வண்ணத்துப்பூச்சி


 


குழந்தை இறைவனின் அற்புதப் படைப்பு...........தாம்பத்திய நிழலுள் இணைந்த ஓராணும் , பெண்ணும் தம் அன்பின் பரிமாற்றத்தின் மூலம் உற்பத்தியாக்கும் உயிரே குழந்தை. தந்தை உயிர் கொடுப்பான்..........ஆனால் தாயோ, அக்குழந்தைக்கு நல்ல வாழ்வின் வழிமுறைகளை அன்புடன் கற்றுக்கொடுக்க பயிற்றுவிக்கும் இதயமாக இருப்பாள்...அன்னையின் மேன்மையை மறுக்கும் எந்த ஆண்மகனும் இல்லையென்றே கருதுகின்றேன்..

குழந்தையின் மழலையில், மனம் லயிக்காதோர் யாருளர்...அதன் கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளம் அள்ளித்தரும் அற்புத ரசிப்புக்களில் மனம் கிறங்காதோர் யாருளர்..........!

குழந்தை மனம் வெண்களி போன்றது.. நாம் அதனை நமக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளமுடியும். குழந்தையின் ஒவ்வொரு செயல்களையும் நன்கு உற்றுப்பாருங்கள். நாம் செய்பவற்றையே, அவ்வாறே செய்யத்துடிப்பார். பிடிவாத குணமும், அழுது சாதிக்கும் தன்மையும் குழந்தையிடத்தில் தாராளமாகக் காணப்படும் பண்புகளாகும்!

குழந்தைகள் தம்முலகமாக வரித்துக் கொள்வது, தம்மைச் சூழவுள்ள பெற்றோர் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளை மாத்திரமே! நல்லது கெட்டது என இனங் காணாமலே தமது செயல்களை, தாம் நினைப்பவற்றை உடனுக்குடன் செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பண்ணும் குறும்புகள், விளையாட்டுக்குள் நமக்குள் ஆத்திரமாக மாறும் போது நாமவர்களைத் தண்டிக்கின்றோம். சின்னப் பிஞ்சுகளின், பஞ்சு மேனியின் ரணங்கள் பற்றி நாம் அந்நேரம்....அக்கறை கொள்வதில்லை

குழந்தைகள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனாற்றான், எங்கு அன்பு கிடைக்கின்றதோ, அத் திசை நோக்கி தம் மனவேர்களை நகர்த்தியின்புறுகின்றனர். குழந்தைப் பருவத்தின் அடி மனதில் கௌவிப்பிடித்திருக்கும் சில நினைவுகள் , பிள்ளையின் பிற்கால வளர்ச்சிப்பருவத்தில் பல்வேறு நடத்தைகள் உருவாகக் காரணமாகவுள்ளதை பியாஜே உள்ளிட்ட உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே சூழ்நிலைகள் தான்  குழந்தையின் மனநிலையை போஷிக்கும் மருந்து.. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தையின் வளர்ப்பில் அதிக கரிசனை காட்டி கண்காணிக்க வேண்டும். நல்லவற்றை ஊக்குவித்தும், தீயவற்றை அகற்றியும் கற்றுக்கொடுப்பது பிள்ளையாகும் குழந்தையை வளர்த்தெடுக்கும் அன்னை, தந்தை இருவரினதும் தலையாய கடமையாகும்! பிள்ளையைப் பண்படுத்துவதும், புண்படுத்துவதும் பெரியோர் கரங்களிலேயே உள்ளது. எனவே குழந்தைக்கு அனுபவம் வழங்கும் பாடசாலையே நாமே!

ஏனெனில்
நாம்

  • குறை கூறும் குழந்தை கண்டனத்தையும்,
  • விரோதமாக வளர்க்கும் குழந்தை சண்டையையும்
  • கேலி செய்யும் குழந்தை நாணத்தையும்
  • அவமானப்படுத்தும் குழந்தை வக்கிரத்தையும்
  • சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கும் குழந்தை பொறுமையையும்
  • அமைதிச் சூழலில் வளர்க்கும் குழந்தை தன்னை விரும்பவும்
  • நட்பை போதித்து வரும் குழந்தை அன்பையையும் கற்றுக் கொள்ள 

காரணமாக இருக்கின்றோம்

குழந்தைச் செல்வமில்லாத வீடுகள் இருண்டிருக்கும். அந்த மழலைகளுக்கு ஆரோக்கியமான பார்வை கொடுப்பது நம் பணியாகும். வருங்காலத்தில் உங்கள் குழந்தை பற்றிய எண்ணங்களும், அபிலாஷைகளும் வெற்றி பெற வேண்டுமானால், இன்றே அதன் ஒவ்வொரு துடிப்புக்களையும் நன்கறிந்து வழிகாட்டவேண்டிய பொறுப்பு உயிரூட்டியவர்களின் பொற்கரங்களிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளின் விழிகள் மூலம் சமுகத்திற்கும் ஒளி கொடுப்போம். குழந்தை பிள்ளையாகும் போது, அவன் பயணிக்கும் பாதச்சுவடுகளை அப்பிள்ளையின் ஆற்றலுக்கேற்ப, நீங்களே செதுக்குங்கள்...........

அன்பை அதிகமாகவே அள்ளி வழங்கி, அன்பை அடுத்தவர் மீது சொறியக் கற்றுக் கொடுங்கள்........வருங்காலத்தில் பிள்ளையின் வருகைக்காக இவ்வுலகே, மாலையோடு காத்திருக்கும். சாதனைகளின் கனத்தில் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரங்கள் வாழ்த்துக்களைத் தூவி கரகோஷிக்கும்.............................பிள்ளைகள் சுமைகளல்ல......தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய சிந்தனையோட்டங்கள்...இன்றே அவர்கள் வருங்காலத்தை, நம் நிகழ்காலத்துடனிணைத்து வாழ்வைக் கற்றுக் கொடுப்போம்............வாருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே !பிள்ளையருமை உணர்த்தும் பாடலிது......... இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூக்களில் .............ஆராரோ என்று இவர்கள் பாடுவதையும் கொஞ்சம் கேளுங்கள் !
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை