About Me

2012/09/12

கடற்பூக்கள்


கனவுகள் மெல்லச் சரிய
காற்றின் கூவல்களில் தேகம் சிலிர்த்திடும்
நேரம்.................
அண்டப் பறவையின் நட்சத்திரச் சிறகுகள்
ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தன!

இருற்றிரையை மெல்லன விலக்கி
மருண்டு நின்றாள் நிலாப் பெண்!
சுருண்டு கிடந்த கடலலைகள்
மிரண்டோடின
கரைப்பரப்பின் மணற்றிணிவில் தம்மை
மறைத்துக் கிடக்க!

படகுகள்................!
பறந்தன  நீரலைகளில் - தம் பாய்ச்
சிறகினை மெல்லன விரித்தும்......
தெறிக்கும் அலைகளில் சற்றிடறியும்!

வெருண்டோடும் மீன்கூட்டம்
கரை வலையில் சட்டென தடக்கி வீழவே...........
உரமேறிய மெம் கரங்களின் வலிப்பில்
அறுந்து வீழ்ந்தன சுவாசப்பூக்கள்
மரப் படகின்  வெளிதனை
நிரப்பியவாறே!

விறைப்பான துடுப்பின் மோதல்
கரையொதுங்கும் அலையைத் தடுக்க..........
சிறகு விரித்த பறவைகள்
மறுகரைக்கு மனுப் போட்டே
இருப்பிடமாற்றுகின்றன பீதியில்!

படகின் விசை கண்டு
வெடவெடத்த விண்பூக்கள்
கடல் விம்பங்களாய் தெறித்துக் கிடக்க.........
பயணிக்கின்றோம்
கனக்கும் வலைகள் காலை மிதிக்க
பணமாகும் மீன்களுடன்!

நிமிடங்கள் நிசப்தமாய் கரைய
அமிழ்ந்த விரவும் உறக்கமவிழ்க்க..........
விடியல் ஸ்பரிசத்தில்
படகினிதயமும் உஷ்ணமுறுஞ்ச.........
விடிவெள்ளிப் பாஷையில்
கடற்றிசை வழிகாட்டி விரிந்தது!

நீண்ட  அலைப் பாயில்
உருண்டு பிரண்டுழைக்குமிந்த
வயிற்றுப் பிழைப்பிற்காய் ............
உயிரறுந்து கிடக்கும் மீன்களே - எம்
செல்வங்களாய் வாழ்க்கைப் பையை நிரப்ப........

அல்லலுடன் மறுகரையிலிருக்கும்- எம்
நல்லுறவுகளின் பிரார்த்தனைப் பலத்தில்
தள்ளாடி கரை திரும்புகின்றனவே
வள்ளங்களும் வனப்புடனே !



ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!