தீனின் ஒளியாய்இப்ராஹீம் நபியவர்கள் இறைஞ்சுதல்கள்
இறை சந்நிதானத்தில் வலு சேர்க்கவே.........
ரபியுல் அவ்வல் பிறை பனிரெண்டில்
தரணிக்குள் தடம் பதித்தா ரெம் பெருமானார்!

பிரபஞ்ச இருள் வெளிக் கீற்றுக்களில்
பிரவேசித்த வைரமாய் எம் பெருமானார். ...........
நல்லறங்கள்  பல விட்டுச் சென்றார்- பல
உள்ளங்கள் இஸ்லாத்தைத் தொழவும் செய்தார்!

விண்ணகர் மலக்கொளிகள் வாழ்த்தி நிற்க
மண்ணக அறியாமை கறையகற்றி.........
தீன் வழிச் சுவட்டோரம் நடைபயின்றே
வாழ்ந்தும் காட்டினா ரெம் பெருமானார்!

அன்னை ஆமினா உதிரம் நனைந்தே
இன்முகம் காட்டும் நனி பூவானார் ............
தந்தை அப்துல் முத்தலிப் லயிப்பில் தான்
தரணிக்குள் தரித்தும் நின்றா ரெம் பெருமானார்!

அருந்தவப் புதல்வரா யன்னையவர்
கருவறை தங்கிய வெம் கோமகன்......
பெருந்தவப் பேறாய் பேருலகில் தீனைப் பரப்பி
பொக்கிஷமாய் திருமறையையும் தந்தே நின்றார் ........

அரபிச் சுவரோர அறியாமைப் படிவுகள்
குற்றங்களாய் மனித மனங்களில் நீட்சி பெற்றே...............
இன்னல்களாய்  தீப்பற்றி எரிகையில்..........
அன லுறிஞ்சும்  புனிதமுமானார்
அஹமதெனும் எம் பெருமானார்!

பாலையூற்றுக்களின் பாவக் கறைகள் நீங்கி
சோலைவெளிகளாய் இப்பிரபஞ்சம் நிரம்பிட...........
பிரவேசித்தா ரெம் பெருமானார்
பிரகாசித்தார் அரபுத் தேசம் சிறப்புப் பெற!

சமுதாயப் பேரேடுகளில் சாந்தி வரையும் 
சரித்திரமுமானார் பலர் தரித்திரங்களும் நீக்கி.......
சன்மார்க்க போதனைகளில் எம் சிந்தைகளை  நிறைத்திட
விட்டும் சென்றார் வழிமுறைகளாம் .....
அல்-ஹதீஸையும் ஸூன்னாவையும்!

விண்ணகம் இறக்கித் தந்த தீன்நெறியால்
இன்னல் களையும் வழியும் தந்தார்!
மண்ணக சேமிப்போரங்களெல்லாம்..........
எண்ணற்ற அருளையும் சேர்க்கச் செய்தார் -எம்
அண்ணல் நபியவர்கள்!

வானின் பௌர்ணமி எழிலொளியாய்
வையகத்தில் வந்திறங்கினார் எம் பெருமானார்!
நன்மையின் விளைவகம் நாமாக...........
தீனை உணர்விலும் தந்து நின்றார்!

கஷ்டங்கள் பல கண்டனுபவித்தும்
இஷ்டத்துடன் இறை தொழுதே நின்று........
இஸ்லாமெனும்  தூணில் உலகைப் பொருத்தி
பெருமையும் கண்டார் எம் பெருமானார்!

சாப வினைகள்  நீக்கத்தான்
சத்திய நெறிகள் போதிக்கத்தான்........
வந்துதித்தார் நித்திய வுலகின் அச்சாணியாய் - எம்
முகம்மது நபி (ஸல்) அவர்கள் !

வறுமை விரட்டும் மருந்துமானார்.........
சிறுமை களையும் அன்புமானார்..........
மறுமை வாழ்வுக்கும் வழியும் தந்தார்.........
இறுதித் தூதுவர் அவருமானார்!

மீலாத் தினமின்று பல மாண்புகளும்
மீட்சிகளும் இறையருளும் நாம் பெற்றிடவே .........
பெருமளவில் ஸலாம் சொல்வோம்- முகம்மத்
பெருமானார் திருமொழி நவின்றே
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை