About Me

2013/06/19

தந்தைக்கோர் கடிதம்


தந்தையே
உங்களுக்கான என் முதல் கவிதையிது!

நீங்கள்!

என் மன விடியலின்
மறக்கப்படாத சூரியன்!

என் இலக்கியப் பயணத்தின்
முன்னோடிச் சுவடு!

வெம்மையாய்
தென்றலாய்
குழந்தையாய்

உங்களுக்குள்
எத்தனை பண்பு முகங்கள்!

தந்தையே

உங்கள் பிடிவாதமும் இறுக்கமும்
முன் கோபங்களும்
என்னை அழ வைத்தாலும் கூட

நீங்கள் ஓவியராக
நடிகராக
எழுத்தாளராக
பாடகராக
பொறியியலாளராக
வைத்தியராக
அதிபராக
எல்லாம் தெரிந்தவராக

உங்கள் அறிவாற்றல் கண்டு
பிரமித்த பல கணங்கள் - இன்னும்
நெஞ்சின் பதிவுகளாகிக் கனக்கின்றன!

மழலைப் பருவத்தில்
உங்கள் தோளேற்றி பாட்டிசைத்து
 தூங்கவைத்த அந்தக் கணங்கள்
இன்னும் ஏக்கத்தில் கசிகின்றன!

என் வாழ்க்கைச் சாலையில்
நீங்கள் பரப்பிச் சென்ற அனுபவங்கள்தான்
இன்று
இணையம் வரை  - என்
முகவரியாகி நிற்கின்றது!

என் கையெழுத்து அழகாம்!
சூழவுள்ளோர் புகழுரைக்கையில்
தந்தையே
நானறிவேன்
என் எழுத்துக்களின் ஆதாரம்  உங்கள்
நிறமூர்த்தங்கள்தானே!

நீங்கள்
வித்தியாசமான தந்தை
கண்டிப்பான தந்தை
இருந்தும்
உங்கள் நெகிழ்வுகளிலெல்லாம்
பனித்துளிகளாய் படர்ந்து கிடக்கின்றது பாசம்!

என் ஒவ்வொரு நகர்வையும்
கண்காணிக்கும் உங்கள் பார்வைகள்
என் வாழ்வைப் பாதுகாக்கும்
 சட்டவேலிகள்!

கல்வி
உங்கள் வழிகாட்டலில் நான் பெற்ற வரம்!
தைரியம்
நீங்கள் எனக்கூட்டிய ஊட்டம்!
தன்னம்பிக்கை
உங்கள் அனுபவங்களால் கிடைத்த வெகுமதி!

வாப்பா!
அழகான மொழிதான் அன்பை உணர்கையில்!
தந்தை
சிந்தைக்கு பூட்டப்பட்ட பாதுகாப்புத்தான்!

பெண்ணடிமைத்தனத்தில் உருளாமல்
"ஜான்சி ராணியாய்" நான் வாழ
நீங்கள் காணும்  கனவுகள்
இப்பொழுதுதான் மெல்ல விரிகின்றன
என் நிஜப்படுத்தலில்!

நாட்கள் உதிர்கின்றன
தேகமும் நோய்க்குள் கரைகின்றன
வாப்பா
உங்கள் ஆரோக்கியம் தளிர்த்திட
பிரார்த்திக்கின்றேன் வல்லோனிடம்!

போலியான இவ்வுலகில்
வேலியாய் பொய்மைகள்!
இருந்தும்
பெற்றவர்கள் உங்கள் உண்மையன்பில்
என்றும்
நெகிழ்ந்து கிடக்கும் பாச மகளாய் நான்!

- Jancy Caffoor-
      19.06.2014
                                                         

6 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..பார்வைக்கு
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_30.html?showComment=1383099548945#c5143564545881580038
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!