அடடா.........டொக்..........டொக்..............!

இப்பொழுதெல்லாம் ...........காற்றின் சலசலப்பில் வீட்டுக்கூரையின் தலையை அடிக்கடி விளாங்காய் குட்டிக் கொண்டிருந்தது..

"பிள்ள..வெளில பேய்விடுவாள்......கவனம் ........தலைல விழுந்திடும்"

சின்னவளைக் கண்காணிக்கும் தந்தையின் குரலெடுப்பால், அதன் விழுகைச் சத்தம் அடிக்கடி என் கவனத்தைக் கிள்ளிக் கொண்டிருந்தது!

வீட்டின் வெளிவாசல் கேட் (படலை) சந்திக்குமிடத்தில் தான் , தன் கிளைகளைப் பரப்பி நிமிர்ந்து நிற்கின்றது  பெரிய விளாமரமொன்று.. இப்பொழுது விளங்காய்  சீசன்..மின்குமிழ் பொருத்தியிருப்பது போல , மரம் நிறைத்து விளாங்காய்களும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

வழமையில் கனிந்த விளாம்பழமென்றால் சீனி பிரட்டி ஒருபிடி பிடிப்பேன். செங்காயென்றால் உப்பில் நனைத்த நிலையில், அது என் சமிபாட்டுத் தொகுதியை நிறைத்திருக்கும்............

ஆனால் இம்முறை மரத்தில் அதிகமாகக் கண்ட விளாங்காய் ஆர்வத்தைத் தரவில்லை. எதனை அதிகமாகக் காண்கின்றோமோ, அது அலுத்துவிடும் என்பதனை சும்மாவா நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

பாடசாலை விடுமுறை விட்டிருந்த ஓரிரு நாட்களில், வெறுமைப்பட்ட என் பொழுதுகளை விரட்ட, நொறுக்கித்தீனியாக விளாங்காயைச் சுவைத்ததில். அதன் ருசி பிடித்துப் போக, இப்பொழுதெல்லாம் விழும் முதல்காயை எனக்கு எடுத்து வைப்பதே என் தந்தைக்குக் கடமையாகி விட்டது. அதிலும் செங்காயின் உட் சதையைவிட, அதனைச் சூழ்ந்திருக்கும் அந்த ஓட்டுப்பகுதியின் சுவையோ தனி!

வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எங்கள் கார்க்கண்ணாடியினை அது பதம் பார்த்துவிடுமோ வென்ற ஆதங்கமும், அதன்பால் என் தனிப்பட்ட கவனத்தைத் திசைதிருப்பி விட்டிருந்தது.

பகலில் காற்றுடன் கூடிய வறட்சி எவ்வளவு இருக்கின்றதோ, அதே போல் இரவில் கடும் குளிருடன் கூடிய காற்றும் உடலை மெதுவாக அழுத்தி இதம் தருவது தொடரான நிகழ்விங்கே!

இந்தக் காற்றின் பலத்தில் சிக்குண்ட  பல விளாங்காய்கள் நிலத்தில் சிதறி விழுந்து, முற்றத்தைக் காயப்படுத்திக் கொண்டிருந்தன. நல்லவை எமக்குள் உறவாக, ஏனையவை அழுக்குக் கூடைக்குள் தலைகுப்புறமாக ஒன்று சேர்ந்தன.

பின்னேரங்களில் அயல்வீடுகளிலுள்ள சிறு வாண்டுகள் எங்கள் வீட்டுமுற்றத்தில்  அணிதிரள்வார். மரத்துக்கும் அவர்களுக்குமிடையில் கற்களால் சிறு யுத்தம் கூட நடக்கும்.சிறுவர்கள் தம் யுத்தத்தில் வெற்றி பெற்ற களிப்பில் கை நிறைய விளாங்காயை அள்ளிக் கொண்டு போவார்கள். அவர்களின் களிப்பும், என் ரசிப்பும் தொடரத்தான் செய்தன பல மாலைப் பொழுதுகளில்!

இன்று மாலை திடீரென வீட்டுக் கேட்டைத் தள்ளிக் கொண்டு ஓர் ஆங்கிலத் தம்பதிகள் எமது வீட்டுக்குள் உள் நுழைய, வீட்டிலுள்ளோர் முகத்தில் கலவரம் கோடாகிப் படிந்தது.

வந்தவர்கள் எதுவுமே பேசவில்லை, எமது மௌனத்தையும், ஆச்சரியமான புன்னகைகையும் தமது சம்மதமாகக் கருதியவாறு, தம் கைப்பையில் செருகி வைத்திருந்த "டிஜிட்டல்" கமெராவை இயக்கி, விளாமரத்தை பல க்ளீக் செய்தார்கள். அவர்கள் விசிறிய ஒளிவீச்சில் மரம் நாணிக் கோணியிருக்க வேண்டும். வழமையை விட காற்றில் மிதமாக அசைந்தது. அவர்கள் தம் மகிழ்வை புன்னகையாக்கி, தம் வேலையை நிறைவேற்றிய ரசிப்பில்  நன்றி செலுத்தியவாறு புறப்பட ஆயத்தமானார்கள்.

ஏற்கனவே, வீட்டில் சேகரிக்கப்பட்டிருந்த சில பெரிய விளாம்பழங்களை பையிலிட்டு அவர்களிடம் கொடுத்த போது, இதழ்கள் குவித்து இருவருமே ஒரே நேரத்தில் நன்றியை தந்தவாறு புறப்பட்டனர்.

புறப்படும் நேரத்தில் கூட, ஓர் விளாங்காயை உடைத்து, அதன் சுவையை நாவில் பரப்பியவாறு வீதியிலிறங்கி நடக்கத்தொடங்கினர். அவர்கள் போகுமழகை நான் பல நொடிகள் விழியில் விழுத்தி ரசித்துக் கொண்டிருந்தேன்.

எது அதிகமாகக் கிடைக்கின்றதோ, அது நமக்குள் அற்பமாகவும்
எது அற்பமாகக் கிடைக்கின்றதோ,  அது நமக்குள் அபூர்வமாகவும் தோன்றிவிடுகின்றது. இதுதான் மனித இயல்பு. மனிதன் தன் மனங்களின் அரசாட்சியினூடாகவே, தன் வழிப்படுத்தலை மேற்கொள்கின்றான் என்பதே நிதர்சனம்!2 comments:

  1. Vall Nal Muzhuvathum un
    Kaiyal Sapid Vendum Edru Ninaithirunthen,
    Aanal Indru Vaikarusi Kidaikumo Kidaikatho
    Endru Engikondirukiren....

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை