அவஸ்தைநிசப்தத்தின் கூடலில்
விழுந்து கொண்டிருக்கின்றது நம்
வார்த்தைகள்!

ஒளிக்கலவை
விழுங்கிக் கொண்டிருக்கும் - நம்
நிழல்களைத் தவிர.......................

இருளின் மயக்கத்தில்
பூவுலகம் சாய்ந்து கொண்டிருக்கின்றது!

பனித் துளிகளின் பரவசத்தில்
வியர்த்துப் போன என் விரல்களுக்கு..........

உன்னிதழ் ஒத்தடம்
மூச்சுத் திணற வைக்கின்றது லேசாய்!

விழிகளை மூடுகின்றேன்
முறுவலிக்கும் உன் பார்வைக்கு
திரை விரித்தபடி!

இருந்தும்..............எனை
வருடி யுன்னில் பதியமிடுகின்றாய் என்னை!

அறிவாயா...................

என் ஞாபகத்தின் மொழிபெயர்ப்பில்
உள்வாங்கிக் கிடக்கும் உன்னிடம்.........

எனை நிரப்ப வரும் போதெல்லாம்
இரக்கமின்றி நாணம் துவம்சம் செய்கின்றதே!

தம் இடைவெளியறுக்க மனமின்றி
சுவற்றில் தடுமாறும் பல்லிகளின் ஸ்பரிசத்தில்

 மன சஞ்சலங்கள் விழித்துக் கொள்ள..............
புகைமூட்டங்களாய் விலங்கிடுகின்றது
காமம் சூழ்ச்சியுடன்!

"ஏதாவது பேசடீ"

உரிமையோடு உறவாக

தவிப்பில் உறையும் உன் குண்டுக் கண்கள் ..............
துகிலுரிக்கின்றன என் உதடுகளை!

என் மௌனக் கதவுடைக்கும்
உன் காதல் போர் கண்டு மிரண்டு போகின்ற
என் பெண்மை....................

இடையின் இடைவெளியைக் கூட
விரட்டுமுன் ஆதிக்கம் கண்டு
இரகஸியமாய்
இரசிக்கின்றது மனசும் உன்னை உள்வாங்கியபடி!

அணைக்கின்றாய் கன்னத்தில்
கன்னம் வைத்து..................
படர்கின்றேன் முல்லையாய்
திரண்ட வுன் மார்பினில் !

ஆச்சரியம்தான்......................
உன்னைச் சேமிக்கவா தனித்திருந்தேன்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை