About Me

2013/01/16

"கற்றலுக்கு முதலிடம்"


சமயங்களுடன் வழிநடத்தப்படுகின்ற கல்வி, பொருளாதாரம், அரசியல் தொடர்பான பின்புலங்களே ஒரு சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்றன. அந்த வகையில் கல்வி அபிவிருத்தியின் மூலமாக இளம் சிறார்களின் ஆரோக்கியமான வாழ்வினை வழிநடத்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அப்பொழுதே நாட்டின் உயர்தரமான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் மனித உழைப்புக்களின் சக்தி யாவுமே ஓர் மையத்தில் குவிக்கப்பட வேண்டும்.


                          வடமத்திய மாகாண கொடி



வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ் எம் ரஞ்ஜித்


மகிந்த சிந்தனையின்  அடிப்படையில், கல்வி அமைச்சரான மேன்மை தாங்கிய பந்துலு குணவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற மூன்று வருட கால இலக்கினைக் கொண்ட இக் கல்வி அபிவிருத்திச் செயற்றிட்டமானது வடமத்திய மாகாண கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2013 - 2015 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கின்ற இக்கல்வி அபிவிருத்திக்கு உயிரூட்டியவர் தற்போதைய வடமத்திய மாகாண  கல்வியமைச்சர் மேன்மைதாங்கிய ஜயரத்ன பண்டார ஆவார்கள். இக் கல்வி அபிவிருத்தி நடவடிக்கையின் பயனாக அநுராதபுரம், பொலனறுவை மாவட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பயனடைவார்கள்.
---------------------------------------------------------------------------------------------
இக்கல்வி அபிவிருத்தியின் பொருட்டு 
வடமத்திய மாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகளாவன:-
-------------------------------------------------------------------------------------------

இங்குள்ள சகல பாடசாலைகளுக்கும் ஒரே நேரத்தில் செயற்படக்கூடிய செயற்பாட்டவணைகள் வழங்கப்பட்டுள்ளன.


அந்த வகையில் சகல ஆசிரியர்களுக்கும் பொதுவான பாடத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த காலப் பகுதியில் சகலரினதும் இலக்கு ஓர் திசையை நோக்கியதாக குவிந்து காணப்படும்.  இதன்மூலமாக மாணவர்களின் சகல கற்றற் செயற்பாடுகளின் உச்ச அளவினாலான கற்றற் குணநலப் பண்புகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.


அவ்வாறே  மாத , தவணைப் பரீட்சைகள், ஒவ்வொரு தவணை இறுதிநாளின் போது குறித்த பாட ஆசிரியர்களை பெற்றோர் சந்தித்து தம் பிள்ளைகளின் கற்றல் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளல், இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடத்தல், அபிவிருத்திச் சங்க, பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் கூட்டங்கள் உள்ளிட்ட சகல செயற்பாடுகளும் திகதி குறிக்கப்பட்டு ஓர் குறித்த தினத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலையில் கொண்டாடக்கூடிய  விழாக்கள், மற்றும் சர்வதேச தினங்களும் திட்டமிடலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைக் காலைக்கூட்டங்களில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மும்மொழியிலான கருத்துரைகளும் இடம்பெற  வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் தகவல்களை உள்ளடக்கியதாக தரம் 1 தொடக்கம் 13 வரையிலான சகல மாணவர்களுக்கும் மாணவர் அறிக்கைப் புத்தகமும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

எல்லாப் பாடசாலைகளிலும் இயங்கக் கூடியதாக சுற்றாடல் குழு, சாரணியர் குழு, சுகாதாரக் குழு போன்ற பல குழுக்கள் நிறுவப்பட்டு, அவற்றுள் மாணவர்கள் உள்வாங்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுவார்கள். இவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் விளையாட்டுப் பயிற்சிகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கற்றலைப் போலவே , மாணவர்களின் உடல்- உள நல விருத்திக்குதவும் பல்வேறு விளையாட்டுச் செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சகல கோட்டக்கல்விப் பிரிவுகளிலுள்ள பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டு "(சம்பத்) விளையாட்டு அபிவிருத்தி நிலையம்" உருவாக்கப்பட்டு, அதன் மூலமாக மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சியளிப்பதுடன், பாடசாலைகளுக்கிடையிலும்  வளங்களைப் பரிமாறிக் கொள்ளும் தன்மையும் உருவாக்கப்படும். பாடசாலை ஆரம்பிக்கும் போது உடற்பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்.


பாடசாலைகளுக்கிடையில்  தகவல் தொடர்பாடலை விருத்தி  செய்யும் நோக்குடன் , பாடசாலைகளுக்கிடையிலான இணைய வலைப்பின்னலும், மையங்களும் ஏற்படுத்தப்படும். அத்துடன் தகவல் பரிமாற்றங்களுக்காக கோட்டம், வலயம், மாகாணம், பாடசாலைகளுக்கிடையில் இணைய வலையமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதுடன், இளைஞர்களுக்குரிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் விதமான கணனிப் பயிற்சிகளும் வழங்கப்படும்


தேசிய பொதுப் பரீட்சை இலக்குகளுக்கேற்ற விதமாக தயாரிக்கப்பட்ட  மாதிரிப் பரீட்சைகள் வடமத்திய மாகாணம் முழுவதும்  ஒரேவிதமான வினாத்தாள்கள் ஒரே நாளில் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.


க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய கஷ்டப் பிரதேச மாணவர்களும் தமது பிரதேசங்களிலேயே சிறந்த வளங்களைக் கொண்டு உருவாக்கப்படும் கற்றல் எண்ணக்கருக்களை உள்வாங்கும் பொருட்டு உயர்தர  விஞ்ஞான, கணித , தகவல் தொழினுட்ப கற்கைகளை சிறப்பாக வழங்கும் 30 நவீன பாடசாலைகள் அமைக்கப்படும்.

வடமத்திய மாகாணத்திலுள்ள 780 தமிழ், சிங்கள பாடசாலைகளுள் 449 பாடசாலைகளில் மாணவர்களின் முழுத் தொகை 200ற்கும் குறைவாகவே உள்ளன. இப்பாடசாலைகள் தொடர்பாக ஆசிரியர் பற்றாக்குறைகளும் உண்டு. இதனால் உயர் கற்றல் அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது. இப்பிரச்சினையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஆரம்பப் பாடசாலைகளின் அபிவிருத்தியின்பாலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைச் சுற்றுப்புறம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலையை மாணவர்களின் விருப்பத்திற்குரிய இடமாக மாற்றும் பொருட்டு பாடசாலைச் சுற்றாடலை அழகுபடுத்தும் செயற்றிட்டங்களும், போட்டிகளும் நடாத்தப்படும்.


மாதத்திற்கு ஒருநாள் ஆசிரியர்களும், பாடசாலைச் சமுகத்தினராகிய பெற்றோர்களும் இணைந்து மேற்கொள்கின்ற சிரமதானச் செயற்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.  பாடசாலையிலுள்ள மொத்த மாணவர் தொகையை பன்னிரண்டு மாதங்களால் பிரித்துப் பெறப்படும் தொகையைக் கொண்டு, பெற்றோரை சிரமதானத்திற்கு அழைப்பதால், ஒரு பெற்றோர் வருடத்திற்கு ஒரு தடவையே சிரமதானத்திற்கு அழைக்கப்படுவார்.

கல்வியில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் இன்னுமொரு முயற்சியாக வான்மைத்துவ பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்குரிய  காலத்திற்கேற்ற பொருத்தமான வான்மைத்துவப் பயிற்சி, பல்கலைக்கழகங்கள்  மற்றும் தேசிய கல்வி நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொடுக்கப்படும். க.பொ.த உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் குறித்த பாடம் தொடர்பான பல்கலைக்கழக மட்டத்திலான கற்றல் மற்றும் தொழில் வான்மைப் பயிற்சி  பெற்றுக் கொடுக்கப்படும்.


ஆசிரிய ஆலோசகர் சேவை  மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு போட்டிப் பரீட்சைகளின் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஆசிரியர் ஆலோசகர் சேவையில் காணப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படும். வகுப்பறை கற்றல்- கற்பித்தல் தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்பார்வை செய்யப்பட்டு, ஆலோசனை அளித்தல் இவர்கள் சேவையாகின்றது. ஆசிரியர்களின் தொழில்வாண்மை விருத்திக்கு இவர்கள் உதவுவார்கள்.

பிற பிரதேசங்களிலிருந்து அதிக கஷ்ட பிரதேசங்களில் (பதவிய போன்ற பிரதேசங்கள் ) சேவையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் விடுதிகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதன்பொருட்டு முதற்கட்டமாக 25 ஆசிரியர் விடுதிகள் கஷ்டப் பிரதேசங்களில் அமைக்கப்படும்.


கோட்டக் காரியாலயங்கள் தற்போதுள்ளது போல் பாடசாலைக் கட்டிடங்களில் இணைக்கப்படாமல்,  தனித்து இயங்கும் கட்டிடங்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்படும்.  வலயக் கல்விக் காரியாலயங்களும் மறுசீரமைக்கப்பட்டு நவீனத்துவமான சேவையைக் கொண்ட தளமாக மாற்றப்படும்.  இதன்பொருட்டு  காரியாலயங்களில் சேவையாற்றுபவர்கள் பயிற்சியளிக்கப்படுவார்கள், வருடத்திற்கு 3 கல்வி வலயங்கள் எனும் ரீதியில் இந்த மூன்றாண்டு காலத்தினுள் சகல கல்வி வலயங்களும் சகல வசதிகளும் கொண்ட சேவைத்தளமாக மாற்றப்பட்டு, ஆசிரியர்களுக்கு முழுமையான சேவையைப் வழங்கும் "குரு மிதுரு" கல்வி அலுவலகங்களாக பரிமாணிக்கச் செய்யப்படும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்திற்குள் செயற்படும் விதமாக இடமாற்றக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவற்றினூடாக ஆசிரியர் இடமாற்றங்கள் கிரமமாக நடத்தப்படும். ஐந்து வருடங்களுக்கொருமுறை கட்டாய இடமாற்றம் அமுல்படுத்தப்படும். அதிக கஷ்ட பிரதேச ஆசிரியர்கள் மிக விருப்பு பாடசாலைக்கு இலகுவாக இடமாற்றம் பெறும் பொருட்டு புள்ளித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  அதி கஷ்ட பிரதேச பாடசாலையில் சேவையாற்றினால் பத்து (10)  புள்ளிகளும், கஷ்ட பிரதேச பாடசாலையில் சேவையாற்றினால் ஆறு (6) புள்ளிகளும், வசதியற்ற  பாடசாலையில் சேவையாற்றினால் 3 புள்ளிகளும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும்.


அதிபர் இடமாற்றங்களும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படியில் 1 ஏபி  பாடசாலை அதிபர்கள் மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றப்படுவார்கள். அவ்வாறே 1சீ பாடசாலையில் சேவையாற்றும்  அதிபர்களுக்கு மாவட்ட பாடசாலைகளுக்குள்ளும், வகை 2 ,3 பாடசாலையில் சேவையாற்றும் அதிபர்களுக்கு வலயப் பாடசாலைகளுக்குள்ளும் இடமாற்றங்கள்  வழங்கப்படும்.

புதிய நியமனங்கள் கஷ்டப் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் போது 5 வருடங்கள் அப்பாடசாலையில் கடமையாற்ற வேண்டுமென நிபந்தனை விதிக்கப்படும். அவ் அரச ஊழியர் அதே கோட்டப் பிரிவில் மேலும் 5 வருடங்கள் கடமையாற்ற வேண்டும். இம்மாகாணத்தில் உள்ள சகல மாணவர்களும் உச்சளவிலான கல்வி அபிவிருத்தியைப் பெறும் விதமாக, அம் மாணவர்களுக்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை பாடசாலைகளில் பேணப்படும்.


பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும்   நோக்குடன், சகல கோட்டக் கல்விக் காரியாலயப் பாடசாலைகளில் பற்சுகாதார  வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ்  வைத்திய அதிகாரிகள் பாடசாலைக்கு சமுகமளிப்பார்கள்.


பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் விடயம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சகல ஆரம்பப் பாடசாலைகளையும் விருப்புக்குரிய பாடசாலையாக மாற்றியமைக்கும் வகையில் சகல வளங்களைக் கொண்டதாக அப்பாடசாலை மாற்றப்பட்டு மாணவர்களுக்குரிய சிறந்த ஆரம்பக் கல்வி வழங்கல் பெற்றுக் கொடுக்கப்படும்.


 கல்விக் காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் கற்பித்தல் சார் பிரச்சினைகளை  ஆராய்ந்து சரியான தீர்ப்பு வழங்கும் பொருட்டு  "விமர்ஸன " எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சகல பாலர் பாடசாலைகளிலும் ஒரேவிதமான கல்வி வழங்கலை முன்னெடுக்கும் பொருட்டு, முற் பாடசாலைகளில் (பாலர் பாடசாலைகளில்) கற்பிக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆரம்பக் கல்வி டிப்ளோமா பயிற்சி வழங்கப்படும். அத்துடன் இவர்களுக்கான கொடுப்பனவுகளின்பாலும் கவனம் செலுத்தப்படும்.


பாடசாலைகளில் நிலவும் மேசை, கதிரை உள்ளிட்ட  தளபாடப் பற்றாக்குறை நீக்கும் பொருட்டு,அவற்றை திருத்தும் வேலைகளுக்காக குணநலப் பங்கீட்டின் வழியாக நிதி வழங்கப்படும். அவ்வாறே கணனி மற்றும் கற்றற் உபகரணங்களின் பழுது பார்க்கும் வேலைகளுக்காகவும் நிதி வழங்கப்படும்.


"கற்றலுக்கு முதலிடம்"

எனும் கொள்கையை வலுப்படுத்தும் விதமாக , வடமத்திய மாகாணப் பாடசாலைகள் மற்றும் முற்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் மற்றும் கற்றற் செயற்பாடுகளில் அபிவிருத்தி ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகள் மேற்காட்டப்பட்டவாறு முன்னெடுக்கப்பட்டுகின்றன.
இவ்வாறாக பிள்ளைக்கு வழங்கப்படும் கல்வியால் பெற்றோர்கள் திருப்திப்படுவதுடன்,  கற்றற் செயற்பாடுகளின்  மூலம் மாணவர்களின்  மனம் மற்றும் குணநல சார்பான ஆரோக்கியங்களும் புதுப்பிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாக்கப்படும்.. அதுமாத்திரமின்றி  பாடசாலையில் சிறப்பான கற்றற் சூழலும், பின்னணியும் உருவாக்கப்படும் விதமாக ஆசிரியர்களின் செயற்பாடுகளும் குறித்த இலக்கு நோக்கி ஒழுங்கமைக்கப்படுவதனால், உச்ச அளவினாலான கல்வி அபிவிருத்தியும் நம்மை நோக்கி முகங்காட்டி நிற்கும்.



மேற்கூறப்பட்டவாறு இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இம் மூன்று ஆண்டு காலத்திற்குள்ளும்  எதிர்பார்க்கப்பட்ட சகல கல்விசார் எண்ணக்கருக்களும் மேம்படுத்தப்பட்டு, கற்றல் அபிவிருத்தியின்பால் மாணவ சமுதாயத்தினர் அணி வகுக்கப்படுவார்கள் எனலாம். இச்செயற்பாடுகளின் வெற்றிக்காக சகல தரப்பினரும் ஒன்றிணைந்து அயராதுழைத்தல் வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.. அப்பொழுதுதான்  "கற்றலுக்கு முதலிடம்" எனும்  இலக்கை அநுராதபுரம் மற்றும் பொலனறுவைப் பாடசாலைகள் எட்டி நிற்கும்.

மேற்கூறப்பட்ட இலக்குகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

Miss . A.C. Jancy (Teacher)
(Science - SLTS - 2I),
(B.Ed - final Year)
A/Zahira National School
Anuradhapura.








                                                                                              

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!