About Me

2012/10/29

இன்றைய பொழுது


தூறல் விழும் முகில் நீரின் சந்தம்
மெல்லிசையாய் காதில் விழ.......
நரம்புகளின் கிசுகிசுப்பில்
கூதல் காற்றும் நாணிக்கிடக்க
விடிந்ததென் விடியலின்று!

இருந்தும்.........
மழையுரசல் கண்ட மனசோ
விழியுறக்கமறுத்து
உறிஞ்சிக்கொள்கின்றதின்றைய அழகை!

கீழ்திசையில்
பதியமிடக் காத்திருந்த சூரிய விதையை
மறைத்தவர் யாரோ- நம்
இறைவன்தானோ!

தங்குமிடமின்றியலைந்த
நரைமுகில்கள்
வாலிபம் கண்டதோயின்று
கருமையைத் தாமும் பூசி!

மழையுரசலில்
கலைந்தோடும் மண் வாசம்
மெல்ல - என்
சுவாசத்துள் குந்திக்கொள்ள!

விடியலின் சைகையைக் காட்டும்
சேவல்கள் கூட
இன்றேனோ கடமை மறந்து
நன்றாகத் தூங்க

எங்கே போயின
சலங்கையாய் சிரிக்கும் - அந்தச்
சிட்டுக்கள்

மரக் கொப்பில்
சொண்டு தேய்த்து சோம்பல் முறிக்கும்
பச்சைக் கிளிகள் கூட
காணோமேயின்று!

தலைகுனிந்தே - தன்
மேனி நனைக்கும் மென் மலர்கள்
மெல்ல முணங்குகின்றன
மெளனவலியால்!

இன்னுமதிகம் முளைக்கவேயில்லை
வண்ணக் காளான்கள் தரையை மறைத்தபடி!
நிசப்தத்தின் அரவணைப்பில்
நம்மவர்கள் மயங்கிக் கிடப்பதால்!

இத்தனைக்கும்

இருள் துளைத்து முளைவிடுமின்றைய
பௌர்ணமிக்காய்
விடுமுறைக்குள் சிக்கியதென்
பாடசாலைப் பொழுது!



-Jancy Caffoor -


















No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!