உன்னால்ஒளி தேடி மதியிழந்து சிறகறுக்கும்
விட்டிலாய்
வீழ்ந்து போகின்றது என் வாழ்க்கை
உன்னால்!

மனப் பஞ்சுக் குவியலுக்குள்
மடிந்து கிடக்கும் கனவுகளை உரச
உன் வார்த்தையெனும்
சிறு குச்சி போதும்!

வாலிபத்தில் வில்லொடித்து
கடி மணம் புரிந்த உனக்கு.......
கலிகால சூழ்ச்சிகளைக் கற்றுத் தர
கால அவகாசம் தேவையில்லை!

சிதைக்கப்பட்ட என்னிலிருந்து
சீழும் இரத்தமாய் ஏதோ வடிகிறது.......
யார் யாரோ தடம் பதித்து நாடியளக்கின்றனர்
நான் அழவேயில்லை....
உன்னிலிருந்து விடுதலை தந்தவன்
நீதானே!

உணர்வறுந்த கனவோரம்....
மயானவெளியில் நாட்டப்படுகையில்....
அயர்ந்த கண்கள் விரிகின்றன
விழித் துவாரத்திலிருந்து வீச்சோடு கண்ணீர்
சிறுதுளியாய்.......!
இது ஆனந்தக் கண்ணீரோ!

எத்தனை தடவைகள்
உன்னால் நான் புதைக்கப்பட்டாலும்
எழுவேன் விதைகளாய்.......
அழிவு எனக்கில்லை !

2 comments:

  1. முடிவில் உள்ள தன்னம்பிக்கை வரிகள் தான் மேலும் வேண்டும்...

    தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை