About Me

2014/08/16

அந்தக் கடைசி நிமிடங்கள்



அந்தக் கடைசி நிமிடங்கள்
----------------------------------------------
இருள் கௌவும் நேரம்.....

உடல் அதிகமாக வியர்க்கும் உணர்வு. மெல்லத் தலையை உயர்த்த முயற்சிக்கின்றேன். முடியவில்லை.

உஷ்ணம்................

மூச்சுக் காற்றில் உட்காந்து விளையாட ஆரம்பித்தது. ஆனாலும் வியர்வையால் நனைந்து போன உடல் மட்டும் ஜில்லென்று....

"ம்"

முனகுகின்றேன்.....

கண்களில் கண்ணீர் கன்னம் வழியே கோடு கிழிக்க...

மனசும் உப்புக் கரிக்கின்றது.

"ஓவென" கத்த வேண்டுமென்ற உணர்வு!

இறுதி ஊர்வலத்திற்காக டாக்டர் நாள் குறித்தாகியாச்சு..இந்தப் பூமியை விட்டு நீங்குவதற்கு ஏதோ ஒரு காரணம் கிடைத்து விடுகின்றது..

நிமிடங்களின் நச்சரிப்பையும் பொருட்படுத்தாது இதயம் மீண்டும் துடிக்கின்றது..

"வலியால் மெல்ல முனங்குகின்றேன்"

"மாரடைப்பு" எனக்கும் நாள் குறித்து விட்டதா...

மரண வலியிலும் என் கண்கள் பனிக்கின்றன. இதயத்தின் மாறுபட்ட துடிப்பை என்னால் உணர முடிகின்றது.

அது வலியா.........அழுகையா!

என்னைச் சுற்றியுள்ள கூட்டத்தை விலக்கி கண்கள் இரகஸியமாக அவனைத் தேடுகின்றது..

"அவன் வருவானா"

நப்பாசையில் விரிந்த மனதை, பகுத்தறிவு அடக்குகின்றது..

"இந்த இறுதி ஊர்வலத்தை அவனுக்கு யார்தான் அறிவிப்பார்கள். பக்கத்திலா இருக்கின்றான். கண்கலங்கி விடையனுப்ப!

இதயம் மீண்டும் வலிக்கின்றது..

"அவன் நினைவுகள் வாழ்ந்த கூடு அது. உயிர்ப்போடு ஆசைகளையும் கனவுகளையும் செல்லச் சண்டைகளையும் சேமித்த கூடு அது"

கண்கள் நனைவதையும் பொருட்படுத்தாமல், விழிகள் நிரந்தரமாக மூடத் தொடங்குகின்றன...

அவன் நாளை என்னைத் தேடி வருவான். அதுவரைக்குமாவது என் இற்றுப் போன இதயம் துடிப்பை மறக்கலாமா...

ஆத்மாவின் ஓலம் புலப்படாமலே, வெறும் மெய்க்கூட்டை நால்வர் சுமந்து செல்கின்றனர் கண்ணீருடன்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!