அன்பென்ற மழையிலே


உடைந்து வீழ்ந்தது
விண் வைரமொன்று- அதில்
முகம் பதிக்கின்றேன் லேசாய்...........
அழகாய்ச் சிரிக்கின்றா ரென் னன்னை!

தொலை தூர ஆகாயம்
களையிழந்து வெறிக்கின்றது - என்
அன்னையின் அன்பாழத்தில்
தான் தோற்றுப் போனதாய்!

மலரிதழ்களின் விளிம்போரம்
விரல் துடைக்கின்றேன்............
நினைவுகளாய்த் தெறிக்கின்றது - என்
அன்னையின் மென் கரங்கள்!

அமைதி வருடலால்
அடங்கிக் கிடக்கின்ற இரவுகளெல்லாம்.........
முகிழ்க்கும் உறக்கம் பிளந்து
கனவாய் விழி திறப்பார் என் னன்னை!

நசியும் கடலலைகளில்
புரளும் நீர் மேனியாய்...........
கரையும் மன அவஸ்தைகளை
அகற்றும் தேவதையாய் தினமும் என் னன்னை!

சோம்பலுற்று விடிகின்ற வென்
ஒவ்வொரு நொடிப் பொழுதையும்.............
இயக்கும் கடிகாரமாய்
இன்முகம் காட்டுவதும் என் னன்னையே!

வெம்மையின் இம்சிப்புக்களால் என்னுள்
தளிர்க்கும் கண்ணீர்த் துளிகளை..................
உலர்த்தும் தென்றலாய் - என்
உலகினை யாளும் மூச்சுக் காற்றும் அவரே!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை