காதலும் உறுதிமொழிகளும்காதல்......... விழிகளின் சந்திப்பில் உருவாகும் அழகான மொழி! ஆனால் இப்பொழுதெல்லாம் அக்காதல் மலிவான உணர்வாகிவிட்டதால், யதார்த்த வெளிகளில் துணிச்சலுடனும், நம்பகரத்துடனும் நீடிக்கும் தன்மை மறைந்து விடுகின்றது.

"நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்......
காதலியுங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்வீர்கள்"

ஆனால் நமக்குள் பரவசம் தந்து, இருதயத்தைப் போஷிக்கும் இக் காதலின் ஜீவன் இன்னும் உயிர்வாழ்கின்றதா என்றால், அது நூற்றில் பத்துவீதமாகவே இருக்கின்றது..

"கண்டதும், தினமும் ஓரிரு வார்த்தைகள் பேசியதும், கட்டியணைத்து முத்தமிட்டதும், காதல் முகிழ்க்குமா! மனசின் அன்பின் தழுவலும், ஊடலும், சிலிர்ப்புமல்லவா காதலின் நாகரீகம் ! இக் காதல்தானே திருமணத்தின் நிழல் தேடி தன்னைப் பொறுத்திக் கொள்ளும்.

இப்பொழுதெல்லாம் வாலிபங்கள் தம் நேரங்கடத்தலுக்கென ஓர் ஜோடியைத் தேடி, தமது திருமண நாட்கள் வரும் வரை காலம் கழிப்பதே காதலின் சிறப்பாகிக் கிடக்கின்றது. அவர்களின் எண்ணங்களைப் போஷிக்கும் ஊடகங்களாக தொலைபேசிகள் முதலிடம் வகிக்கின்றன. எஸ் எம் எஸ் கள் மூலமாகவே பெரும்பாலான காதல் தூதுக்கள் உரப்பேற்றப்படுகின்றன..
ஆனால் எத்தனை காதல் நிஜக்காதலாய் யதார்த்தத்தில் பதியப்படுகின்றன..

இப்பொழுதெல்லாம் காதலின் அரிச்சுவடி (பெரும்பாலும்) முத்தத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன. இவ்வுஷ்ணமூட்டலினால் தன்னை மொத்தமாக இழக்கும் பரிதாபமான நிலை பெண்களுக்கே பெரும்பாலும் ஏற்படுகின்றது. ஏனெனில் பெண் சுமக்கும் களங்கம், அவள் கல்லறையிலும் நிரந்தரப் பதிவாகி, விமர்சனமாகி கிடக்கும்! பெண் தன்னையிழந்தால் அவள் பாவத்தின் அடையாளமாகி நிற்பாள்..இயற்கையின் எச்சரிக்கையிது! இறைவன் செதுக்கிய உடற்கூறின் ரகஸியமிது.

ஆண்கள் காதல் தூதிட்டதும், தன்னை மறந்தவர்களாக பெண்கள், அவர்களைச் சந்திப்பதும், அலைபேசியில் கொஞ்சிக் குலாவுவதும், ஜோடியாக அரவணைத்துத் திரிவதும், பார்க், பீர்ச் எல்லாம் தம்மை நிரப்புவதும், ஈற்றில் மொத்தமாக தம்மையிழப்பதும் காதலின் பல அத்தியாயங்களாக இவ்யுகத்தில் முகங்காட்டி நிற்கின்றன...

காதல் போயின் சாதல்...........!

இது அந்தக்கால காதலின் துடிப்பான நிலைமை! ஆனாலின்றோ,
ஒரு காதலி இருக்கும் போதே, வேறு பலருக்கும் தூதுவிடும் காதலர்களே பெரும்பாலுமுண்டு ( ஒரு சில பெண்களுமுண்டு.....மறுக்கவில்லை)

இவ் வானவில் காதலில் ஆண்களால் பெரும்பாலும் பரிமாறப்படும் சில ஆயுள் குறைந்த வாக்குறுதிகள் இவற்றைக் கருதலாம்-

  • நான் உன்னை ஒருபோதும் மறக்க மாட்டேன்
  • ஒருபோதும் அழவே விட மாட்டேன்
  • சத்தியமாக உன்னை நம்புவேன்
  • உன்னைக் கண்ணியப்படுத்துவேன்
  • உன்னை துன்புறுத்த மாட்டேன்
  • உனக்கு ஒருநாளும் பொய் சொல்ல மாட்டேன்
  • நல்லதையே உனக்கு செய்வேன்
  • இவ்வுலகம் அழியும் வரை உன்னைப் பிரியவே மாட்டேன்
  • என் மூச்சிருக்கும் வரை உன்னை காதலிப்பேன்
ஆஹா..அழகான இப் பொன்மொழிகள் காதலர்களால் நியாயமாக நிறைவேற்றப்பட்டாலே, காதலில் துயரும் பிரிவும் ஏது.....?

இப்பொழுதெல்லாம் I Love You எனும் வார்த்தைகளே வெறும் வேடிக்கையான பொழுதுபோக்கிற்காக உதிர்க்கப்படுகின்றனவே தவிர, உள்ளார்த்தமான அன்பினாலல்ல!

காதல் பொய்மை...........திருமணம் நிஜம்!

காதலர்களே.............பொய்மையான காதலை வார்ப்பதாக , செயல் காட்டி மறு மனதில் ஏமாற்றங்களை  திணிப்பதை விட, சற்று தள்ளிநில்லுங்கள் பாவத்தினராகாமல்!

காதலியுங்கள்.....தவறல்ல..............திருமணமாகிய மனைவியை, அவள் தரும் உங்கள் வாரிசை, அவள் மூலம் நீங்கள் அனுபவிக்கும் வாழ்க்கையை காதலியுங்கள்...அப்பொழுதே வாழ்க்கையெனும் பாடம் உங்களுக்கு சுவாரஸியமாக இருக்கும் !


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை