வியப்பின் எல்லையில்!


சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறும் வொயஜர் - 1 விண்கலம்
------------------------------------------------------------------------------------------
வாழ்க்கை.........!

எல்லோருக்கும் படைத்தவனால் வகுக்கப்பட்ட ஓர் ஒப்பந்தம். வாழும் வரை எப்படியே நம்மைச் சூழவுள்ள உறவுகள், இயற்கை என்பவற்றை அனுசரித்தே நாம் வாழ வேண்டியவர்களாக இருக்கின்றோம். அப்போதே வாழ்வு நமக்குள் நெருங்கி நின்று , நிறைய பல விடயங்களைக் கற்றுத் தருகின்றது.

வாழ்க்கையை நாம் கற்றுக் கொள்ளும் போதுதான், நமது தேவைகளும் அதிகரிக்கின்றது. அத் தேவைகளை நிறைவேற்ற, அவற்றினை வெற்றி கொள்ள பல முயற்சிகளுடனான தேடல்களில் நம்மை நனைத்துக் கொள்கின்றோம். அவ்வாறான ஓர் முயற்சியில், சிந்தனையோட்டத்தின் பயனாக பெறப்பட்ட விளைவே அறிவியல்.......விஞ்ஞானம்! இவ்விஞ்ஞானம் இயற்கையை நாடி பிடித்து சகல விடயங்களுக்கும் ஆருடம் தெரிவிக்கின்றது. விளக்கமளிக்கின்றது. இவ்வாறான விஞ்ஞான செயற்பாட்டினை வழிநடத்தும் ஆற்றலும் சக்தியும் படைத்தவனாலேயே வழங்கப்பட்டதென்பதை நாம் மறுக்க இயலாது.

"அவனின்றி அணுவும் அசையாது"

அவ் அணுக்களைப் பிரித்துப் போடும் அறிவை, சக்தியை  விஞ்ஞானம் வழியாக மனிதன் கற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்தவனும் இறைவனே!

விஞ்ஞானமானது, இயற்கையை , உயிரினங்களின் படைப்பை படம் பிடித்துக் காட்டி,  விளக்கமளிக்கும் போதுதான்,  இறைவனின் அற்புதங்களைக் கண்டு , நாம் , வியந்து போகின்றோம்.

மண்ணில் நிலையூன்றப்பட்ட மனிதன், தனக்கு அருளப்பட்ட அறிவை தக்க விதத்தில் பகுத்தாராய்ந்து இவ்வுலகையே தனக்குள் அடக்க முயலும் சாகசங்களை விஞ்ஞானம் பறைசாட்டி நிற்கின்றது.

அழகான நிலாதான் அருகே சென்று பார்க்கும் போது கற்களும் குழிகளும் நிறைந்த தளமாகக் காணப்படுகின்றது. அருகில்  இருக்கும் போது முக்கியத்துவம் பெறாத பல விடயங்கள் தொலைவாகும் போதுதான் அருமையாகின்றன. அதிசயங்களாக நம் விழிகளை ஈர்க்கின்றன. இதுவே மானுடத்தின் மனசின் ஆளுகை...

இப்புவியில் நிலையூன்றப்பட்ட மனிதன் தன்னுள் பல யுகங்களை உருவாக்கி,
வாழ்ந்த, வாழ்கின்ற வரலாறு நாம் கற்றவுண்மையாக உள்ளது. இரும்பு யுகத்தில் பல தொழினுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்திய விஞ்ஞானம் தான், விண்ணுக்குள்ளும் மனிதனின் தடத்தைப் பதித்து விண்ணியலின் பார்வைக்குள்ளும் உலகை வீழ்த்தியுள்ளது......

விஞ்ஞானம்...............நான் கற்பிக்கின்ற பாடம்......இதன் பல விந்தைகளை விரித்து மாணவர்களுள் உட்செலுத்தும் போது, அவர்களுக்கு பாடம் மட்டுமல்ல, கற்பிக்கும் ஆசிரியையும் பிடித்து விடுகின்றது. காரணம் விஞ்ஞானத்தின் விந்தையின்பால் ஏற்பட்டுள்ள ஈர்ப்புத்தான்........

வானம் ஏன் நீல நிறமாக உள்ளது?
வானவில் ஏன் வளைந்து காணப்படுகின்றது.?
நாம் எவ்வாறு நிமிர்ந்து நிற்கின்றோம்?
ஏன் பழுத்த இலை மஞ்சளாகக் காணப்படுகின்றது?
எவ்வாறு சுனாமி ஏற்பட்டது?

இவ்வாறு பல வினாக்கள் மாணவருள் அடுக்கடுக்காக வெளிப்படும் போது, அவற்றுக்களிக்கும் விடையின்பால் சுவாரஸியமுற்றவர்களாக மறு வினாவைத் தொடுத்து விடுவார்கள்.........

சிந்தனை என்பது மனிதனுக்கு இறைவன் அளித்த கிரீடம்.ஏனெனில் சிந்திக்க மறந்தவனும், மறுத்தவனும் தனது பெறுமதியான வாழ்வை இழந்து தவிக்கின்றான். தனது சிந்தனையை நல்ல விதமாக வலுவூட்டி, பயனடையச் செய்பவர்கள் காலத்தின் கரங்களில் வெற்றியாளர்களாக அரவணைக்கப்படுகின்றனர். வரலாற்றின் இதழ்களில் இவர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டு , சந்ததி சந்ததியாக பல காலம் மக்கள் மனதில் நிலையூன்றப்படுகின்றனர்.

விஞ்ஞானம் கண்டறிந்தவற்றை புனித திருக்குர்ஆனும் அழகாக விளக்கிக் கூறியுள்ளதும் நோக்கற்பாலது.....

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களுடனும், செயலுடனும் பிணைந்துள்ள விஞ்ஞானத்தின் விண்சாதனைகளுள் ஒன்றைப் பற்றி பதிவிடுவதே என் நோக்கமின்று.......................

நாசா...........!
(அல்லது தேசிய வானூர்தியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் Or National Aeronautics and space Administration)

கற்றோருள் அறியாதோர் இலர்....அமெரிக்கா வடிமைத்த விண்வெளி ஆய்வு மையமே இதுவாகும். "அனைவரின் நலனுக்காக" எனும் குறிக்கோளுடன் 1958ம் ஆண்டு ஜூலை மாதம் 28ந் திகதி உருவாக்கப்பட்டது. எனினும் இதன் செயற்பாடு அதே ஆண்டு ஒக்டோபர் 1 லேயே மேற்கொள்ளப்பட்டது.. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இவ் வானியல் மையத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது.

விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்திகளின் ஆராய்ச்சிகளின் முன்னோடியாக விளங்கும் இம் மையம், வானின் கால் பதிக்காத இடங்கள் அரிதாகவேயுள்ளது. முயற்சி, சிறந்த பயிற்சி, அர்ப்பணிப்பு, அதிக முதலீடு போன்ற பல்வேறு தூண்களால் நாசாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு வானியலின் சாகசம் பல புரியும் விண்வெளி ஆய்வு மையமான
நாசா, 1977 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் திகதி வியாழனை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலமே "வொயஜர்-1 " ஆகும்.

 8 ஜிகாபைட் சிறிய ரக ஜபோட்இன் தொழினுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ள இவ் விண்கலமே, முதன் முதலாக .யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்களை  படம் பிடித்து அனுப்பியதும், செவ்வாயில் மண் உள்ளதா என்பதை ஆராய்ந்ததுமாகும்.


                               
          செவ்வாயில் மண் உள்ளதா என ஆராய அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி            இயந்திரம்

காபன், சல்பர், குளோரின், நீர் என்பன செவ்வாய் மண்ணில் காணப்பட்டாலும் கூட, இம் மண்ணிலுள்ள காபன் சேர்வைகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களை அதிகளவு கொண்டிருக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

வொயஜர்-1 விண்கலத்தில்,1988 ம் ஆண்டில் நெப்ரியூன் கோளைக் கடந்த நிலையில் , சக்தியை சேமிக்கும் விதமாக கமெராவொன்றும் பொருத்தப்பட்டது.

இவ் விண்கலம் தற்போது பூமியிலிருந்து 18 பில்லியன் கிலோ மீற்றரில் உள்ளது. இதனால் , இவ்விண்கலத்தில் இருந்து பூமிக்கும் அனுப்பப்படும் செய்திகள் நம்மை வந்தடைய 17 மணித்தியாலம் பிடிக்குமாம் .(யப்பா...........எவ்வளவு தூரம்)

 35 வருடங்களுக்கு முன்னர் சூரிய குடும்பத்துள் உளவு பார்க்க அனுப்பப்பட்ட இவ் விண்கலம் தன் கடமையை கச்சிதமாக நிறைவு செய்து விட்டு வெளியேறவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மனிதன் ஏவிய விண்கலத்துள், சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறும் விண்கலம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் காந்தப்புல எல்லைக்கும், அதற்கு அப்பாலுள்ள விண்வெளியின் எல்லைக்கும் இடையில் இது உள்ளது. அதாவது இது சூரியனின் விளிம்பில் உள்ளது. சூரியனிலுள்ள மின்னூட்ட துகள்களை விட வெளி மண்டலத்திலுள்ள அதிக ஆற்றலுள்ள துகல்களையே இது அதிகமாக பதிவு செய்துள்ளதாம். இந்நிலையையே தற்போது இதன் வெளியேற்றத்தை ஊர்ஜிதம் செய்துள்ளது....
வயது அதிகரிக்கும் போது, நமது செயற்றிறனும் குன்றி விடுகின்றது என்பது போல், வொயஜர்- 1 உம்  மனிதன் கண்டுபிடித்த கலமாகையால், ...........35 வயதானதும் அதற்கு ஓய்வளிக்கும் காலமும் வந்து விட்டது என நாம் முடிவுக்கு வருவோமா!!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை