நிலாப் பெண்ணேஅடர் அடவி யோரம்
பாலூற்றும் அருவிச் சாரலில்............
முகம் நனைத்துக் கிறங்கச் செய்யும்
முழுமதியே!

உன் நுதல் மறைக்கும்
மேகக் கேசம் விரட்டி - என்
உதடு பதிக்கத் துடிக்கின்றேன் - நிதமும்
உயரப் பறந்து வானில் பரவி!

நீ யுதிர்க்கும்  கீறல் கோர்த்து
ஒளி கொஞ்சம் நானும் நெய்து.............
விளக்கேற்றப் போகின்றேன்
விட்டில்கள் மொய்க்கட்டுமென்
வீட்டுக்குள்ளே!

உன் கன்னப்பருவுடைத்து
கசியும் நீர் கொஞ்சம் சேர்த்து  - நானும்
தேகம் நனைக்கப் போகின்றேன் - நீயும்
வேகமாயிங்கு வந்துவிடு!

அஞ்சனம் கொஞ்சமழித்து - நீ
ஊற்றிச் செல்லும் ஒளிக் கசிவுகண்டு
காற்றுக் கூட கண்கூசி - என்
காதோரம் நாணிக் கிடக்கின்றது லேசாய்!

மாதமொரு முறை  துகிலுரிந்து - நீ
மறைத்த வுன் மேனி திறந்து..............
தரையில் வாழும் மெம்மை இச்சையாக்கி
இறுமாறிக் கிடக்கின்றாய்
ஏதுமறியா அப்பாவியாய்!

நீ யுடைக்கும் நகத்துண்டுகள்
தொலைக்கு மிடம் தேடித் தேடி................
அலைகின்றேன் கனநாளாய்
காணவில்லையே வெண்ணிலாவே!

இரவுக் குவியலுக்குள்ளே - உன்னை
மாதமொருமுறை நட்டி............
சாதிக்கும் வல்லோன் ஆற்றல் கண்டு
வியக்கின்றேன்
வியர்க்கின்றேன்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை