படிகள்

பத்தாண்டு சிறப்பிதழ் - விமர்சனமும் நிகழ்வு பற்றிய பார்வையும்
---------------------------------------------------------------------------------------இலக்கியமென்பது இரசனை மட்டுமல்ல தாகமிகு உணர்வுகளைத் தொகுக்கும் கலை..அந்தவகையில் ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்கின் படிகளில் சிறு இலக்கிய  இதழ்களும் அவ்வவ்போது பங்களிப்புச் செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது...

எல். வஸீம் அக்ரமை ஆசிரியராகக் கொண்டு அநுராதபுரத்திலிருந்து வௌிவரும் "படிகள்" எனும் இரு மாத 34வது இலக்கிய  இதழ் தனது பத்தாவது ஆண்டின் சிறப்பிதழாக கடந்த 14 செப்ரெம்பர் 2014 ந்திகதியன்று அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழுவினரால் வௌியிடப்பட்டது..

Water Garden Hotel வரவேற்பு மண்டபத்தில் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு வௌியீட்டு மலர் மற்றும் இலக்கிய ஆய்வரங்கில் பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

எந்தவொரு நூலினதும் உள்ளடக்கத்தின் கனாதியை பிரதிபலிப்பது அதன் முகப்பட்டைதான்..இவ்விதழிலும் மயான தேசத்தில் இரை தேடும் காகமொன்றின் பிம்பமாய் முகப்பட்டை நெய்யப்பட்டுள்ளது இதனை வறட்சிப் பின்னணியிலும் ஆழமான தேடலின் ஒலிப்பாகவே நான் கருதுகின்றேன்..

தமிழ்பேசும் மக்கள் குறைந்தளவில் வாழும் அநுராதபுரத்திலிருந்து மொழியாகும் இவ் இலக்கிய இதழின் சகல ஆக்கங்களும் தனது ஆழமான உட்கிடக்கையை எளிய சொற் பதங்களால் யாரும் விளங்கிக் கொள்ளும் விதமாக தன்னகத்தை கொண்டுள்ளமையானது நமது ஆரோக்கியமான எதிர்பார்ப்பின் அடையாளங்களாக மிளிர்கின்றதென்றால் மிகையில்லை..

நூலாசிரியரின் "படிகள் தொடர்பான கடந்து வந்த ஆழ்மன யாத்திரை", அன்பு ஜவஹர்ஷா சேரின் "அநுராதபுர மாவட்ட கலை இலக்கியப் பதிவுகள்", பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்களின் நேர்காணல் எம். சீ ரஸ்மினின் "பால்நிலை சமத்துவம்" எனும் ஆய்வுக்கட்டுரை, கெகிராவை சுலைஹாவின் "இரு மொழிபெயர்ப்புக் கவிதைகள்", எம்.எஸ் றஹ்மத்நிஸாவின் " பிரதான பாட அடைவுகளில் தாய்மொழியின் செல்வாக்குப் பற்றிய இலக்கிய மீளாய்வு", சி. ரமேஷின் ஈழத்து குறுங்கதைகள், கலாபூஷணம் வைத்திய கலாநிதி தாஸிம் அகமதின் "தென்கிழக்கிழங்கை முஸ்லிம் தேசத்தார் மாண்பு",முருகபூபதியின் "பாரதியின் காதலி", மேமன் கவி அவர்களின் "தோல் நிற அரசியலும் இரு ஆவண குறும்படங்களும்" மன்சூர் ஏ காதரின் "கூட்டுப்பிரக்ஞையின்மை பற்றிய வாக்குமூலம்"  போன்ற தரமான பதிவுகளுக்கிடையே யதார்த்த கவிதைகளும் சிறுகதைகளும் படிகளை நிரப்பமாக அலங்கரித்திருந்தன..

இவற்றுக்கும் மேலாக இவ்விதழில் எனது "நட்பே நீ" எனும் கவிதையும் இடம்பெற்றிருந்தது. பிரசுரித்தமைக்கு நன்றிகள் பற்பல...

மேலும் இந்நிகழ்வானது
  • அநு.வை. நாகராஜன் அரங்கு (படிகள் 10வது ஆண்டு இதழ் வௌியீடு)
  • அன்புதாசன் அரங்கு  (இலக்கிய அரங்கு)
  • அமீர் சுல்தான் அரங்கு  (பால்நிலை சமத்துவம் , இஸ்லாமிய நோக்கு தொடர்பான கலந்துரையாடல்)
என அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன.

மேலும் இவ்விதழ் வௌியீட்டு நிகழ்வில் 

மொழிபெயர்ப்புத் துறையில் சிறு சஞ்சிகைகளின் பங்கு தொடர்பான  கெகிராவ சுலைஹாவின் ஆய்வுரையும், 
2008ற்குப் பிந்திய அநுராதபுர மாவட்ட கவிதைப் போக்குத் தொடர்பான  நாச்சியாதீவு பர்வீனின் ஆய்வுரையும்சிறப்பாக முன்வைக்கப்பட்டன.
அவ்வாறே கிண்ணியா நஸ்புள்ளா . எழுத்துக்களையும் வார்த்தைகளையும் காதலில் நனைத்தவாறே அழகான புதுக்கவிதையொன்றையும் ரசிக்கும்படியாக உலாவவிட்டார்..

எம். பி நௌபர் வரவேற்புரையையும் நேகம பஸான் நன்றியுரையும் முன்வைத்தனர்.

நிகழ்வின் இறுதியம்சமாய் எம். சி . ரஸ்மினின் பால்நிலை சமத்துவம் தொடர்பான இஸ்லாமிய நோக்கு பற்றிய குழுக்கலந்துரையாடல் நடைபெற்றது. பெண்கள் தொடர்பான குடும்பம், கல்வி, திருமணம், தொழில் உட்பட பல சமுகத்தின் அன்றாட நிகழ்வுகள் மூல ஆதாரங்களுடன் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தது. பத்துப் பக்கத்தினையும் மீறக்கூடிய கனமான விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பான விமர்சனங்க ளுக்காக  ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டது ஓர் குறைபாடே..ஏனெனில் மேலோட்டமான வாசிப்பு சிறப்பான விமர்சனத்தை முன்வைக்க முடியாது.​

இந்நிகழ்வில் தேனீர் உபசாரம், மதிய உணவும் பரிமாறப்பட்டது.

இனிவரும் ஆண்டுகளிலும் படிகள் இன்னும் பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி காலத்தின் சுவடுகளில் தன்னை சிகரமாக நிலைப்படுத்த வாழ்த்துகின்றேன்..

- ஜன்ஸி கபூர் -

படிகள் வௌியீட்டின்போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள்
                                 
                                                              கௌரவ அதிதிகள்


அன்பு ஜவஹர்ஷா சேர்  தலைமையுரை 


நூலாசிரியர் வஸீம் அக்ரம் படிகள் வௌியீட்டு உரை


மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் அவர்கள்
இலக்கிய ஆய்வரங்கின்  ஆரம்ப வுரையாற்றும்போது


எழுத்தாளர் அ.யேசுராசா  அவர்கள் 
அலை,கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களின் அனுபவங்கள் தொடர்பான ஆய்வுரை 


ஈழத்து இதழ்கள் வரிசையில் படிகளின் பங்கு பற்றி 
டொக்டர் தாஸிம் அகமது  அவர்கள் 


நாச்சியாதீவு பர்வீன், கிண்ணியா நஸ்புல்லா, ரஹ்மத்துல்லா  உட்பட
சபையோரின் ஒரு பகுதி


கெகிராவ சுலைஹா, கெகிராவ சஹானா உட்பட
சபையோரின் ஒரு பகுதி


முதற்பிரதி வழங்கும்போதுநூலின் விலை - 250

தொடர்புகளுக்கு- 

படிகள் பதிப்பகம்
அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழு
52, துருக்குராகம
கஹட்டகஸ்திகிலிய
50320No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை