்குள்
நம்பிக்கை புதைக்கும்
வருங்கால கனவுகளுக்காய்!

தாய்மையின் கற்புக்குள்ளும்
காமமுறிஞ்சும் இச் சாத்தன்கள்..........
வேர் பரப்பி பிணைந்திருக்கின்றன
இவ்வுலகை .....
மயானங்களாய் மாற்றி
தம் வாலிபங்களின் கறைப்படிவில்
தடம் பதித்துலாவ!

தம் மொழுக்கத்தில் தீமூட்டி - ஆபாச
வார்த்தைக்குள்  மனம் புதைத்து..........
பிஞ்சில் பழுக்குமிந்த "ஓமோன்கள்"
ஓசியில் .............
பிணங்களிலும் சுகம் தேடும்
இரசாயனக் கழுகுகள்!

சபலத்தில் தம்மெண்ணம் புதைத்து
அப்பாவி வாழ்வோடு நச்சுக் கலக்கும்
இப் பிசாசுகள்.......
என்றும்
இறை சந்நிதானத்தில்
சபிக்கப்பட்ட சாத்தான்கள்!

இரவு விரிக்கும் கனாக்களில்
இதம் தேடி  மருண்டு நிற்கும்- தம்
ஆண்மைக்குத் தீனி தேடி
அட்டகாசமாய் அலைந்து திரியும்
இவ் வல்லுறுக்கள்
நல்ல பிறப்பில் புவி தொடாதவர்கள்!

விடியலில் சிவக்கும் வானில்
கூட.........பெண்
இரத்தம் துப்பி ரசனை தேடுமிந்த
இங்கிதமற்ற பேய்களுக்கு
யாரிட்டாரிந்த  "கௌரவ" வாழ்க்கை
மனிதரென!

கறைப் படிவுகளின் கூடாரத்தில்........
இரை தேடியலையுமிந்த
வேட்டைநாய்களின் ஆயுதமாய்
"காதல்" நசுக்கப்பட்டு
புனிதம் கற்பழிக்கப்படுகின்றது தினமும்
கண்ணீர்ச் சிதறல்களுடன்!

மரணங்களின் விளிம்பேறி
மீளுமிந்த காமத்தால்..........
காவு கொள்ளப்படும் பூக்கள்
நிரப்புகின்றன மகரந்தங்களை - தம்
கர்ப்பப்பைக்குள் நிரந்தரமாய்....
அனாதைகளை உற்பத்தி செய்தபடி!

அலைபேசிக்குள் நிதம் தூதுவிட்டு
விலைமகளாய் தன் காதலியை மாற்றும்.....
கவர்ச்சி நாகரிகம் கூட - இக்
காமதேசத்தின் பக்கங்களை
நிரப்பிச் செல்கின்றன வீரியமாய்!

துளி மழைக்குள்ளும் - பூமிக்குள்
துணை தேடும் காளான்களாய்...........
வெட்கத்தைத் தொலைத்து விட்டு
சல்லாபிக்குமிந்த தீநாக்குகளின் உரசலில்
நிறை பிரசவமாய் காமம் பிறக்கும்
திரையரங்குகளின் இருள் மூலைக்குள்!

இவர்கள் திருந்தப் போவதில்லை.......
அன்பின் வேட்கைக்குள்
அக்கினியை நனைத்து விட்டு......
சபலத்தால் தம்முணர்வை நக்குமிந்த
ஜடங்களுக்கு........
காமத்தின் பார்வையிருந்தால் போதும்
தப்பிவிடுவார்கள்
கல்லறைக்குள் வீழ்ந்தாலும் - தம்
ஆத்மாவுக்கும் சுகம் தேடிக் கொடுக்க!

உயிர் தரித்த தடத்தில் கூட
உறவு தேடும் ஈனர்களின் படையெடுப்பின்
வலிமையில்..........
வெடித்துச் சிதறுமோ
பொறுமை பூமி- இனியும்
தன் சோகம் தாங்காது!


நட்பும் குழந்தைத்தனமும்


நம் வாழ்க்கை முழுமை பெற்று , நாம் மரணிப்பதற்குள் பல பருவங்களைக் கடந்து விடுகின்றோம். ஒவ்வொரு பருவங்களும் பல அநுபவங்களால் சூழப்பட்டு , வாழ்வினை வளப்படுத்த முயற்சிக்கின்றன. உறவினர், நண்பர், சமுகத்தினர், அயலார், யாரோ ஒருவர் இவ்வனுபவத்தைத் தருபவராக இருக்கலாம். நல்ல அனுபவங்கள் மனதைக் குளிர்ச்சிப்படுத்தும் அதே நேரம், தீயவை அல்லது எதிர்பாராதவை மனதை சங்கடப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன!

அனுபவங்களைத் தருவோர் பட்டியலில் முதன்மைப்படுத்தப்பட வேண்டியவர்கள் யாரென்று நினைக்கின்றீர்கள் ? நான் நினைக்கின்றேன் நண்பர்களென .......!

(சரியா.....நண்பனென்ற வார்த்தை ஆண்பாலுக்குரியதாக இருப்பினும், நான் நண்பிகளையும் இதற்குள் இணைத்தே "நண்பரெனறு ' இங்கு கதைக்கின்றேன்.

பெரும்பாலும் ஒத்த குணத்தினரே, நம் நண்பராக இணைவார்கள்.......அவர்கள் தரும் அனுபவங்கள் விசாலமானவை. நம் துன்பத்தில் தாமும் கரைந்து , சந்தோஷங்களில் நம் சிரிப்புக்களுடன் இரண்டறக் கலந்து , சாதனைகள் புரியும் போது மானசீகமாக வாழ்த்தி, தவறுகளை நம் வாழ்வில் காணும் போது சுட்டிக்காட்டித் திருத்தி . நம் மனவோரங்களில் உயர் அன்பை வெளிப்படுத்த முனைகின்ற நல்ல நட்புக்கள் வாழ்வில் கிடைப்பது சந்தோஷமே!

ஆனால் சிலர் , நண்பராக பிறர் பார்வைக்கு செயல்பட்டுக் கொண்டே , நம் முன்னேற்றத்திற்கு குழி வெட்டுபவராக இருப்பார்கள். இவர்களிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது. நேரில் சிரித்துக் கொண்டு , புறமுதுகில் முரண்பாடுகளை எழுதுபவர்களாக இருப்பார்கள்.....)

இப்படியானவர்களையும் நான் நிறைய சந்தித்துள்ளேன். இவர்கள் துன்பம் தந்தாலும் கூட, என் வாழ்வின் வியத்தகு முன்னேற்றத்திற்கு தமது பொறாமையுணர்வை ஏணியாக்கித் தந்துள்ளனர்.

இன்னும் சிலரோ....நண்பர்கள் தான் .....எப்போதாவது கண்டால் முகமலர்ந்து கதைப்பார்கள். காணாமல் நாம் போகும் போது அதாவது நாம் சந்திக்காத போது எதுவுமே அலட்டிக் கொள்ள மாட்டார்கள். மீண்டும் எப்போதாவது நாம் சந்திக்கும் வரை , நம்மை ஞாபகப்படுத்தமாட்டார்கள்...

இந்த மூன்று வகைக்குள்ளும் என் நட்புக்கள் உள்ளடக்கப்ட்டு நிறைய அனுபவங்களைத் தந்துள்ளனர். சிறுவயது, கட்டிளமைப் பருவம் , வாலிபம், நடுத்தரப் பருவம், முதுமைப்பருவம் எனும் பருவச் சுழற்சியில் ஒவ்வொரு விதமான நட்பினர் இணைவார்கள் . இணைய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுவாரஸியமாகவும், அர்த்தத்துடனும் விளங்கும். (என்ன நான் சொல்லுறது சரிதானே)

அவ்வாறாக என்னுள் ஆதிக்கம் செலுத்திய ஒரு சிலரைப் பதியப் போகின்றேன் இங்கு...

எங்கள் குடும்பத்தில் எனக்கு ஆண் சகோதரர்களில்லை. படித்ததோ கட்டுப்பாடுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் !

 என் பள்ளிப்பருவ நாட்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் (ரியூஷன்) வாசற்படியை நான் மிதிக்கவேயில்லை. காரணம் என் தந்தை ரொம்ப கண்டிப்பானவர். அதனால் அவர் சுயகல்விக்கே என்னை வித்திட்டார். ஆக மொத்தத்தில் என் நட்புக்கூட்டங்கள் யாவரும் பெண் மாணவிகளே ! அதுவும் யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி மாணவிகளே என்னுடன் பழகி, நட்பு முத்திரையைப் பதித்தவர்கள். இவர்களுடன் எங்கள் வீட்டுக்கருகிலுள்ள ஒரு சில என் வயதையொத்த பொம்பிளைப் பிள்ளைகளும் நண்பிகளாக இணைந்தனர். பாடசாலை முடிவடைந்து, மாலையில் நாங்கள் விளையாடும் விளையாட்டு பள்ளிக்கூடம்தான்...நான்தான் அதிபர்......எனும் ரீதியில் அவர்களுக்கு பள்ளிக்கூடம் நடத்துவேன். இது வயது பத்துக்குள்...எனக்குத் தெரிந்து நான் மண் சோறு , கறி ஆக்கிய ஞாபகமில்லை..மாலையில் நண்பிகளை "டபிள்" ஏத்தியவாறு சைக்கிளிலில் ஊரைக் கொஞ்சம் சுற்றுவேன்...(இதெல்லாம் சின்ன வயசில பண்ணிய குறும்பான அனுபவங்கள்)

எங்கள் வீட்டுக்கு முன்னால், எங்கள் உறவுக்காரக் குடும்பம் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு ஆண்மகன்...அவன் எனக்கு சகோதரன் முறை!
அம் மகன் மீது கொண்டுள்ள அதீத பற்றால் , அவனது பெற்றோர் அவனை ரொம்பக் கண்டிப்புடன் அதே நேரம் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்கள்.. அவன் வீதியில் இறங்கி நண்பர்களுடன் விளையாடியதென்பது அபூர்வமான விடயம். அவனுக்கு யாரும் நண்பர்களாக இல்லை. ஆனால் அவனது தந்தைக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவனை என்னுடன் மட்டும் விளையாட அனுமதிப்பார். எங்கள் வீட்டிலும் அவர்கள் வீட்டுக்குப் போகத் தடையிருக்கவில்லை. எனவே எனது நண்பன் அவனாகவும், அவனின் நண்பி நானாகவும் இருந்தோம். என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் நண்பன் அவன்தான்..

எப்போதாவது அவன் வீட்டுக்குப் போவேன்..அவன் என்னை கிரிக்கெற் விளையாடத்தான் அழைப்பான். நாங்கள் இருவரும் கிரிக்கெற், அல்லது கள்ளன் பொலிஸ் என ஓடி பிடித்து விளையாடுவோம். அல்லது "நொண்டிக் கோடு ". "காடா வீடா" என ஏதோ விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவோம். அந்தப் பருவம் ரொம்பச் சுவையானதும், புதுமையானதுமாக இருந்தது.

என்னை விட அவன் ஒரு வயது சிறியவனாக இருந்தாலும், பெயர் சொல்லியே அழைப்பான். சில நேரம் சண்டை பிடித்தும், பல நேரம் சிரித்துப் பேசியும் எங்கள் சிறுவயது ஞாபகங்கள் புரண்டிருக்கின்றன. இன்று அவன் ரஷ்யாவில் மருத்துவனாக (ராக) பணிபுரிகின்றான்...

தொடர்ந்து வரும் நாட்களில் இப் பதிவில் எனது ஏனைய நண்பர்களும் இடம் பிடிப்பார்கள்...

சுவையான நண்பர்களின் அனுபவம் தொடரும் !

தவறுகளும் தண்டனைகளும்


இது ஒரு படமோ....நாவலோ இல்லை...
பல மாணவ விழிகளை அதிர்ச்சியாக்கிய உண்மைச் சம்பவம் !

அவன் பத்தாம் வகுப்பில் கற்கும் மாணவன்....வயதுக்கேற்ற உடல்வாகு!
கட்டிளமைப்பருவத் துடிப்புக்கள் (காதல் சேஷ்டைகளல்ல...) அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. அவனைச் சுற்றி வட்டமிடும் நண்பர் கூட்டங்கள் வேறு! .அவர்கள் இவனை ரசிக்க வேண்டுமென்பதற்காகவே இவன் ஏதாவது செய்வான்......

கற்பிக்கும் போது, படிக்க ஆர்வமில்லாவிட்டாலும் கூட, எதையாவது சொல்லி ஆசிரியர்களைக் குழப்பத் துடிப்பான். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவனைக் கட்டுப்படுத்தும் ஆயுதம் சிறிய தண்டனைதான்...ஏச்சுடன் அடியொன்று போடும்போது அடங்கிவிடுவான்...தன் நண்பர்கள் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்து மௌனமாகி விடுவான்.  கொஞ்ச நேரம் வகுப்புக்கூரை விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டேயிருப்பான். நாலைந்து தடவை அவன் பெயரை உச்சரித்து, பாடத்துக்குள் அவனை நுழைக்கும் போதே கொஞ்சமாவது கரும்பலகையைப் பார்ப்பான். ஆனால் பாடம் அவனுக்குள் நுழையாது..

ஏதோ, பெற்றோரின் வற்புறுத்தல், அவனை பல மைல் தொலைவிலிருந்து பாடசாலைக்குள் விரட்டுகின்றது ! பஸ் பயணம் அவனுக்கு விலக்கப்படமுடியாத சுமையாகிப் போனது!

சில நாட்களாக அவனை அவதானிக்கின்றேன்...எதையோ யோசித்துக் கொண்டிருப்பான்..அவன் தன் பிரச்சினையை எம்முடன் பகிர்வதாக இல்லை. அவனது போராட்ட  மனநிலையின் அழுத்தம் , இப்போதெல்லாம் அவனது குழப்படியை விழுங்கி விட்டது..அவனது அமைதி சற்று ஆச்சரியமான விடயம்தான்..

அன்று..........இடைவேளை மணி அடித்தோய்ந்தது..மாணவர்க் கூட்டம் வகுப்பிற்குள் நுழைய முற்படும் நேரம்..........

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, மாணவப் படையினர் மைதானத்தை நோக்கி ஓடுகின்றனர்..

"யாரோ........சண்டை பிடிக்கிறாங்க"

ஏனைய மாணவர்களின் கூவலைக் காற்றும் உள்வாங்குகின்றது. இவர்கள் ஏன் ஓடுகின்றார்கள்....?

"சண்டையை ரசிக்கவா.....விலக்கவா...அல்லது தாமும் இதனைப் போல் பழகிக் கொள்ளவா ......புரியவில்லையெனக்கு !

அவனுக்கும், பதினோராம் வகுப்பு மாணவனொருவனுக்கும் நடைபெறும் போராட்டமது...அந்த பதினொராம் வகுப்பு.மாணவன்....மாணவத் தலைவனாக இருப்பவன்!.

இவனிடம், அவன் ஏதோ ஒரு குறை கண்டு, அதற்காக இவனை அவனடிக்க, (மாணவர்த்தலைவர்களெல்லாம் இப்போ அதிகாரத்தை தன் கையிலெடுத்து ஹீரோவாக நினைக்கின்றார்கள் போல்) பதிலுக்கு இவனும் அடிக்க.........

தனியாள் சண்டை, வகுப்பு கோஷ்டி மோதலாக மாற, இவனுக்காக இவன் நண்பர்களும், அவனுக்காக அவன் நண்பர்களும் ரகஸியமாக யுத்தமொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்..

இந்தப் பிரச்சினை முற்றி, அந்த மூத்தவன் தன் நண்பனின் துணையுடன் இவனைத் தேடி வந்தான். இவனது சேர்ட் கொலர் அந்த மூத்த மாணவன் கையில்...............
சுற்றியிருந்த மாணவர்கள் முன்னிலையில் , பத்தாம் தர மாணவன் , பதினோராம் வகுப்பு மாணவனால் கீழே வீழ்த்தப்பட , அந்த மூத்தவர்கள் இருவரும் மாறி மாறி அவனின் முகத்தில் குத்தினார்கள்..

(இப்போதெல்லாம் கண்ட கண்ட படங்களைப் பார்த்திட்டு, தாமும் அந்த கதா பாத்திரமா மாறனும் நினைக்கிற பசங்கதான் அதிகம் )

அந்தச் சின்னவன் எழ முயற்சித்தான்..........முடியவில்லை..தன் உடலின் பின்புறம் யூனிபோமில் மறைத்து வைத்திருந்த கூரிய பளபளக்கும் கத்தியை , யாரும் எதிர்பாராத விதமாக உருவி வெளியே எடுத்தான். கத்தியைச் சுற்றியிருந்த கடதாசி மின்னல் வேகத்தில் காற்றில் பறந்தது. அவன் உருவிய வேகத்தில், அக்கத்தியின் விளிம்பு அவன் கையைப் பதம் பார்க்க, இரத்தம் வெளியே எட்டிப்பார்த்தது.

"சதக்"........

தன்னைக் கீழே விழுத்தி, அழுத்திக் கொண்டிருக்கும் எதிரி மாணவனின் நெஞ்சை நோக்கி கத்தி வேகமாகப் பாய்ந்தது...

அந்த மின்னல் வேகத்தில், கத்திக்குத்துக்கு இலக்காகவிருந்தவனின் நண்பன் பாய்ந்து அதனைத் தடுக்காவிடில் , நிச்சயம் கொலையொன்றும் அக் கொலைக் குற்றத்திற்காக சிறைத் தண்டனையோ , சீர்திருத்தப் பள்ளிக்கான அனுமதியோ இருவருக்கும் கிடைத்திருக்கும்...

கத்தியை பாடசாலைக்குள் கொண்டு வந்த மாணவன் விசாரிக்கப்பட்டு, அவனது தந்தையை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டான். இன்று அவன் ஓர் குற்றவாளி. அவன் தனது தற்காப்புக்காக கத்தியைப் பாவித்தாலும் கூட, பாடசாலைக்குள் அதனை கொண்டு வந்தது தவறு..அவன் பாடசாலையை விட்டு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இடைநிறுத்தப்படலாம். அவனது செயலுக்காக அவனது தந்தை அழுதார்..அந்தக் கண்ணீர் , வீட்டுக்குச் சென்றதும் ஆத்திரமாக மாறி, நிச்சயம் அம் மாணவனைத் தண்டிக்கும்.

அம் மாணவன் தன் முன்கோபத்தால் இன்று ஒரு கொலையாளியாக மாறியிருந்தால், அவனது எதிர்காலமும், அவனை நம்பி வாழ்க்கையொன்றை அவனுக்குக் கற்றுக் கொடுக்க முயன்று கொண்டிருக்கும் பெற்றோரின் கனவுகளும் அர்த்தமற்றுப் போயிருக்கும்......நினைக்கவே உடலெல்லாம் புல்லரிக்கின்றது!

(இது இச் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவன் சொன்ன தகவல்...இச் சம்பவம் இடைவேளை நேரமாகையால், ஆசிரியர்கள் யாவரும் ஆசிரிய ஒய்வறையிலிருந்த போது நடைபெற்ற சம்பவம், திட்டமிட்டே அந்த இரு மாணவர்களும் தாக்கப் போயிருக்கின்றனர்.

பாடசாலையென்பது ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக் கொள்ளும் கூடம். சிறந்த மனித உற்பத்திகளை சமுகத்திற்கு வழங்கும் முயற்சியில் நாம் போராடும் இக் கால கட்டத்தில், மாணவர்கள் தாம் காணும் சமூகத்தாக்கத்தினால் வன்முறையாளர்களாக மாறுகின்றனர்.. இந்த வன்முறை ஆரம்பமே பின்னர் பெரிய வன்முறைகளுக்கும் வித்திடுகின்றது........பாடசாலையை யுத்தகளமாக்க ஒருசாரர் முயன்று கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆசிரியர்த்தொழிலென்பது பெரும் சவாலே!

மாணவர்கள் விடும் தவறுகள், அவர்களின் வாழ்க்கைப்பயணத்தையே மூழ்கடித்து விடும் பெரும் தண்டனையாக மாறிவிடுகின்றது என்பதை இன்றைய அவர்களின் வாலிப , கட்டிளமைப் பருவ வயது உணர்த்தப்போவதில்லை.  அவர்கள் எதிர்காலத்தில் வாழ்வியலை உணரும்போதுதான்,  வாழ்வின் பசுமைகள் யாவும் அவர்களை விட்டு நீங்கிப்போயிருப்பதை உணர்வார்கள்..

இன்று நவீனத்துவத்தின் பிடிக்குள் பல நன்மைகளை அனுபவிக்கும் இவ்விளஞ்சமுதாயம், தனது ஒழுக்கவியலையும் தானே வகுத்து , அதனடிப்படையில் நடைபயில முயலவேண்டும்..இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையுமாகும்.

உளரீதியில் திருந்த முயலாதவனை, அடுத்தவர் திருத்த முடியாது. இதுவே நிஜம்!
பூங்காவனம்


+


திருமறை