திருந்தும் வரை


உன்னைத் திருத்த முடியவில்லை
வருந்துகின்றேன்!
கடிவாளமிடப்படாத வுன் மனசு
பிடிவாதம் பிடிக்கின்றதோ - நம்
முரண்பாட்டில் முகம் நனைக்க!

"காளை நீயே" என்றிருந்த - என்
நாளை..............
சாலையோரப் புழுதிகளால்
ஓலையெழுதினாய் - உன்
வாலிபக் கிறுக்கை எனக்குள் விற்றுவிட!

என்னை அங்கீகரிக்கு முனது
இராசதானிக்காய்..................
முரசு கொட்டியழைக்கின்றாய்
உரிமையுடன்!
பூரிக்கின்றேன் உன்னன்பில்- இருந்தும்
உதிரமுறிஞ்சும் உன் தேடலில்
கதி கலங்கிக் கிடக்கின்றேன்
"கல்லாகி" இறுகி!

மன்னித்து விடென்னை!
உனக்காய்................
செலவளிக்கப்பட்ட  என் மணிப்பொழுதுகள்
இப்பொழுதெல்லாம் நகர்கின்றன- என்
தனிமை வீதிகளில்
உன்னைத் தவிர்த்து!

அடம்பிடிக்காதே பின்தொடர..........
உனக்கான அனுமதி மறுக்கப்படும் - நீ
திருந்தும் வரை!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை