பொங்கலோ பொங்கல்


சூரிய தங்கத்தில்
பூரிக்கும் நெல்மணிகள்............
கரமசைத்து வரவேற்கும் இனிய
தைப்பொங்கலிது!

வரப்போரம் இடை நெளித்து
கரும்பாய் முகங் காட்டும்..............
தேன்சுவை மயக்கத்தினில்
உதட்டை நனைக்கும் பொங்கலிது!

வயலோரக் காற்றில் நாணும்
வாழ்வாதார  நெல்மணிக்காய்.......
உளமெங்கும் நன்றி தேக்கி
களிக்கின்ற பொங்கலிது!

சேற்றில் விரல்  நனைத்து
நாற்றாய்  மடி சாயும்........
சோற்றுப் பருக்கை தந்தவளுக்காய்
நன்றியுரைக்கும் பொங்கலிது!

மார்கழிப் பனி விரட்டி
சோர்வையும் கொஞ்சம்  துடைத்து...........
தையாய் இதழ் விரிக்கும்
வசந்தப் பொங்கலிது!

கோமாதா நெஞ்சம் தொழுது
கோயில் திருவிளக்கேற்றி............
மத்தாப்பாய் மகிழ்வுகள் பூக்க
சித்தம் குளிர்த்திடும் பொங்கலிது!

பட்டாடை தனை செருகி
ஆதவனுக்கும் புதுப் படையல்தனையிட்டு......
உறவுகளின் ஆத்ம சுகத்தில்
திருவிழாக் காணும் பொங்கலிது!

பொங்கலின் சந்தம் கண்டு
மணக் களையினி மெல்ல விரிய...............
தையவள் வாழ்த்திடுவாள்
தரணிக்குள் பூத் தூவிடுவாள்!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை