வேள்வியும் கேள்விகளும்!


கவிதைகளால் நேசிக்கப்படுமென்
ஒவ்வொரு கணப்பொழுதிலும்..........
என் மனம் உனையே  நிரப்பிக்கொண்டிருக்கின்றது
உணர்வுகளால்!

பாசக்கலவைக்குள் வீழ்ந்து கிடந்த
உன் பார்வைகளின்று........
ஞாபகங்களாய்  வெடித்துச் சிதறுகின்றன
குருதிக் கசிவோடு!

எங்கோ தெறித்து வீழ்ந்த மழைத்துளியாய் - நீ
நசிந்து கிடக்கும் மனப்பாறையிலிருந்து .........
உனை மீளுறுஞ்சும் வேராய்
பயணிக்கின்றேன் நம்பிக்கையோடு!

இரவின் நிசப்தத்திலும் மறுக்குமென் தூக்கம்
இப்பொழுதெல்லாம் ......
நீ வீசிச்சென்ற கவிதைகளுக்காகவே
காத்துக்கிடக்கின்றன அன்புடன்..........!

உன் உதட்டோரம் மின் பாய்ச்சி
நீயிட்ட  கவித் தூதெல்லாம் - உன்
வெறுமை பட்டதாலின்று வேரறுந்து
கதறுகின்றன மரண அவஸ்தையில்!

அடர்முடி தரித்த வுன் மார்போரம்...........
வருடி விடும் என் விரல் நீவல்களெல்லாம்
கேவியழுகின்றனவே............
பாவியாயாயென் சரிதங்களில் நீ வந்துபோவதால்!

அன்பின்  இம்சைகள் மனசை யழுத்த
விழிகளை நிரப்புகின்றேன் கண்ணீரால் - உன்
ஞாபகங்களாவது  என்னுள் உலராமலிருக்கட்டுமென்று......
நீயோ முட்படுக்கையிலென்னைத் தள்ளுகின்றாய்!

வண்ணச்சிட்டாய்  பறந்து...........
சிறுகிளை தேடும் கிள்ளையென்னில்
சிறகறுத்து நீ தந்த காயங் கூட..........உன்னை
நலம் விசாரிக்கின்றன என் மெய்யன்பால்!

இப்பொழுதெல்லாம் நீ .......... நீயாகவில்லை!!
புரிகிறது ....................!
என் உயிரறுத்துன் துரோகத்திலென்னைப் பதியமிட
கற்றுத் தந்தது யாரோ......உன் காதலோ !

உன் இலக்கியங்களால் திருடப்பட்ட  என் மனசை
நீயே ஏலத்தில் விட்டாய் உன்னலத்திற்காய் .......
என்னையும் ஏப்பமிட்டே பிரிவில் கிடத்தி
குதுகலிக்கின்றாய் இரக்கமற்றவனாய் !

நேற்றென் நெஞ்சில் வீழ்ந்த வுன்
வார்த்தைகளும் நேசிப்புக்களும் - வெறும்
விசமென அறிவிப்புச் செய்யப்பட - நீயோ.....
மோச வில்லனாகின்றாய் யுன் அற்பக் காதலுக்காய்!

உன் மௌனம் எனக்குப் புரிகிறது ...............
வெறும் கவியில் மட்டும் நுழைத்த வுன் பாசம்
வெளுத்ததில் வெட்கித்துக் கிடக்கின்றாயோ- உன்
இருப்பையு மென்னிலிருந்து மறைத்து !

கவிதைக்காரா!
உன்னிடமோர் கேள்வி.................!!
நானுனக்குச் செய்த பாதகமென்ன
நயமாயுரைத்திடு...........!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை