மொஹமட் ஸல்மான்அஸ்ஸலாமு அலைக்கும்,


உலகளாவிய ரீதியலி்ல் காலத்திற்குக் காலம் மனிதர்களால் பல்வேறு சாதனைகள் புரியப்பட்டு அவை சாசனங்களில் பதியப்பட்டு வருகின்றன.

ஆனால் ..........

எவ்வித உலகாயுத நன்மைகள், பதவிகள் என்பவற்றை எதிர்பாராது , இறை திருப்தியை மாத்திரம் மனதிலிருத்தி புரியப்படுகின்ற அல்குர்ஆன் மனனமிடல் எனும் இந்த நினைவாற்றல் சாதனை ....உலக நிறைவு வரை நிகழ்த்தப்படும் ஆன்மீகச் சாதனையாகும்...இது பால், அந்தஸ்து, வயது வேறுபாடின்றி அவரவர் முயற்சிக்கேற்றபடி வெவ்வேறு கால இடைவௌியில் நிகழ்த்தப்படும் ஒன்றாகும்..

அல்குர்ஆன் மனனமிடலென்பதும் அல்லாஹ்வின் ஏற்பாடே...

ஏனெனில் அல்குர்ஆன் (87 :6) வசனம் பின்வருமாறு கூறுகின்றது..

"நாம் ஓதக் கற்பிப்போம். நீர் அதனை மறக்கமாட்டீர்' ஆக கற்றுக் கொடுக்கும் பொறுப்பையும் மனத்தில் இருத்தும் பொறுப்பையும் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹ வத ஆலா ஏற்றுக் கொண்டுள்ளான்.."

பொதுவாக அல்குர்ஆன் வசனங்கள் மிக இலகுவாக ஓதும் பொருட்டும் மனனமிடும் பொருட்டும் , எதுகை, மோனை, சொல்லாட்சி, ஓசை போன்ற பண்புகளையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.

அல்குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் அவற்றில் சரித்திரம், இயற்கை வினோதம், சட்டம், பொருளாதாரம், தர்மம், உரிமைகள், யுத்தம்  லொகீக வாழ்க்கை  உள்ளிட்ட  உடல், உள, தொழில் வாழ்க்கை தொடர்பான சகல விடயங்களும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதானால் அல்குர்ஆன் ஆன்மிக மற்றும் சிந்தனைப் புரட்சிக்கான ஏடு. இதனை ஓதுவோரும், மனனனமிடுவோரும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இன்றைய நாட்களிலே.......

கடந்தவாரம் ...........

எமது பாடசாலையிலும்  அல்குர்ஆன் மனனமிட்டு ஹாபிஸாக ஓர் மாணவர் வௌியேறியுள்ளார்... அல்ஹம்துலில்லாஹ்!

அம்மாணவனுக்கும் நான் கடந்த சில வருடங்களாகப் பாடமெடுத்தவேளையில் அவர் வௌிப்படுத்தியிருந்த நடத்தைப் பண்புகளை லேசாக இன்று நினைவிலிருத்துகின்றேன்..........

அமைதி, அடக்கம், புன்னகை, ஆன்மீகம் போன்ற பல பண்புகள் அவரணியும் அடையாளங்கள்!

அம்மாணவர்!

பாடசாலை மாணவர்களிடையே நான் கண்ட ஒழுக்க முத்து........

ஆசிரியர்களை எப்போதும் கனம் பண்ணும் அந்தப் பண்பின் அறுவடையாளர்
ஜயந்தி மாவத்தை , அநுராதபுரத்தில் வசித்து வரும்.............
மொஹமட் சல்மான் எனும் மாணவனே! தரம் 9 B (2014)

ஆர்ப்பாட்டத்துடன் அலையுமிந்த மாணவப் பருவத்தில் எப்போதும் இவரிடம் அமைதி  அடக்கத்தையே  கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்..

அந்த ஆச்சரியம்.....இன்று பலரின் வாழ்த்தாக மாறியுள்ளது!

பெரியோரைக் கனம் பண்ணும் ஒழுக்கமுள்ள மாணவர், பிறர் பாராட்டும், நேசிக்கும் பண்பாட்டைப் பெறுகின்றார் எனும் கூற்றுக்கு இவரும் சான்றாகியுள்ளார்.

அல்குர்ஆனை மனனமிட்டு ஹாபிஸாகும் இந்த சிறந்த செயலுக்கு அல்லாஹ்வின் கிருபை, இம்மாணவர் முயற்சி, பொருத்தமான வீட்டுச்சூழல், ஆன்மீகச் சமுதாயத்திற்கு வழிகாட்டும் பெற்றோர் தூண்களாகின்றார்கள். இவர்களுடன் சிறந்த கற்றல் ஒழுக்கத்தை வழங்கும் மதரஸாக்களின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

 ஏனெனில் ஒழுக்கமிகு சமூகக் கட்டமைப்பின் அடித்தளமிட இம்மதரஸாக்களும் பங்களிப்புச் செய்கின்றன!

அல்குர்ஆனை நன்கு மனனமிட்டு ஹாபிஸாக மாறியுள்ள மொஹமட் சல்மானிடம் இது தொடர்பாக நான் வினவியபோது, அம்மாணவரும் மனந் திறக்கின்றார் இவ்வாறு!

நான் அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டிருக்கும் போதே அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்டுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்!

அல்குர்ஆனை மனனமிடுவது சற்று கடினமான விடயந்தான் என்றாலும்கூட, அல்லாஹ்வின் கிருபையினால் அது சாத்தியமாகியுள்ளது. இதற்காக நான் மூன்று வருடங்களை எடுத்துள்ளேன். நான் அநுராதபுரத்திலுள்ள ஈமானியா அரபுக்கல்லூரியிலேயே அல்குர்ஆனை மனனமாக்கியுள்ளேன். ஈமானியா அரபுக்கல்லூரியில் நான் இரண்டாவது ஹாபிஸ்...

குர்ஆன் ஓதுவதிலும், கல்வி கற்பதிலும் நான் அதிக நாட்டம் கொண்டுள்ளேன். எனது தந்தையும் ஒரு ஹாபிஸ்..எனது சகோதரியும் மாவனல்லை ஆஇஷா ஸித்தீக்கா எனும் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கின்றார்.

எனது இலட்சியம் குர்ஆனை மறக்காமலும் பிழையின்றியும் என்றும் நினைவில் வைத்துக் கொள்வதாகும். அவ்வாறே கல்வியிலும் நாட்டம் செலுத்தி மௌலவி ஆசிரியராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதாகும்...

எனது இலட்சியம் நிறைவேற அல்லாஹ் த ஆலா துணைபுரிவானாக!
நீங்களும் துஆ செய்யுங்கள்......

என  தனது புன்னகை மாறா முகத்துடன் மன எண்ணங்களைப் பதிவாக்குகின்ற ஸல்மானுக்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை