About Me

2012/09/08

மௌனம்


எங்கிருந்து கற்றாய்
இந்த மௌனம்..........!

விழிகள் துலாவுமுன்
மௌனத்தில்.........
சிறையிட்டனுப்புகின்றாய்
காதலை ரகஸியமாய்!

என் கிண்டலில்- உன்
குண்டுக்கன்னம் ஈரமாகும் போது
என் கை(க்குட்டை)களைத் தானேயுன்
கண்ணீர்த்துளிகளழைக்கின்றன!

நம் காதல் முகநூலில்- உன்
அதிக விருப்புக் கிடைத்துள்ள
பக்கமென்னவோ
"ஊடல்" தான்!- இதுவுன்
கூடலுக்கான அழைப்பு!

நீ .........
மௌனித்திருக்கும் நாட்களில்தான்
உன் உணர்வுகளை என்னால்
மொழிபெயர்க்க முடிகின்றது!

நீ .............
வாசித்துச் செல்லும்
ஒவ்வொரு மௌன இரவுகளும்
என்மீதான உன்னுரிமையை
என்னுள் விட்டுச் செல்கின்றது!

மௌனத்தையுடைத்து
நீயிடும் சண்டைகள் கூட - என்
மன டயறியில் பதித்துச் செல்கின்றது
உன்னன்​பை!

குலுங்கிச் சிரிக்கும்
சிட்டுக்களின் குரலிலும்...
உடலணைத்து
சில்மிஷம் பண்ணும் காற்றிலும்
நீ வந்து போவதால்
உன் மௌனம்
என்னை காயப்படுத்தப் போவதில்லை!

உதடுகள் குவித்து- நீ
சிந்தும் கோபங்களிலெல்லாம்
உன்னன்பைத் தானே
தருகின்றாய்!

நாளை சினம்
தரும் சமாதானத்தில்
நாம்
நிறைய பேசவேண்டியுள்ளது!
காத்திருக்கின்றேன்- என்னுள்
போத்தியிருக்குமுன்
ஞாபகங்களை ஸ்பரிசத்தபடி!

உன் சினம் பூத்த
விழிகள்...............
சிவப்பை பூசினாலும் கூட
அழகாகத்தானிருக்கின்றன
உன்
காதலைப் போல!

எத்தனை வாரங்களுக்கு
வரமாக்கப் போகின்றாய்
இந்த மௌனத்தை!

நானும்
நீயும்
சண்டையிட்டுக் கொள்ளும் போதெல்லாம்
என்னை வசப்படுத்த
நீ காட்டும் அதீதக் காதலுக்காய்
இன்னும்
நிறைய சண்டைபிடிக்கலாம்
நான்!

இருந்தும்.....உன்

மௌன அழைப்புக்களில்
பதிவான- உன்
சினத்தை கொஞ்சம்
ஒத்தி  வை!
நீயழைக்காத போதெல்லாம்
என் பெயரே
எனக்கு மறந்து போகின்றது!


ஜன்ஸி கபூர் 









No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!