About Me

2012/09/29

விரல் தொடும் ஸ்பரிசங்கள்



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

நம்மை விட்டுக் கடந்து சென்றவை ஏதோவொரு பொழுதினில் ஞாபகப்படுத்தப்படும்போது மனசெங்கும் மகிழ்ச்சி நிரப்பப்படுகின்றது. அந்த வகையில் நான் கடந்து சென்ற பாதையில், விட்டுச்சென்ற சில தடங்களை அதாவது கணினி தொடர்பான நினைவுகளைப் பகிரப்போகின்றேன்......

அறியாமையையை அறியாமலிருப்பதுதான் அறியாமை!

நான் படிக்கின்ற காலத்தில் கணனி எங்கள் பாடசாலைக்குள் அறிமுகப்படுத்தப்பட்டது. விஞ்ஞான ரீச்சர் அவற்றைப் பாடத்திற்காக இயக்க, நாம் அவற்றை ஆச்சரியத்துடன் பார்த்து விழிபிதுக்குவோம். ஆனால் அதனை இயக்கவேண்டுமென்ற ஆசை, நிறைவேறாத அழுத்தங்களாக நெஞ்சில் படிந்து கிடந்தது..

அது யுத்தகாலம்...பொம்பரும், ஹெலியும், ஆட்லறியும் மனதில் பீதியை விதைத்துக்கொண்டிருந்ததால் கணனி கற்கை பற்றிய கனவும் காய்ந்துதான் போனது......

நாலைந்து வருடங்களின் பின்னர் க.பொ.த  உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று, உயர்படிப்புக்கோ தொழிலுக்கோ தயாராகிக் கொண்டிருந்த காலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கணனி கற்கைநெறிக்காக விண்ணப்பிக்கும்படி அறிவித்தலை வெளிவிட்டுக்கொண்டிருக்க, மீண்டும் மனதில் ஆசை தளிர்த்தது...ஆனால் அன்றைய காலத்தில் கணனி பற்றிய பெரிய எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் பெற்றவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன்  யுத்தச் சூழ்நிலை வேறு......சற்று தொலை நோக்கி படிக்க அனுமதி கேட்டால் நிச்சயம் வீட்டில் ஏச்சு விழும் என்ற காரணத்தால் சொல்லாமல் மறைக்கவும், யுத்தம் தீவிரமாகி நாம் இடம்பெயரவும் காலம் சரியாகிக் கிடந்தது..

இடம்பெயர்ந்தோம்......எதிர்பாராத சூழ்நிலையில்...!

புதிய இடம், புதிய சூழல், புதிய மொழி .......வாழ்வையே திசை மாற்ற, மனதில் கருக்கட்டப்பட்டிருந்த கனவுகளும், ஆசைகளும் மறைந்து போயின.

இருந்தும் ஓரிரு வருடங்களில் பத்திரிகையில் காணப்பட்ட விளம்பரமொன்று மீண்டும் கணனி தொடர்பான ஆசைத்தணலை என்னுள் உசுப்பேற்ற.. போராட்டத்துடன் வலியை உணர்ந்து, பெற்றவர்களிடம் முறையிட்டேன் நானும் கணனி கற்கவேண்டுமென!..

அது.டெக் ஸ்ரீலங்காவின் கணனிக்கற்கை பற்றிய விளம்பரம்.. நுண்மதி தெரிவுப்பரீட்சை நடத்தப்பட்டு, அதன் மூலமாகப் புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டன. அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு இலவசமாகவும், இன்னும் தொகுதியினருக்கு கால்வாசிக் கொடுப்பனவிலும், அடுத்த தொகுதியினருக்கு அரைவாசிக் கொடுப்பனவிலும் புலமைப்பரிசில் வழங்கப்படுமெனவும், தெரிவு செய்யப்படாதவர்கள் முழுக்கட்டணம் செலுத்தி கற்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது.   எனினும் நாடுமுழுவதும் ஆயிரம் பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்படுவார்களென்ற கட்டுப்பாடும் வரையறையும் இவ்விளம்பரத்தை அழுத்தின.

நானும் என் இருசகோதரிகளும் அப்பரீட்சைக்கு முகங் கொடுத்து எழுதினோம். ஆயிரக்கணக்கானோர் பரீட்சை மண்டபங்களை நிறைத்திருந்தனர். பரீட்சை முடிவுகள் வெளிவந்தபோது என் சின்னத்தங்கைக்கு (தற்போது டாக்டராக உள்ளார்) மாத்திரம் இலவச புலமைப்பரிசிலும், எனக்கும் மற்ற தங்கைக்கு கால்வாசிக் கட்டணமாக 3 ஆயிரம் மாத்திரம் செலுத்தி 6 மாதக் கற்கையைத் தொடரும்படியும் கூறப்பட்டது. அப்பொழுது கணனிக் கட்டணமாக 12 ஆயிரம் அறவிடப்பட்ட காலம்....

3 ஆயிரம்................!

அகதியாக நாம் இடம்பெயர்ந்த நிலையில் மூவாயிரம் என்பது நினைத்தும் பார்க்க முடியாத பிரமிப்பான ஒரு தொகை.  மறுபுறம் சிங்கள மொழியிலான அக்கற்கையை மேற்கொள்ள முடியாதளவு மொழிப்பிரச்சினையும் தடைகளாக இருந்தன. அக்கற்கைக்கான அனுமதிக் கடிதம் இன்னும் என் பைலை (கோவையை) நிரப்புகின்றது. மீண்டும் என் கணனிக் கனவுகள் உடைந்ததால்  கருக்கட்டப்பட்டிருந்த  அவ்வாசைகளும்  காணாமல் போயின. 

அதைத்தொடர்ந்து வந்த காலத்தில் எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கவே, அக் கடமைகளில் தீவிரமாக நானும் மூழ்கி கணனியையே மறந்து போனேன். அவ்வாறான ஓர் காலத்திலேயே எமது பாடசாலைக்கும் நலன்விரும்பியொருவர் கணனியொன்றை அன்பளிப்புச் செய்திருந்தார். அக் காலத்தில் கணனிப்பயிற்சி பெற்றோர் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே!

அப்போது எம் பாடசாலையில்  அதிபராக இலக்கியவாதியும் கலாபூஷணமுமாகிய அன்பு ஜவஹர்ஷா சேர் கடமையாற்றிக் கொண்டிருந்தார். எனது சிறப்பான கடமைகளின் நிமித்தம், பாடசாலை முகாமைத்துவக் கடமைகளும் எனக்கு பங்கிடப்பட்டிருந்தன. என் கையெழுத்துக்கள் அழகாக இருக்கும். எனவே பாடசாலை முகாமைத்துவம் சார்பான கடிதங்கள், அறிக்கைகள் எல்லாமே என் எழுத்துக்களால் நிரம்பிக் கொண்டிருந்தன.

ஒரு நாள்........................!

அதிபர் ஜவஹர்ஷா சேர், என்னை அழைத்து, மர்ஹூம் வஹாப் சேர் கொடுத்திருந்த ஒரு மீலாத்விழா தொடர்பான கடிதத்தைக் கொடுத்து அதனைத் கணனியில் அதுவும் தமிழில் தட்டச்சு செய்து தரும்படி கூறினார்.

மிரண்டேன்......கணனியிலா........!

சேர்......எனக்கு கம்பியூட்டர் தெரியாது......விழிகள் கலங்க, மனம் பீதியுடன் வார்த்தைகளை உதிர்த்தபோதும், அவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

"உங்களுக்கு இது பெரிய விசயமில்ல மகள்.   கெதியில தெரிஞ்சுக்கலாம்"

நம்பிக்கையை எனக்குள் விதைத்து, கணனியையும் இயக்கித் தந்தார். தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணக்கூடிய குறிப்புக்களையும் தந்தார்.

மகள்....! (அப்படித்தான் அவர் சின்னவர்களை அழைப்பார்)

இதப் பார்த்து டைப் பண்ணித்தாங்க...........மற்றதெல்லாம் நான் செய்கின்றேன்"
.
வேறு வழியின்றி பயத்துடன் ரைப் செய்தேன். ரொம்ப ரொம்ப அவதானமாக என் விரல்கள் விசைப்பலகைகளை அழுத்தி முடிக்க அதிக நேரமெடுத்தது. அன்று ஒரு கடிதத்திற்காக நான் செலவழித்த நேரம் ஒரு மணித்தியாலம்.

(முதன் முதலாக கணனியில் எனது பெயரையும், என் குடும்பத்தார் பெயரையும் திகதியிட்டுத் தட்டச்சுச் செய்தேன். இன்றும் அப்பதிவைப்
பத்திரப்படுத்தியுள்ளேன்.)

எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் நிறைவேற்றி அவரிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அவர் அக்கடிதத்தை மெருகூட்டினார். அவர் மெருகூட்டும் போது கடைப்பிடித்த விடயங்களை அவதானித்து உள்வாங்கினேன். இவ்வாறாக பல தடவைகள் நிகழ்ந்தன. என்னைச் சுற்றி வந்த  பார்வை, கேட்டல் ஞானத்தினூடாக ஒரு சில கணனி அடிப்படை விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.

அதன் பின்னர்  அதிபர் ஜவஹர்ஷா சேர் அவர்கள் தனது லாப்டொப்பை எனது வீட்டில் தானாகவே கொண்டு வந்து தந்தார். நான் ஏற்கனவே கற்றுக் கொண்ட விடயங்களின் அடிப்படையில்,  சுயமாக அவரது லாப்டொப்பில் ஒரு வாரம் முயற்சித்து  சில விடயங்களைக் கற்றுக் கொண்டேன். எனது முயற்சி, ஆர்வத்தைப் பார்த்த என் வாப்பாவும் கணனி தொடர்பான சஞ்சிகைகள், புத்தகங்கள் வாங்கித்தருவதில் ஆர்வங் காட்ட,  சுயமாக வேர்ட், பவர் பொயின்ட், எக்ஸல் என்பவற்றையும் புத்தகம் மற்றும் தேடல் மூலமாகக் கற்றுக்கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து வந்த வருடங்களில், சுயமாக நான் கற்றுக் கொண்ட கணனி பற்றிய அதிகமான விடயங்களைப் பரீட்சித்துப்பார்க்கும் தளமாக பாடசாலைக் கணனி எனக்கு கைகொடுத்தது. கல்வியமைச்சால் பாடசாலைக்கு 20 கணனிகள் வழங்கப்பட்டபோது அதற்கென கணனி கூடமும் தயாரிக்கப்பட்டது, அக்கணனி கூடம் (Computer Lab) என் பொறுப்பிலே விடப்பட்டது. க.பொ. த (உ/த) வகுப்பிற்கும் GIT படிப்பிக்கும் ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். இதன் பொருட்டு கல்வியமைச்சு இசுருபாயாவிலும், அநுராதபுர கணனிக் கற்கை வளநிலையத்திலும் எனக்கு சில கணனிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. பயத்துடன் ஆரம்பிக்கப்பட்ட என் கணனிப் பயணம் என் முயற்சியால் சிறப்பாக நடைபயின்றது. மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டுமென்பதற்காக நான் இன்னும் பல கணனி தொடர்பான விடயங்களைத் தேடிக் கற்றுக்கொண்டேன்.

காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, பாடசாலை முகாமைத்துவச் செயற்பாடுகளின் கணனி வழங்கும் வேலைகள் யாவும் என்னால் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக நிறைவேற்றிக் கொடுக்குமளவிற்கு என்னை வளர்த்துக் கொண்டேன்.

 இவ்வாறாக என் தேடலை வளர்த்தும், விருத்தி செய்தும் கொண்ட போதுதான் எங்கள் வீட்டிலும் தந்தையும் கணனியொன்றை வாங்கியிருந்தார்.

அது தந்தையின் கணனி..தேவைக்கு மாத்திரமே நான் பயன்படுத்தினேன். பிறர் பொருட்களை நான் அதிகம் அனாவசியமாகப் பயன்படுத்துவதில்லை.....
என்னுழைப்பில் கணனியொன்றை வாங்க வேண்டுமென்ற ஆசையொன்றும் மெல்ல முகிழ்த்தது. அக்காலத்தின் வருகைக்காக காத்திருந்தேன்.

அப்பொழுது இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகள் பலருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களுக்கு கணனியும் பயிற்சியளிக்கப்பட்டது. நானும் கணனிப்பயிற்சியளிக்கும் வளவாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். வவுனியா நைட்டா நிறுவனத்தில் மூன்று மாதம் கணனிப் பயிற்சியளித்தேன். இது எனக்கு வித்தியாசமான அனுபவம்.

முறைப்படி பயிற்சியேதுமின்றி தைரியமாகவும், நம்பிக்கையுடனும் கணனியுலகில் வலம் வந்த என்னை கல்வியமைச்சு ICDL பயிற்சியளிக்க தெரிவு செய்தது. அநுராதபுரம் IDM நிறுவனமே இப்பயிற்சியளித்தது. எமக்கான கட்டணங்களை அரசு செலவளித்தது. பல போட்டிக்கு மத்தியில் இந்தப் புலமைப்பரிசில் கிடைத்தது எனக்குரிய அதிஷ்டமே என்றுதான் சொல்ல வேண்டும். இது விடுமுறை தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வருடப்பயிற்சியாகும். நான் சுயமாக கற்றுக்கொள்ளாத  MS ACCESS  ஐ இங்குதான் கற்றுக் கொண்டதுடன், ஏற்கனவே அறிந்து வைத்துள்ள ஏனைய விடயங்களை மேலும் மெருகேற்றிக் கொண்டேன். இப்பயிற்சியில் மொடியூல்கள் வழங்கப்பட்டன. ஆனாலும் இப் பயிற்சியில் Internet ஓரம்சமாக இருந்தாலும் கூட அந்த விடயங்கள் சரிவரப் பயிற்சியளிக்கப்படவில்லை. ஆக மொத்தத்தில் இணையம் சார்பான செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய துறைகள் என்னுள் மேலும் மெருகூட்டப்பட்டன.

ஈராண்டு காலம் கழிந்தது..... ICDL  பயிற்சியை முடித்தவர்களுக்கு கல்வியமைச்சு  IPICDL பயிற்சியை வழங்கியது. என் பெயரிலேயே பயிற்சிக்கான கடிதம் வந்ததால், புதிய அதிபரும் என்னை பயிற்சிக்காக அனுப்பி வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்.. இதுவும் விடுமுறை தினங்களில் கற்றுக் கொண்ட மூன்றுமாத பயிற்சியாகும். .மூன்று மாதமும் இணையமே ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டது.

என் வாழ்வின் போக்குகளை மாற்றித் தந்தது இப் பயிற்சிநெறியே ஆகும்.. ஒவ்வொருவருக்கும் காலை 9 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை கணனியில் இணையத்தைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. ஏனெனில் பாடசாலைகளுக்கிடையில் வலைப்பின்னல்களை உருவாக்கி. அப் பாடசாலைக் கல்வி வழங்கலை ஆசிரியர்கள் தமக்குள் பரிமாறி, மாணவர்களின் கல்வி வழங்கலை அதிக வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடனேயே இப்பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சி 2010 ஒக்டோபர் 1 ல் ஆரம்பிக்கப்பட்டது. அன்றுதான் என் முகநூல் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. எனது இப்பயணத்தின் வயது 2 வருடமேயாகும். ஆனால் நானிங்கு கற்றுக் கொண்ட விடயங்களும் அனுபவங்களும் அதிகம்.

பயிற்சிக்காக கட்டாயம் மின்னஞ்சல் தயாரித்த போதுதான் பயிற்சியில் கலந்து கொண்ட  நட்புள்ளங்கள் முகநூல் பற்றிக் கூறி, என்னையும் ஆரம்பிக்கும்படி வற்புறுத்தினார்கள். அவர்களிடம் ஏற்கனவே முகநூல் பக்கங்கள் இருந்ததால் பயிற்சி தொடர்பான விடயங்களை சட் மூலம் பரிமாற அறிவுறுத்தப்பட்டபோது, எனக்கு முகநூல் பக்கம் அவசியப்பட்டது. ஆனால் முகநூல் பக்கத்தை எப்படி ஆரம்பிப்பது.................. தெரியவில்லை எனக்கு!

 அச்சூழலில் பயிற்சியில் கலந்து கொண்ட சிங்கள மொழி பேசும் நண்பனே (எரிக் ) என் முகநூல்பக்கத்தை உருவாக்கி சில அடிப்படை விடயங்களையும் சொல்லித் தந்தான்.. அவ்வாறே இன்னுமொரு சிங்கள நண்பன் (அஜித்) வலைப்பூ பக்கமொன்றை எனக்குள் அறிமுகப்படுத்தி அதனையும் உருவாக்கித் தந்தான். இணையத்தில்  பதிவுகளை தமிழில் வெளியிடவே ஆர்வப்பட்ட நிலையில் Tamil Font ஒன்றும் எனக்குத் தேவைப்படவே, எங்களுக்குப் பயிற்சியளித்த சிங்கள சகோதரியிடம் எனது தேவையைக் கூறினேன். அவர் தாம் சேமித்து வைத்திருந்த Tamil Font  ஐ எனக்குத் தந்துதவ, எனது இணையப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.  ஆக மொத்தத்தில் இன்று நான் இணையத்தில் தமிழில் வலம் வரக் காரணமாகவிருந்தோர் சிங்களமொழி பேசும் எனது சகோதரர்களே!

அதன்பிறகே கணனியொன்றை வாங்கி, நானாக மேலும் பலவிடயங்களைக் கற்றுக் கொண்டேன். தினமும் பார்வை, கேட்டல் ஞானங்களுடன் எனது அறிவினைப் புதுப்பிப்பதில் நான் சற்றும் தயங்கவதில்லை.

ஒரு சில மாதங்களில் நிறைய விடயங்களை கணனிப் பயிற்சி மூலமாகக் கற்றுக் கொள்வதிலும் பார்க்க, பல வருடங்கள் நானாகவே முயன்று தேடி சிறுகச் சிறுகக் கற்றுக் கொண்டது, கொள்வது எனக்கு சாதனையாகத்தான் இருக்கின்றது.

இந்தக் கணனிப்பயணத்தில் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் நிறையவுள்ளது. அவற்றைக் கற்றுக்கொள்ள  தயார்படுத்தியபடியே  ஆர்வம், தன்னம்பிக்கை, முயற்சியுடன் அவற்றைத் தேடிப் பயணிக்கின்றேன்........ !

நட்புள்ளங்களே.........

என் இச்சுய கற்றலின் முன்னேற்றத்தை அளப்போரும், விமர்சிப்போரும் நீங்களே........என் வழிப்பயணத்தின் துணையாக உங்கள் நட்பும் வாழ்த்தும் ஊக்குவிப்பும் தொடர்ந்துவர வேண்டுமென்பதே என் அவா!......................
.இன்ஷா அல்லாஹ்..!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!