About Me

2013/04/10

அன்று



அந்த நடுச்சாம நிசியின் அமைதியைக் கிழித்தவாறு ஆட்காட்டி குருவி சப்தமிடத் தொடங்கிய போது ஹெலியின் உறுமலும் லேசாக செவிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது..........

"இன்னைக்கும் தூங்கினபாடில்லை"

அச்சம் முகிழ்க்க, மனது எதையோ எதிர்பார்த்து, பங்கருக்குள் ஒளிந்து கொள்ளத் தயாரானது..........

ஹெலியின் அண்மையை அதன் சிறகுகளின் படபடப்பு உணர்த்திய போது, வீட்டு லைட் வெளிச்சத்தை சற்று அணைத்து விட்டு சுவரோரம் பதுங்கிக் கொள்கின்றோம்.

ஹெலியின் படபடப்பும், அதன் சிறகுகளின் துடிப்பும் காதுகளுக்குள் நன்கு கேட்கத் தொடங்கியது.

"பட் பட் பட்"

இயந்திரத் துப்பாக்கிகள் ஆக்ரோஷமாக தம்மில் பொருத்தி வைத்திருக்கும் குண்டுகளை பாய்ச்சத் தொடங்கின,

அது யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரை மையப் படுத்தி புலிகள் மேற் கொண்ட தாக்குதல்....

"பெடியளும் சுடத் தொடங்கிட்டினம், இனி என்ன நடக்கப் போகுதோ!"

உள்ளுணர்வுகள் அச்சத்தில் மேலும் பிசையத் தொடங்க, யுத்தத் தாக்குதல் மேலும் தீவிரமாகியது. அதன் உச்சக் கட்டமாக நாலைந்து பொம்பரும், இரண்டு ஹெலிகொப்படர்களும் யுத்தத் தளத்தில்
தீயைக் கக்கத் தொடங்க, ..........
மறுமுனைகளில் விடுதலைப் புலிகளின் ஆட்லறிகள் ஷெல்களைப் பீய்ச்சத் தொடங்கின.

"கண்களை இறுகப் பொத்தி, மனதில் இறைவனைத் தியானித்து, காதுகளை இறுக்கிப் பொத்தியவாறு பங்கர்த் தரையில் சுருண்டு கிடந்திருந்தோம்.

லேசாக பங்கருக்குள் ஒளி நுழையும் துவாரத்தினுள் வெளிக் காட்சிகள் மங்கலாய் தெரிந்தன.....

பொம்பர் தரை நோக்கி தன் முகம் காட்டி வேகமாய் கீழிறங்கிக் கொண்டிருக்க,அதன் முன்முனையிலிருந்து ஷெல்கள் பாய்ந்து வெடிக்கின்றன.

"படீர்"

சுவாச மையங்களும் சிதைந்து நானும் மரணித்ததைப் போன்ற பிரமை..........
கண்களை இறுக மீண்டும் மூடிக் கொள்கின்றேன்.. கண்களிலிருந்து குருதி கண்ணீராய்ப் பாய்ந்து கொண்டிருந்தது.


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!