About Me

2014/09/30

வாழ்க்கை


சூழ்நிலைகள்தான் நம்மைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் நேற்று எடுத்த முடிவுகள் இன்று அவசியமாகாமல் நாளை மாற்றப்படலாம். மாற்றங்கள்தான் வாழ்க்கை..காலமும் நம்மை நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்கின்றது. அதுதான் வாழ்க்கையின் பலம். சுவாரஸியங்களை நமக்குள் விட்டுத் தரும் தோற்றங்கள்.....

வாழ்வோம்!
வாழ்ந்து காட்டுவோம்!!
நமக்குப் பொருத்தமான வாழ்வுக்குள் நம்மைத் தயார் படுத்துவோம்!!!


-----------------------------------------------------------------------------------

ஈரம் மறந்த பூமியோரம்
வேரூன்றும் உயிர்க்கூடுகளின்....
கனவுகளில்  நீராகாரம்!
கண்களிலோ விழிநீர் கோலம்!


-------------------------------------------------------------------------------------------------


சிதறிக் கிடக்கும் சின்னச் சின்ன விசயங்களில்தான்
பென்னம் பெரிய சந்தோஷங்கள் வீழ்ந்து கிடக்கின்றன....
அதுபுரியாம நாம அந்தக் கணங்களையும் தொலைத்துவிட்டு எங்கேயோ போய் தேடிக் கொண்டிருக்கின்றோம் மன அமைதியை!

வாழ்க்கையை ரசிப்பதற்கு நம்மை நாமே ஏற்றுக் கொள்ளும் மனம் போதும்.............நம்மை நாமே ஆளும்போதுதான் நமது பலமும் பலகீனமும் புரிய ஆரம்பிக்கின்றது! வாழ்கின்றோம் என்பதைவிட இப்படித்தான் வாழனும் எனும்போது மனதும் பக்குவப்படுகின்றது!

இந்தப் பக்குவம்தான் நிம்மதிக்கான அடிவருடல்!
வாழ்ந்துதான் பார்ப்போமே!

--------------------------------------------------------------------------------------------------

உன்னை எனக்குத் தெரியும் - நீ
என்னிடம் உன்னை விட்டு விட்டுப் போன
கணத்திலிருந்து!



இருந்தும்............
உனக்காய் காத்திருக்கின்றேன்
சிறு பிள்ளையாய் நானும்!
என்னை நீயும் அணைத் தென் நெற்றியில்
அழுத்து மந்த அன்புக்காய்
காத்திருக்கின்றேன்.........
இன்னும்!

------------------------------------------------------------------------------------


பளபளக்கும் ஔி நாடி
பறந்து வரும் ஈசல்களெல்லாம் - தம்
சிறகறுக்கின்றன அற்ப ஆயுள்தேடி!
.
சிறப்பான மாந்தரும் - தம்
தவறுகளுக்காய் வருந்தாது வழி
தவறிப் போகின்றனர் அற்பர்களாய்!

--------------------------------------------------------------------------------------


அன்பு சாகா வரம்
அதனால் நீயோ......
எனக்கு இன்பஸ்வரம்!
பூக்களுக்கும் வலிக்குமோ
நீ விரல் தீண்டா உன் பூவை அவை
தாங்குவதால்!

--------------------------------------------------------------------------------------

இருட்டில் இறுமாந்திருந்த
குப்பி லாம்பு.................
ஔிப் பிராவகத்திலே
அழுது வடிகின்றது!
ஏற்றுவோர் யாருமின்றி!
.
அடுத்தவருக்காக தன் சுயமிழப்போரும்
கவனிப்பாரற்று காலத்துள் புதைந்து விடுகின்றனர் 
தன்மானமிழந்து!
.
இதுதான் வாழ்க்கைப் போக்கு!

------------------------------------------------------------------------------------------

கனவுகளுக்கும் கால்கள் இருக்கின்றதா
தினம்..........
உன்னிடம்தானே வந்து நிற்கின்றன.......
இருந்தும்
விரல் நீட்டுகின்றாய்
உன்னை மறந்து போவதாய்!

------------------------------------------------------------------------------------------


அதிகாரம் ஒரு ஆட்சிபீடம்...
அதன் கையசைப்பில்
ஆயிரம் தலை கவிழ்ப்புக்கள்!
இருந்தும்....
சூடிக் கொள்ளும் முடி
வாடி வீழும்போது......
ஓடியணைத்துக் கொள்ள யாரும் வருவதில்லை - தன்
நிழல் தவிர!

-------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!