ஒற்றை மழைத்துளியாய்
உறைந்திருக்கும் கனவுகளுடன்
என் விழிகள்!
இருந்தும்.........
சமுக நகக் காயம்
இன்னும்
விழிகளில் சிவப்பாய்!

நெஞ்சமதில்
நேசம் நெய்யாமல்
விசமாகும் விட்டில்களால்- என்
ஆன்மா சிதறுகின்றது
அழுகுரலாய்!

கவலை நுரைக்குள்
வழுக்கி வழுக்கியே - என்
ஜீவன்...........
ஜீவிதம் காணாமலே
கரைந்து போகின்றது!

என்
கனாச் சிரிப்பின் படிமங்களில்
வெம்மைகளை துடைத்தெறிய
வலிதற்ற கரங்கள்
தொலைவாகிப் போகின்றன
வெறும் அத்தியாயமாய்!

என்.......
விரலிடுக்கில் பேனா சுமக்கின்றேன்
விடியலுக்காய்!
விரல் நகம் கழற்றும்
துரோக வீரியங்களாய்
என்னவர்கள்!

விரக்தி வலியால் - என்
வசந்தங்களில் ரணம்!
இருந்தும்...........
சிதைந்த நம்பிக்கைகளை
சிலுவையாச் சுமந்து
வேரூன்றுகின்றேன்
கால பூமியில்- வீழும்
ஒற்றை மழைத்துளியாய்


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை