மீள வந்துவிடு
இப்பொழுதெல்லாம்
இரவு முகிழ்க்கையில்.....
இதயத்தில் ஏனோ வலி!

அன்று.......

அல்லி பூத்தலை ஈர்த்த
 நம் நெஞ்சங்கள்....
ஔிப்பிழம்பாய் கசியும்
நட்சத்திரங்களை
ரகஸியமாய் நனைத்த
நம் விழிகள் ...
நிலாவின் குளிர்மையில்
உலாவிக் கிடந்த நம் வார்த்தைகள்...

இன்று.....

பிரிவின் மையத்தில்
பரிவில்லா காலத்தின் ஆணையாய்...
கலங்கிக் கிடக்கி்ன்றன!

இது யார் செய்த
சதியடா....
என்னைப் புரிந்து கொள்ளாத
பரிவில்லாத நீ தந்த பரிசடா!

உனக்குள் வாழ்ந்து
உன் சேய்கள் சுமந்த  என்னையே....
காகிதமாக்கி
காலனிடம் சேர்த்தா யுன் சினத்தால்...!

அடிக்கடி .....
என்னை உச்சரித்த
உன் னுதடுகளுக்குள்.....
இன்று நானில்லை!

நம்முள் நகரும் பல நிமிடங்கள்....
வெறுமையின் சிறைக்குள்
உன்னால்!

உன் ஞாபகத்துள்
மறந்துவிட்டஎன் னுயிர்க்கூட்டுக்குள்......
தினமும்
இராக்களில்
விசமேற்றிப் போகின்றாய்...
வம்புடன்!

புரிகின்றதா - என்
கவலைப் பூக்களின் மகரந்தத்தில்
கருக்கட்டப்படும்...
உன் னினைவுகள் - இப்போதெல்லாம்
உரிமையின்றி போகின்றன!
காரணம் நீயடா...!!

உன் னுள்ளம் நேசித்துச்
செல்லமாக முறைத்துச் சண்டையிடும்
என்னையா.....
வெறுத்துப் பயணிக்கின்றாய்
இன்னொரு நிழலுடன்
இராக்களில்!

இன்னும் நம்பிக்கையிருக்கின்றது
என்னுள்.......
என்றோ ஓர் நாள்..
என் ப்ரியம் தேடி மீள வந்துவிடுவாய்
என்னுயிர்க்கூட்டுக்குள்!

அதுவரை ....

நீயாவது வாழ்ந்து விடு .........
உனக்குப் பிடித்த பிரியங்களுடன்
இராக்களின்
விசாரிப்புக்களுடன்!

காலச்சுனாமியில்
காணாமற் போகும் பண்டமல்ல
நம் அன்பு!
இறையருளால்
இதயம் வாசித்த  உணர்வுப் பொட்டகம்!

காத்திருப்புக்கள் தொடர்கின்றன
என்னுள்......

நீ...

மீள ......

என்னை மட்டும் நேசிக்கும்
என்னவனாய் .....
வந்துவிடுவாயென்ற நப்பாசையில்!

இவள் ஜானு!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை