ஏன் வேரறுத்தீர்உங்கள் பயிற்சிப் பாசறைகள்தான்
எங்கள் கனவுக் கூடாரங்கள்!

உங்கள் வேள்வித் தீக்காய்
எங்கள் உயிர்களும் உருகின!

பொம்பரும்..........
ஹெலிகளும்.......
ஏகே களும்...........
பீரங்கிகளும்.........
எங்கள் தோட்டத்திலும்
குண்டுகள் நட்டன!

சுதந்திரப் பறவைகளின் இறக்கைகளில்
எங்கள் ஜடைகளைப் பிணைந்தவர்களும்
நாமே!

பெடியள்களின் படிக்கட்டுக்களில்- எம்
தடங்களும் பதிந்துதான் இருந்தன!

நிதர்சனங்களின் காட்சி ரணங்களில்
குருதி பிழியப்பட்ட போது
உயிரறுந்த வலியால் துடித்தவர்களும் நாமே!

சிதறப்பட்ட ஒவ்வொரு விதைகளிலும்
எழுச்சியைப் பொறுக்கியவர்களும் நாமே!

புல்லரிக்கும் புதுவை அண்ணாவின் கவிகளை
உள்ளத்தில் பதியமிட்டு.........
சுதந்திர எழுச்சிக்காய் சுவாசமறுத்தவர்களும்
நாமே!

நீங்கள் செருகிய மயான முகவரிகளை
எம்மோடிணைத்ததில்......
பலியாடுகளாய் வீழ்த்தப்பட்டவர்களும்
நாமே!

எல்லாம் உங்களுக்கும் தெரியும்
ஏனெனில்...........
போராட்டங்களும்
யுத்த தந்திரங்களும்
எமக்கு...........
கற்றுத் தந்தவர்களும் நீங்கள்தானே!

சயனைட் குப்பிகளாய்
எம் உணர்வுக்குள் ..............
விடுதலை கோஷிக்க வைத்தவர்களும்
நீங்கள்தானே!

பாலச் சந்திரன் போல் நானும்தான்
உங்களிடம் கேட்கின்றேன்..............
இவை காட்டிகொடுப்பல்ல உங்களை
அடுத்தவரிடம்!

என் அகதி வாழ்வின்
ஒவ்வொரு துளிகளின் அவலங்கள்....
இருப்பிடம் அறுக்கப்பட்ட அவஸ்தை
பால்யம் வீணடிக்கப்பட்ட சினம்!

நானும் கேட்கிறேன் உங்களிடம்
ஏன் எம்மை .......
1990 ஒக்டோபர் 30
இரண்டு மணி நேரத்தில்................
பிறப்பிடத்திலிருந்து கருவறுத்தீர்
சகோதரராய் அருகிலிருந்தும்!

உங்களைப் போல்தானே
யாழ் மண்ணும் எம்மைச் சுமந்தது....
உங்களுடன் தானே நாமும் பயணித்தோம்
ஏன் கருவருத்தீர் எம் தாயகத்திலிருந்து
எம்மை!

ஒன்று மட்டும் புரியவேயில்லை....

சிறுபான்மை அடக்குமுறைக்காய்
ஆயுதம் ஏந்திய நீங்கள்.................
எதற்காய் வேரறுத்தீர்கள் எம்மை
நாம் உங்களுக்கு சிறுபான்மையினர் தாமே!

இனவாதத்திற்கான உங்கள் அடக்குமுறை
ஏன் ...................
உங்கள் சிறுபான்மை எமக்காய்
அஹிம்சையை  நாட்டவில்லை!

உங்கள் மனக்குமுறல்கள் தானே எமக்கும்....
கோஷங்கள் வெறும் முழக்கங்கள் அல்ல
உணர்வின் எரிமலைகள்!
ஏன் வேரறுத்தீர்கள்..........
குற்றம் புனையா எமக்கே!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை