இனவாதத் தீஇனவாதம்.....!

மீண்டு மிங்கே
'காவிகளால்'!

கலிமா மொழிவுகளை
சாத்தானிய தீ நாக்குகள்
விழுங்கும்

இந்நேரம்.......

ஈமானிய நெஞ்சங்களின் குருதிப் பிழம்புகள்
எம் விழிகளில்
கண்ணீர்க் கசிவுகளாய்
படிகின்றன....

போர் எச்சங்களின் வடுக்கள்- இன்னும்
பாரெங்கும் காட்சியாய்
அலைகையில்....
மீண்டும்
தாரோட்டுகளில்
ஜனாஸாக்களைக் குவித்து
இனவாதம் பேசும் மாக்களாய்
சில பெரும்பான்மைகள்!

நம்
அரசியல்வாதிகளோ....
சொகுசான சிம்மாசனங்களின் இருக்கையை
வெறும்......
செவ்விகளால்  மாத்திரம்
நிரப்பிக் கொண்டிருக்க...

இங்கே.....
இலங்கையில்
மானுடம் ஏலம் போகின்றது
மாசடைந்த வன்முறைகளால்!.

இதோ ....
மீண்டுமொரு இன அழிப்பு

காடையர்களின்
தீ வைப்பும்
படுகொலைகளுமாய்
அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன

அழுத்கம...
பேருவளை....யில்!

இம் மக்களின் துன்பம் போக்க
நம் மனங்கள்....
இறைஞ்சட்டும் து ஆ க்களை
வல்லோனிடம்!

(இந்தக் கவிதைக்கு ஏற்ற படமொன்றைத் தேடி இலங்கையின் பிரபல்ய தமிழ் பத்திரிகையின் முகநூல் பக்கத்திற்கு சென்றேன். அப்பத்திரிகை இந்தச் சம்பவம் தொடர்பாக பிரசுரித்த செய்திகளுக்கு கீழே இன்னுமொரு சிறுபான்மையினராகிய தமிழ் சகோதரர்கள் சிலர் முஸ்லீம்களுக்கு எதிரான  தமது  இனவாதக் கருத்துக்களை தூவி இருந்தனர். ஊடகங்கள் மக்களின் கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் இவ்வாறான இனவாதங்களை மறைமுகமாக தூவுவதை அனுமதிக்க முடியாது. ஏனெனில் இன்றைய இளம் சமுகத்தினர், தமது சமயம், சமுகத்தின்பால் கொண்டுள்ள ஆழ்ந்த பற்றுக் காரணமாக பிற சமுகத்தினர்மீது தமது காழ்ப்புணர்ச்சியை கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இதன் பிரதான தளமாக முகநூல் விளங்குகின்றது.

எங்கு பெரும்பான்மை இருக்கின்றதோ, அங்கே வன்முறைக் கலாசாரம் ஊடுருவி சிறுபான்மையினரை காயப்படுத்துகின்றது. தமிழ்மொழியால் ஒன்றுபட்டவர்கள் தமது சகோதர இனம் தாக்கப்படும்போது ரசிப்பது மானுடம் அல்ல...பொது எதிரியை பலவீனப்படுத்த அதிகாரமோ, வன்முறையோ வேண்டாம். அஹிம்சையேந்தி போராடுங்கள். ஒற்றுமையும், மனோ திடமும் இறை பிரார்த்தனையும் பெரிய சக்தியாகி பலகீனப்படுத்தும் அவர்களை....

இலங்கையில் முஸ்லிம்கள் திட்டமிடப்பட்டு இன அழிப்புக்களுக்குள்ளாக்கப்படுகின்றனர். அன்று 1990 ல் வடபகுதியில் (யாழ்ப்பாணம் தொடக்கம் மன்னார் வரை ) விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை சிதைத்தார்கள்..முகவரிகளை இடமாற்றி அகதிகளாக்கினார்கள் ...அவர்களின் பொருளாதாரத்தை பிடுங்கி எடுத்தார்கள்...

இன்றோ  முஸ்லிம்களை இன அழிப்புக்குள்ளாக்க பொதுபல சேனா போன்ற  அமைப்புக்களின்   தலைமைத்துவம்...

எங்கு அப்பாவிகள் அழிக்கப்படுகின்றார்களோ...அங்கு வன்முறைகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுகின்றது! எந்த இனமானாலும் அப்பாவிகளின் துயரமும் சாபமும் துன்பப்படுத்துவோரின் இருப்பையே அழித்துவிடும் என்பது காலம் கற்றுத் தந்த உண்மை!

எனவே......

வன்முறையற்ற சமுதாயம்
இன்றைய வாழ்க்கையின் எதிர்பார்ப்பு!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை