About Me

2013/04/20

இதோ என் வீடு



இதோ...........

என் வீடு!
வெறும் எலும்புக்கூடாகி...............

என் படுக்கையறையும்
படிப்பறையும்
முட்களின் சேமிப்பாய் உருமாறிக் கிடக்க

சுவற்றில் பதித்த கிறுக்கல்கள்
மழைநீரில் அழுதழிந்து பாசிக் காயங்களாய்
பரிகசித்து வியர்க்க....

வனாந்தரமாகிப் போன - என்
மனையின் கற்குவியலுக்குள்
தடம் பதிக்கின்றேன்

ஐயகோ.............

என் இராஜங்கத்தின் கிரீடங்கள்
கறையான் புற்றுக்களோடு
இம்சித்துக் கிடக்கின்றதே!!

என் கனவுப் புன்னகைகள் எல்லாம்
குருதிப் பிழம்பாகி
சீழ் வடிய.........

என் வீட்டோரக் கற்சிதைவுகள்
கண்ணீரைப் பிழிந்து
பால்யத்தை ஞாபகத்துள் நிரப்புகின்றது!

அம்மா..............
பூக்களின் சுவாசத்தில்
சுவாரஸியமாய் தன்னைக் கரைத்தவர்!

அழகு பார்த்து அழகு பார்த்து
பதியம் வைத்த
சிவப்பு ரோஜாக்கள்........
முற்றத்து மண்ணுக்குள் எச்சமாகியிருக்குமோ!

வீதியோரத்தில் தன் கிளைகளைப் பரப்பி
காற்றுக்குள் வாசம் நுழைத்த - எங்கள்
கறிவேப்பிலை மரங்கள்........
பறிப்பவர் யாருமின்றி ஏக்கத்தில் தன்னை
அழித்திருக்குமோ!

முற்றத்து நிழலாய் தன் முகம் பதித்த
சிறு நெல்லி கூட.......
தன் ஆயுள் குறைத்து ஆழ் துயிலில்!

எங்கள் வீட்டுப்பசுமையின் சுவடுகளிலெல்லாம்
கறைப் படிவுகளாய் சோகங்கள்.............
பெயர்த்தெடுக்க இன்னும் எத்தனை யுகங்கள்!

அம்மா கொஞ்சம் அழட்டுமா...
என் தாய் வீடு சிதைந்த வலியைக்
கரைக்க வேறு வழியின்றி..........

அழுகின்றேன் இன்னும் ஆழமாய்..
என்னுயிர் தன்னிதயம் துறந்து
வலிப்பதாய் உணர்வு........
விழிக் கதவுடைத்து கண்ணீரோ
அழையா விருந்தாளியாய் வெளி நடப்புச் செய்ய!

மீண்டும் அழுகின்றேன்...........
அந்த ஓர் நொடியில்
இவ்வுலகமே இடிந்து என் தலையில்
வீழ்வதாய் பிரமை!

மண் சோறாக்கி மண்குவியல் மட்டும்
இன்னும் மலையாகி குவிந்து.....
எத்தனை பிணங்களின் கல்லறையோ அவை!

குயில்கள் கூத்தாடும்
இளம் வேப்ப மரக் கிளைகள்..........
ஷெல் கண்டு வில்லொடித்திருக்குமோ!

அழுகின்றேன் இன்னும்......
என்னுடன் சேர்ந்து.........
பெற்றவளை வேரறுத்த வலியில்
என் பிறப்பிடமும் கதறுகின்றது...
அந்நியனாய் எனை விட்டு செல்லாதே என.....

எல்லாமே முடிந்து விட்டதா
என் பால்ய நினைவுகளின் பசுமைகள் மட்டும்
என் நினைவுக்குள் பதிவாக......!

எல்லாமே முடிந்து விட்டதா
யுத்தத்தின் எச்சத்தில் எம் வாழ்க்கை நொருங்க
எல்லாமே முடிந்து விட்டதா!

வினாக்கள் மட்டுமே என் வசம்!



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!