காதல் வந்தால்


பருவம் வந்ததில்
கருப் பொருளாய் காதல்.........!

ஆத்மாவின் சரீரங்களில்
அழகான அவஸ்தை!

முட்களின் படுக்கையிலும்
ஆட்கொள்ளும் பஞ்சணைகள்!

காதல்...........
மகிழ்வின் கைத்தடி!

கனவுக்குள் எதிர்பார்ப்புக்களை
ஏற்றி வைக்கும் ஏணி!

உதடுகளின் உல்லாசம்.........
உற்பத்தியாகும் மின்சாரமாய்!

இறக்கைகள் சுமக்கும் சிலுவையாய்
உருமாறும் இதயங்கள் !

செல்லின் சிணுங்கல்களில்- உயிர்
செல்கள் செல்லமாய் முறைக்கும்!

காத்திருப்புக்களில்.........
வியர்த்திருக்கும் கடிகார முட்கள்!

விடியலை இருளாக்கி
இருளை விடியலாக்கும் மந்திரம்!

சுனாமியின் சுழற்சி போல்
தடுமாறும்  மனசு!

கிறுக்கல்கள் கவிதையாகும்
புலம்பல்கள் காவியமாகும்!

நிலவும் விண்ணும்
களவாய் அடிக்கடி கால் தொடும்!

நினைவுகளின் நெருடல்களெல்லாம்.........
கனத்துக் கிடக்கும் போதையில்!

விழித் தேடலில் எப்பொழுதும்
வீழ்ந்து கிடக்கும் ஓர் உருவம்!

நெஞ்சக் கூட்டுக்குள் பத்திரமாகும்- சிதறிய
கொஞ்சல்களும் வருடல்களும்!

அட........இதுதாங்க காதல்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை