ஓ....மானிடா!


வண்ணப்பூச்சிகளின்
சின்னச் சிறகினில்.............
சிலுவையறையும் மானிடா!
செவி நுழைத்திடு- என்
ஆவேச வார்த்தை சில கேட்டிட!

உன்..........
சொப்பன ஒளியூட்டலுக்காய்.......
இன்னுமா
சீதன  நாவால்
பெண்மையை நக்கி........
சத்தியத்தின் இமைதனில்
சத்தமின்றி ஆணி அறைகின்றாய்!

வறுமைக் காதலால்
வனப்பைக் காவாக்கி.............
பள்ளியறை தொடாத இருண்ட
நிலவறைக்குள்.........
முதிர்கன்னியாய் மறைந்திருக்கும்
பல பெண் வாழ்வினில்- சீ
தனமே விதிக்குரலாய்
அரங்கேற்றப்படுகின்றதுன் இச்சையால்!

கன்னக் கதுப்பில்
கண்ணீர் கரைத்து........
விழிச்சிவப்பை இமைக்குள் மறைத்துப்
போராடும்
பெண் நிலாக்க ளென்றும்
சாம்பர் முகட்டுக்குள் பதுங்கும்
அமாவாசைகளோ உன்னால்!

வசந்தம் மறந்த தெருக்களாய்...........
வாலிபத்தை தனிமைக்குள்
ஏலமிட்டு....................வெறும்
ஏக்கத்தைச் செந்தணலில் குலைத்து
காத்திருக்கும் குமரிகள்- இன்னும்
கல்யாணச் சந்தையில் விலை போகாத
பண்டங்கள்!

நிறம் மாறும் வாழ்வினில்
பருவங்களைத் தொலைவில் நகர்த்தி............
ரணங்களால்
கனவுகளைக் காயமாக்க
காரணமாகும் அற்பர்களே!

உம் வாழ்க்கையை விலை பேசும்
தரித்திரர்களா நீங்கள்..........
சிந்தியுங்கள் ...........
உங்கள்  யதார்த்த நெருடலில்
எமக்கான  நிந்திப்புக்களை!

அன்பை மட்டுமே யாசிக்கும்
ஆடவனுண்டோ
இவ்வுலகினில்!
ஈரம் உதிர்க்கும் கண்ணீரை
உறிஞ்சியெடுக்கும் உத்தமனாய்..........
ஊர் போற்ற
எவனுண்டு - பெண்ணவள்
ஏக்கம் கலைத்து - அவள்
வாழ்வைப் பேணிட!

பெண்ணவள் ..........
விடியலின் குரலுக்காய்
விழிபார்த்து.......................
காத்திருக்கும் காத்திருப்புக்களை
காமுகர்கள் எச்சில்படுத்த முனைகையில் !

பணத்தின் மாயைக்குள் வீழ்ந்திருக்கும்
மானிடங்கள்.........
வெறும் விமர்சனங்களால்
மட்டுமே
அனுதாபங்களைத் துப்பிச்செல்லும்!

இன்னுமா மயக்கம்.....!

மானிடா..............
உன் சுரண்டல்களால் உருக்குலைந்த
பெண்ணவளுக்குள் வாழ்க்கை பூட்டு
அதுவே போதும் - உன்
ஆண்மையின் அடையாளமாய்!


4 comments:

 1. பெண்களின் துயர் தாலாட்டப்படுகிறது.
  இன்னும் உலகில் மனிதர்கள்மாறவில்லை.
  பாராட்டுகள்.
  Vathiri C.Raveendran.

  ReplyDelete
 2. சாட்டையடி வரிகள்...

  நல்ல சிந்தனைகள்...

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை