இதுவும் காதல்தான்            அவரை 'எஸ்' என்கிறேன். சிறிய வயதிலிருந்தே அவரைத் தெரியும். நான் வீட்டுச்சாமான்கள் வாங்கச் செல்லும் கடைக்கு முன்னால் தான் அவரின் வீடும் இருந்தது. நான்கு பிள்ளைகளின் தாயாக இருந்தாலும் இளமையாக, சிறிய பெண்ணாகவே இருந்தார். அவரைக் கடந்து நான் செல்லும் போதெல்லாம் சிறு புன்னகையொன்றை உதிர்ப்பார். அப்பொழுது அவரின் கடைக் குட்டிக்கு மூன்று வயதிருக்குமென்று நினைக்கின்றேன். ஒருநாள் அவரின் கணவனுடன் அவர் எங்கேயே பயணித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவரின் கணவன் முகம் என்னுள் பார்வையாகப் பதிந்தது. கணவருக்கு அப்பொழுதே அறுபது வயதுக்கு மேலிருக்கும். வழுக்கைத் தலையில் ஓரமெல்லாம் ஓரிரு நரை முடிகள் குத்திட்டு நின்றன. அரச ஊழியர். பென்ஷனில் வாழ்ந்து கொண்டிருந்தார். நரை விழுந்த முதுமைத் தோற்றம். இருவரும் தந்தை மகள் போன்ற பார்வையை பிறருக்கு அளித்துக் கொண்டிருந்து. ஊரார் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டாலும் கூட, இல்லறத்தின் செழுமையில் அவர்கள் இரண்டறக் கலந்ததன் விளைவு நான்கு குழந்தைகளும் முளைத்திருந்தனர்.  இரண்டாம் தாரமாகவே வாழ்க்கைப்பட வைத்தது அச்சகோதரியின் வறுமை. வறுமையின் கொடுமைகளுள் இதுவும் ஒன்றா? வாலிபக் கனவுகளை சிதைத்து விட்டு இலகுவாகவே பெண்களை கண்ணீர்க்கம்பிகளுக்குள் சிறைவைத்து விடுகின்றது இந்த வறுமையின் இயலாமை!

எங்களது புன்னகைப் பரிமாற்றம் தொடர, நாங்களும் ஓரளவு அறிமுகமாகி கதைக்கத் தொடங்கும் போதுதான்,  எங்களது கடைக்காரரும் தனது கடையின் இருப்பை வேறொரு வீதிக்கு மாற்றி விட்டார். இதனால் எங்கள் சந்திப்பும் தடைப்பட எங்கள் யாழ்ப்பாணச் சந்திப்பும் தடைப்பட்டது.

நாட்களின் வேக ஓட்டத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ,  பல யுத்த கொடூரங்களைச் சந்தித்த பிறகு,  வேறு பிரதேசத்திற்கு அகதியாக இடம்பெயர்ந்திருந்தோம். அப்போது , மீண்டும் 'எஸ்' ஸை பாடசாலையில் சந்தித்தேன். அவர் கணவன் இறந்துவிட்டதாக அறிந்தேன். எனினும் விதவையாக இருந்தாலும் கூட , முன்னரை விட அழகாகவும் , இளமையாகவும் இருந்தார். பிள்ளைகள் எல்லாம் வளர்ந்திருந்தனர். நான் கற்பிக்கும் பாடசாலையிலேயே அவர்களும் கற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நான் விஞ்ஞானப் பாடம் கற்பித்ததால், மீண்டும் எமக்குள் விடுபட்ட புன்னகை தொடர்ந்தது. கடைக்குட்டி என்மீது ரொம்பப் பிரியமாக இருந்தாள். "மிஸ்" மிஸ் என என் பின்னால் சுற்றுவதில் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அவள் அன்பும் எனக்குப் பிடித்ததால் நானும் அவள்மீது கரிசனை காட்டத் தொடங்கினேன்.

ஒருநாள் திடிரென 'எஸ்' பற்றி சில கதைகள் என் காதில் விழுந்தன. அவருக்கும் 'ஏ' என்பவருக்கும் லவ் என்றனர் பலர். ஏன் விதவைகள் மறுமணம் செய்யக் கூடாதா? சாதாரண பெண்ணுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஆசைகள், வாழ்வு பற்றிய கனவுகள் , எதிர்பார்ப்புக்கள் இச் சகோதரிக்கும் இருக்கும் தானே? ஆண் துணையின்றி தன் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுப்பார், தன் குடும்பம் படர  அந்தப் பெண்ணுக்கும் ஒரு கொம்பு தேவைப்பட்டது தப்பில்லைதானே.. எனக்குள் பல வினாக்கள் புரண்டெழுந்து விடை கண்டதன் பயனாக , அவரின் செயல் தவறாகப் படவில்லை. ஆனால் அவரை விட அவரது காதலன் பதினைந்து வயது குறைவானவர் என்பதால் அவர்கள் காதலை ஊரும் அங்கீகரிக்கவில்லை. உண்மைக்காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதைப் போல, அவர்களும் யாரைப் பற்றியும் அலட்டாது தம் பாதையில் உறுதியாக இருந்தனர்.

 'ஏ' அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனார். பிள்ளைகள் அவரை 'சாச்சா' என அன்பொழுக அழைத்துப் பழகினார்கள். பிள்ளைகளின் படிப்புக்கும் அந்தச் சாச்சாவே ரொம்ப உதவினார். அந்தக் குடும்பமும் வறுமையிலிருந்து ஓரளாவது மீள அந்த சாச்சாவே உதவினார். 'ஏ' வவுனியாவில் பொறியிளாளராக வேலை செய்ததால்  இவர்கள் வீட்டில் தங்கியே வேலைத் தளத்திற்குச்  செல்வார். அவர்களின் காதலுக்கு பிள்ளைகளும் ஆதரவாகவே இருந்தனர். காதல் சந்திப்புக்கு தடையின்றி வழிவிட்டனர். ஆனால் 'ஏ'யின் வீட்டில் இந்தக் காதலுக்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது .இந்த எதிர்ப்பின் மத்தியிலும் கூட, 'எஸ்' சோரவில்லை. காதல் கசிந்துருகியோடியது.

'எஸ்' ஸின் பிள்ளைகள் படிப்பில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. மூத்தவள் மட்டும் உயர்தரத்தை தொட்டு இடைவிலகி நின்றாள். மற்ற இருவரும் சாதாரண தரத்துடன் வீட்டுக்குள் முடங்கினர். ஆனால் சின்னவள் மட்டுமே படிப்பில் படு சுட்டியாக இருந்து பல்கலைக்கழகத்திற்கும் தெரிவானாள்.. தன் மூன்று பெண் பிள்ளைகளையும் கேட்டு வரும் சம்பந்தங்களில் இணைத்ததன் மூலம் வசதியான இடங்களில் மக்களை அந்தத் தாய் கரையேற்றினார். பிள்ளைகள் அழகென்பதால், அந்தக் கிளிகளை வாலிபக் கூட்டங்கள் போட்டி போட்டு கொத்திக் கொண்டு போனது. இப்பொழுது 'எஸ்' ஸூடன் கடைக்குட்டி மட்டுமே தங்கினாள்.

நாட்களும் மேலும் பல மாதங்களைத் தொட்டன. மாமியின் காதல் விடயம் கேள்விப்பட்டு, மருமகன்மாரும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர். மூன்றாவது மருமகன் தனது மனைவியை அவள் தாய் வீட்டுக்கே அனுப்புவதைத் தவிர்த்தான். மூத்தவளும் தன் அவசர திருமண வாழ்வை அறுத்தெறிந்தவளாய் தாயுடன் ஒதுங்கிக் கொண்டாள். 'எஸ்'ஸூக்கு வாழ்க்கைச் சுமை மேலும் இறுகும் போது, எதிர்பாராதவிதமாக அந்தத் திருப்பம் ஏற்பட்டது.

விடுமுறையில் ஊருக்குச் சென்ற காதலன்  "ஏ" வீட்டில் அவனுக்கே தெரியாமல் அவசர அவசரமாக அவனது திருமணத்தை ரகஸியமாக முடித்து விட்டார் அவர் தந்தை. 'ஏ" சிறிய வயதிலேயே தனது தாயை காச நோய்க்கு பறிகொடுத்து பாசத்துக்கு ஏங்கியவன். .ஊரிலேயே செல்வாக்குப்பெற்ற அவனின் தந்தை, தனது மனைவி இறந்ததும் மனைவியின் சகோதரியை இரண்டாம்தாரமாகத் திருமணம் செய்து தன் பிள்ளைகளுக்கு துணை சேர்த்தாலும் கூட,  சிறிய வயதில் தாயை இழந்த 'எஸ்' தனது முழுமையான அன்பை 'எஸ்' ஸிடமிருந்தே பெற்றான். ஊரில் 'எஸ்'ஸின் வீடு அவனின் வீட்டருகே இருந்ததும்,  'எஸ்' ஸின் கணவர், 'ஏ' யின் நெருங்கிய உறவினர் என்பதாலும் , "ஏ" "எஸ்" சந்திப்புக்கு யாரும் தடையாகவிருக்கவில்லை. சிறு வயதிலிருந்து அவர்கள் வீட்டுக்குப் வந்து போகும் "ஏ" யின் பாசம்........காதலாக மாற , அவ்விருவரின் தேவைகளும் சூழ்நிலையும் அன்பும் காரணமாகிவிட்டன.

'ஏ'  திருமணம் முடித்த  மனைவி அழகான ஆசிரியை. அவனின் வயதையொத்த உறவுக்காரப் பெண் என்பதால் அவள் பெற்றோர் துணிந்து 'ஏ'யை திருமணம் முடித்து வைத்தனர். இளம் மனைவி கொடுக்கும்  திருமண வாழ்வால், வயதால் முதிர்ந்த அப்பெண்ணை 'ஏ' மறப்பாரென்பதே பலரின் எதிர்பார்ப்பாகவிருந்தது. .

   அவன் கல்யாணம் முடிந்து இரண்டு வருடமாகியும் இவர்களின் சந்திப்புத் தொடர்ந்தது.இந்த கால மாற்றத்தில் 'ஏ' ஒரு ஆண்பிள்ளைக்கும் தந்தையானார். தன் முதல் கணவனின் பென்ஷன் பணம், தான் திருமணம் முடித்தால் கிடைக்காது எனும் எதிர்பார்ப்பில், 'எஸ்'ஸூம் 'ஏ'யை வற்புறுத்தவில்லை. ஆனால் முன்னரைப் போல 'ஏ' வருகை இருக்கவில்லை. அந்தப்பிரிவு 'எஸ்'ஸை ஆட்கொள்ளவே ஒருநாள் 'ஏ'யின் வீட்டுக்கே தன் மக்களுடன் சென்றுவிட்டார். 'ஏ'யின் மனைவிக்கும் , காதலிக்கும் இடையில் உக்கிரமான போராட்டம் நடைபெறவே, 'ஏ' தான் காதலித்தவளுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் அவளையும் தன் மனைவியாக ஊரறிய சட்டப்படி ஏற்று, கொழும்பில் வீடு ஒன்றையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இன்று இரு மனைவிகளுக்கும் அவர் நல்ல புருஷனாகத் தன் கடமைகளைச் செய்கின்றார். மனைவியின் கடைக்குட்டிக்கும் அவரது அலுவலகத்திலேயே வேலையும் பெற்றுக் கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்.

சிலருக்கு இந்தக் காதல் முறையற்றதாக முணுமுணுப்பைத் தரலாம். ஆனால் காதல் எனும் பெயரில் பெண்களை ஏமாற்றி,  கண்ணீருக்குள் அமுக்கி, அவர்கள் வாழ்வை வீணடிக்கும் ஆண்கள் இருக்கும் இச்சமுகத்தின் முன்னிலையில் இந்த ஆண்மகனின் உண்மைக் காதல் மரியாதைக்குரியதாகவே உள்ளது.

இது நமது கலாசாரம், பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயமாக இருப்பதனால், அவ்விருவரும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். இக் காதல் சரியானதா/ முறையற்றதா எனும் வாதத்திற்கு நான் தயாராகவில்லை. அவரவர் வாழ்க்கை , அவரவர் விருப்பத்தின்பாலே நகரும். சரி, பிழையென விமர்சிக்கும் ஊரால், அவர்களுக்கு ஒரு வழியை, விடிவை நிச்சயம் காட்டமுடியாது. சமுகத்திற்கு  இது ஒவ்வாததாக காதலாக இருந்தாலும் கூட, ஒரு விதவைக்கு வாழ்வளித்த கதாநாயகனாகவே அந்த 'ஏ' என்னுள் மிளிர்கின்றார்.

இரு மனைவிமாரும் பாதிப்பின்றி வாழும் அந்த வாழ்க்கை இன்னும் பல வெற்றிகளை அந்தத் தம்பதியினருக்குக் கொடுக்கட்டும் .அவர்கள் வாழ்க்கை இன்னும் பல்லாண்டு காலம் ஜொலிக்கட்டும்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை