About Me

2014/10/01

சிறுவர் தினம் - 2014


இன்று ஒக்டோபர்  01 ந் திகதி, சர்வதேச குழந்தைகள் தினம்..
-------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு குழந்தையும் தன் தாயின் கருவறையில் ஜனனிக்கும்போது தன் ஆத்மாவில் நன்மைகளை நிறைத்தே பிறக்கின்றன. நல்ல சூழல் நல்ல குழந்தைகளை சிருஷ்டித்து இவ்வுலகில் சிறப்பான மனித நடமாட்டங்களை உருவாக்குகின்றது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைக்க முடியாது என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல யதார்த்த வாழ்வியலின் ஓரம்சம். எனவே தம் நடத்தைகளைச் சீக்கிரமாக மாற்றக்கூடிய சிறுவர் பருவத்தை சரியான திசையில், இலக்கில் இட்டுச் செல்வது காலத்தின் தேவையாகும். ஏனெனில் இப்பருவத்தில் ஒழுக்கம் பிறழ்ந்து நடமாடும் ஒவ்வொரு பிறவியும் முதிர்ச்சியடைந்த பிறகு பலரின் விமர்சனத்திற்கு ஆளாகும் பாவிகளாகின்றனர்.

முதுமையின் விளைநிலம் இளமை ததும்பும் சிறுவர் பராயம். இப்பராயத்தை சிறப்பானதாக மிளிரச் செய்வது எமது- கட்டாயக் கடமையாகும்.  அந்த வகையில் குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு  பிரகடனப்படுத்தப்பட்ட இச் சிறுவர் தினம் இலங்கையில் ஒக்டோபர்  1 ஆம் திகதி கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததே!

இந்நாளில் உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் நினைவுபடுத்தப்படுகின்றன. ஏனெனில் உலகிலுள்ள காமுகர்கள் அரங்கேற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை சட்டங்களால் மட்டும் நிறுத்த முடியாது. ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாக்க தனது பலகீனத்தைக் களைதல் வேண்டும். அதற்காக தன்னை உணர்தல் வேண்டும். ஒவ்வொரு சிறாரும் தன்னை முழுமையாக உணர, சிந்திக்க சிறுவர்தினம் களமமைத்துக் கொடுக்கின்றது

குழந்தை தனது ஒவ்வொரு செயலையும் வளர்ந்தவரைப் பார்த்தே செய்கின்றது. பின்பற்றுகின்றது. எனவே சிறுவர் பருவம் என்பது குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தின் ஓர்நிலை. சிறார் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அநீதிகளையும் தொடர்ச்சியாக உள்ளெடுப்பாராயின் காலப்போக்கில் அவர்களும் வன்முறையெனும் ஆயுதமேந்திகளாகவே மாற்றப்படுவார்கள்.

எனவே இன்றைய சிறுவன் நாளைய தலைவன் என்பதை மனதிலிருத்தி அவர்களின்  அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க ஒவ்வொரு வளர்ந்தோரும் முன்வரல் வேண்டும். இதற்கு அடிப்படையாக  கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ள வழிப்படுத்த வேண்டும்.


எனவே  இன்றைய நாளில் சிறுவர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் போஷித்தவாறே, சகல சௌகரிகங்களும் பெற்று தத்தமது இல்லத்தில் மனநிறைவுடன் வாழ வாழ்த்துவதோடு,  இவ்வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்க நாமும் முதியோர் தினத்தை நினைவுகூர்ந்தவாறு இறைவனைப் பிரார்த்திப்போமாக!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!