About Me

2013/06/19

தந்தைக்கோர் கடிதம்


தந்தையே
உங்களுக்கான என் முதல் கவிதையிது!

நீங்கள்!

என் மன விடியலின்
மறக்கப்படாத சூரியன்!

என் இலக்கியப் பயணத்தின்
முன்னோடிச் சுவடு!

வெம்மையாய்
தென்றலாய்
குழந்தையாய்

உங்களுக்குள்
எத்தனை பண்பு முகங்கள்!

தந்தையே

உங்கள் பிடிவாதமும் இறுக்கமும்
முன் கோபங்களும்
என்னை அழ வைத்தாலும் கூட

நீங்கள் ஓவியராக
நடிகராக
எழுத்தாளராக
பாடகராக
பொறியியலாளராக
வைத்தியராக
அதிபராக
எல்லாம் தெரிந்தவராக

உங்கள் அறிவாற்றல் கண்டு
பிரமித்த பல கணங்கள் - இன்னும்
நெஞ்சின் பதிவுகளாகிக் கனக்கின்றன!

மழலைப் பருவத்தில்
உங்கள் தோளேற்றி பாட்டிசைத்து
 தூங்கவைத்த அந்தக் கணங்கள்
இன்னும் ஏக்கத்தில் கசிகின்றன!

என் வாழ்க்கைச் சாலையில்
நீங்கள் பரப்பிச் சென்ற அனுபவங்கள்தான்
இன்று
இணையம் வரை  - என்
முகவரியாகி நிற்கின்றது!

என் கையெழுத்து அழகாம்!
சூழவுள்ளோர் புகழுரைக்கையில்
தந்தையே
நானறிவேன்
என் எழுத்துக்களின் ஆதாரம்  உங்கள்
நிறமூர்த்தங்கள்தானே!

நீங்கள்
வித்தியாசமான தந்தை
கண்டிப்பான தந்தை
இருந்தும்
உங்கள் நெகிழ்வுகளிலெல்லாம்
பனித்துளிகளாய் படர்ந்து கிடக்கின்றது பாசம்!

என் ஒவ்வொரு நகர்வையும்
கண்காணிக்கும் உங்கள் பார்வைகள்
என் வாழ்வைப் பாதுகாக்கும்
 சட்டவேலிகள்!

கல்வி
உங்கள் வழிகாட்டலில் நான் பெற்ற வரம்!
தைரியம்
நீங்கள் எனக்கூட்டிய ஊட்டம்!
தன்னம்பிக்கை
உங்கள் அனுபவங்களால் கிடைத்த வெகுமதி!

வாப்பா!
அழகான மொழிதான் அன்பை உணர்கையில்!
தந்தை
சிந்தைக்கு பூட்டப்பட்ட பாதுகாப்புத்தான்!

பெண்ணடிமைத்தனத்தில் உருளாமல்
"ஜான்சி ராணியாய்" நான் வாழ
நீங்கள் காணும்  கனவுகள்
இப்பொழுதுதான் மெல்ல விரிகின்றன
என் நிஜப்படுத்தலில்!

நாட்கள் உதிர்கின்றன
தேகமும் நோய்க்குள் கரைகின்றன
வாப்பா
உங்கள் ஆரோக்கியம் தளிர்த்திட
பிரார்த்திக்கின்றேன் வல்லோனிடம்!

போலியான இவ்வுலகில்
வேலியாய் பொய்மைகள்!
இருந்தும்
பெற்றவர்கள் உங்கள் உண்மையன்பில்
என்றும்
நெகிழ்ந்து கிடக்கும் பாச மகளாய் நான்!

- Jancy Caffoor-
      19.06.2014
                                                         

எல்லாம் முடிந்து போனது


நேற்றிரவுக் காற்றில்
உதிர்ந்து பறந்தன சருகாய் கனவுகள்!
உறங்கமறுத்த விழிகளோ
இறந்து கிடந்தன விரக்தியில்!

சில காலம் சிறகடித்த ஆசைகள்
சின்னா பின்னாமாகியதில்
கண்ணீர்க் கசிவுகள் முட்கம்பிகளாய்
கன்னங்களைச் சிதைத்தன!

"நீயா பேசியது"
பாடலிப்போ
எனக்கும் பிடிக்கும்

உனக்குப் பிடித்த என் மௌனம்
இனியென் பாஷையாகிப் போனதில்
ஊமையாகி நிற்கின்றேன்
உன்னைத் தொலைத்தவளாய்!

உன் தேவதை நானென்றிருந்தேன்
நம் இடைவெளிகள் மறந்து
தவறுகள் உணர்த்தப்பட்டதில்
பறக்கின்றன துன்ப விட்டில்கள்
என்னைச் சுற்றி!

- Jancy Caffoor-
      19.06.2014

அழகு



நேற்றைய அனுபவங்களை , நாளைய எதிர்பார்ப்புகளுக்காக உழைக்கும் உழைப்பே இன்றைய வாழ்க்கை          


------------------------------------------------------------------------------------------------


தம் மழலையுலகில் எனை வீழ்த்தி
புன்னகைச் சிதறல்களால் மனதையீர்த்து நிற்கும்
குட்டிச் செல்லங்கள்.........
அஸ்கா + சஹரிஸ் பாப்பாக்கள்!
---------------------------------------------------------------------------------------------



சின்னச் சின்ன சம்பவங்கள்தான் பெரிய சரித்திரங்களாக மாற்றப்படுகின்றன. நாளைய சரித்திரம் நம்மைத் தூற்றாதிருக்க, நமது சம்பவங்கள் நல்லவையாகவே இருக்கட்டும்

------------------------------------------------------------------------------------------------    

இன்று நாம் தவற விடும் சந்தர்ப்பங்களுக்காக, நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அன்பளிப்புத்தான் "நாளை" எனும் நாள்!
--------------------------------------------------------------------------------------------------

வாழ்க்கையை ஒருபோதும் மன அழுத்தங்களுக்கு இரையாக்காதீர்கள். ஏனெனில் அதிலிருந்து நம்மால் இலகுவில் வெளியேற முடியாது. இயல்பாய் இருப்போம். இதமாய் பழகுவோம்..
----------------------------------------------------------------------------------------------------

யாரோ நம் வாழ்வைப் பின்தொடர்பவர்களாக வரலாம். எனவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வும், எப்பொழுதும் அடுத்தவர் விரும்பக் கூடிய ஒன்றாகவே இருக்கட்டும்!
----------------------------------------------------------------------------------------------------

நாம் நாடிப் போகும் நட்புக்களை விட, நம்மைத் தேடி வரும் நட்புக்களில்தான் உண்மையான அன்பும், அக்கறையும் அதிகமாக இருக்கும். இந்நட்புக்களே நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரும்.

----------------------------------------------------------------------------------------------

என்னையும் உன்னையும்  சுற்றும் பூமியாய்!
கண்ணெதிரே இதழ் விரிக்கும் சின்னப் பூமகள் !
-----------------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------

பிரச்சினைகள்தான் வாழ்க்கை!
புரிந்து கொண்டோர் - தம் வாழ்வை
தாமே காத்துக் கொள்கின்றனர்!
----------------------------------------------------------------------------------------



- Ms. Jancy Caffoor -

உனக்காய் நீ


உன் பாதையில் நானில்லை
புரிந்தும் காத்திருக்கின்றாய்
என் தடமோரம் பாசத்துடன்!

வலிக்கின்றது
தினம் என்னைத் தேடும்
உன் பாசத்தின் செறிவும்
என்னைப் பற்றிய நம்பிக்கைகளும்!

அன்றென்னை தொலைத்துவிட்டு
இன்றல்லா தேடுகின்றாய்
சந்து பொந்துகளில்!

மழையில் நனைந்தவாறே- எனக்கு
குடை பிடிக்க நினைக்கும் உன்னிடம்
கேட்கின்றேன் - நீ
நல்லவனா வில்லனா!

முட்களை முகமாக்கி நிற்கும் உன்னிடம்
சத்தமில்லா ஓசையாய் விம்மலொன்று
வெடித்தெழுகின்றது இப்பொழுதெல்லாம்!

அழுகின்றாயா
எனக்காக அழுகின்றாயா
ரணங்களை மட்டும் உனக்காக்கும் எனக்காக
தினம் அழுகின்றாயா!

புய லுனக்குள்ளும்
பூத்திருக்கும் பூவுக்குள்
மறைந்திருக்கும் மகரந்தங்களாய்
என் நினைவுகளை மட்டும் விட்டுச் செல்கின்றேன்
உன்னிடம்!

நீ வாழ வேண்டும்
உனக்காய்
உனக்குள் நீயாய்!


- Jancy Caffoor-
      19.06.2013

நீரோடை








எப்பொழுது அன்பு மனதினை நிரப்ப ஆரம்பிக்கின்றதோ, அன்றிலிருந்து சந்தோஷங்களும் நம்மைப் பின்தொடரும் நிழல்களாய் மாறி விடுகின்றன.....
----------------------------------------------------------------------------------------------------------

அன்பும் ஓர் போதைதான்...........
அதனாற்றான் அன்பு கொண்டோரை விட்டுப் பிரிய மறுக்கும் மனசு, ஆழ் அன்பில் மோகித்துக் கிடக்கின்றது! 
--------------------------------------------------------------------------------------------------------

காதலானது....... 
வயது, அழகு, பணம் , அந்தஸ்து நோக்கியே தேடி ஓடும் .......
ஆனால்
உண்மை நட்பும் , உறவுகளும்  தூய அன்பை மாத்திரமே நாடியே வரும்!

அதனால்தான் உள்ளத்தில் ஒன்றை வைத்து வேறொன்றைப் புறம் பேசும் காதலை விட,  நட்பே என்றும் சிறந்தது. அழகானது, ...........
---------------------------------------------------------------------------------------------------



பெறுமதி குறைந்த நாணயங்கள்தான் சத்தமெழுப்பும்
பெறுமதி மிக்க ரூபா நோட்டுக்களோ மௌனித்துக் கிடக்கும்!
வார்த்தைகளை சுருக்குவது ஒழுக்கப் பண்பின் வெளிப்பாடு..
----------------------------------------------------------------------------------------------------

யதார்த்தம்


அருகிலிருக்கும் போது  புன்னகைக்கும் உதடுகளை விட
பிரிவினில் கலங்கி நிற்கும் கண்கள் தான் அன்பை அதிகம் சொல்லி நிற்கும்!
------------------------------------------------------------------------------------------------------


நேற்றைய தவறுகள் இன்றைய பலகீனம்.....
இன்றைய பலகீனத்திற்காக நாளைய பலத்தை இழப்பது அறியாமை!
------------------------------------------------------------------------------------------------------

யாரை அதிகமாக நேசிக்கின்றோமோ, அவர்களின் மௌனமே, நம் சந்தோஷத்திற்கும் விரைவில்  நாள் குறித்து விடுகின்றது!
-------------------------------------------------------------------------------------------------------



வலித்தது - உன்
வார்த்தையல்ல!
நீ எனக்குள் விட்டுச் சென்ற
உன் மௌனம்!
--------------------------------------------------------------------------------------------------------

விளக்கொளி தேடி சிறகறுக்கும் விட்டிலாய்....
உன் விதி வழி நசிந்து
இறக்கின்றேன் நானும்.....
அணுஅணுவாய்!
--------------------------------------------------------------------------------------------------------


காதலின் கற்பு வாழ்க்கையிலில்லை
வார்த்தைகளில்!
ஏனெனில் வார்த்தைகள் மகிழ்வைக் கரைத்து
காதல் வாழ்க்கையைச் சிதைக்கக்கூடியவை!
--------------------------------------------------------------------------------------------------------

நம்மைக் கடந்து போன நினைவுகளை
நாம் எப்பொழுது மறக்கின்றோமோ....
அன்றே.............
மனிதரெனும் அந்தஸ்தும் நம்மை விட்டுப் போய்விடும்!
--------------------------------------------------------------------------------------------------------



கடிக்கின்ற நுளம்புகளை
அடிக்கின்றேன்................
துடித்தே இறக்கின்றன அவை- நாமும்
படிக்கின்ற பாடம் " தீயோர் வாழார்"


- Ms. Jancy Caffoor -