2015


2014 வருடத்தின் கடைசி நாட்களில் நாம்...

விடிந்தால் விடியலின் பசுமையில் புதிதாகப் பிறக்கும் 2015.....

நாட்கள் எவ்வளவு வேகமாகப் பறக்கின்றன. கண்மூடித் திறப்பதற்குள் 2014 நிறைவுறும் தருணம்....

2014 ன் காலடிச் சுவட்டினுள் எத்தனை நிகழ்வுகளை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கின்றோம்!
அவை இன்பமாக, துன்பமாக, ஏக்கமாக, எதிர்பார்ப்பாக. இலட்சியமாக. வெற்றியாக. தோல்வியாக. முரண்பாடாக நம்மைப் பின்தொடர்ந்திருக்கின்றன...

வாழ்க்கை என்பது அழகான கனவல்ல...முட்களும் மலர்களும் நிறைந்த பயணப்பாதை! அப்பாதைவழிப் பயணத்தில் நாம் கண்டெடுத்த அனுபவங்கள்தான் நம்மைப் பதப்படுத்தி வழிப்படுத்தி பயணத்தின் போக்கை சீர்படுத்துகின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இந்த வருடத்தின் கடைசிநாளில்.....

நானும் என்னை ஒருகணம் புரட்டிப் பார்க்கின்றேன். என் வாழ்வில் நடைபெற்ற அனைத்தையும் ஒரு கணம் ஞாபகச்சுழற்சியில் ஓடவிட்டு, நல்லவற்றை மட்டும் ஏந்திக் கொண்டு 2015ல் நடைபயில தயாராகிக் கொண்டு விட்டேன்....மனக் கஷ்டங்கள் தந்த தீயவை மறதிக்குள் கருகிப் போகட்டும்!

இன்ஷா அல்லாஹ்!

மாற்றங்கள்தான் வாழ்க்கை. மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளும்போதுதான் ஏமாற்றங்களைத் தவிர்க்கின்றோம்..
இந்த 2014ல் என் வெற்றிகளுக்காகப் பிரார்த்தித்தும் மனச் சங்கட காலங்களில் எனக்கு நம்பிக்கையூட்டி வழிப்படுத்திய  அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள்...

குறிப்பாக............

2014ல் முகநூலில் நான் கண்ட நட்பு, அன்பு, உறவாக ஒரு முகம் என்னிழலாகி இன்றும் தொடர்கின்றது. அவனை இச்சந்தர்ப்பத்தில் நான் நினைவுபடுத்தாவிடில் சுயநலக்காரியாகி விடுவேன்...

அவன்....

அமீர் மொனா!


என் வெற்றிகளின் போது பாராட்டுவதிலும், சில சந்தர்ப்பங்களில் என் அறியாமையின்போது ஏற்படுகின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதிலும், முரண்பாடுகளின்போது சண்டையிட்டுப் புரியவைப்பதிலும், மனத் துன்பங்களின்போது கண்ணீர் துடைத்து ஆறுதல்படுத்துவதிலும் பாசமாய், நட்பாய், அன்பாய், நலன்விரும்பியாய் ,  ஓர் உறவினனாய்.......................

அவன்......


வயதில் சிறியவன்தான். ஆனாலும் அனுபவத்தில் என்னை வழிப்படுத்தும் அளவுக்குப் பெரியவன்!

அவனும் என் உறவுகளுள் ஒருத்தனாய் என் வாழ்வின் ஒவ்வொரு நாட்களிலும் மறக்காமல் ஸலாம் சொல்லி காலை விடியலைத் திறந்து வைக்கின்றான். இந்த அன்பும் அக்கறையும் உரிமையும் தொடர்கதையாய் எம் வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் எனும் பிரார்த்தனைகள் என்னுள்!.. இப்புத்தாண்டு அவன் வாழ்வில் அவனது கனவுகளை ஈடேற்றி வெற்றிகளையும் தன்னம்பிக்கைகளையும் குவிக்க வேண்டும்...

அஸ்கா....2015 ல் தனது கல்வி வாழ்வைத் தொடங்கவுள்ளாள்...அரும்பொன்று மெல்ல இதழ் விரிக்கும் அந்த அழகும் பசுமையும் நான் ரசிக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

2014 ல் நானெடுத்த முட்டாள்தனமான முடிவுதான் யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் முடிவு...சமூகசேவை என்ற நிலைப்பாடு இன்று முட்டாள்தனமாகி உறுத்துவதற்குக் காரணம் யாரோ சொன்ன அரசியல் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து அவசர அவசரமாக எனது இடமாற்றத்தை உறுதிப்படுத்தியதுதான்......!
 எனக்கு நானே என் கடமைகளுக்கு தீயூட்டிய முட்டாள்தனத்தின் பின்னணியில் ஒரு அரசியல்.....இது அரசியல் விதியோ அல்லது விளையாட்டோ.....

இந்த முடிவு என் வாழ்க்கையில ஏற்படுத்திய மனக் கஷ்டம்..
பணக்கஷ்டம்.....எழுத்துக்களுக்குள் அடங்க முடியாதது...அந்த மனநெருக்கடி நிலையில் என் ரணங்களுக்கு ஒத்தடமாகவிருந்த என் தாயையும் இந்த வருடத்தில் மட்டுமல்ல என்றும் மறக்க முடியாது. என் தாயின் ஆரோக்கியத்திற்கும் துஆ கேட்கின்றேன்..


அத்துடன் என் டாக்டர் சகோதரி (Janoss ) அவரின் கடமைசார் பயணத்தில் சிறப்புப் பெற்று வெற்றிகளைக் குவிக்க இறைவன் துணை புரிவானாக!


இன்ஷா அல்லாஹ்!

நானும், என்னைச் சுற்றியுள்ள உறவுகள், என்னை நேசிக்கும் நட்புக்கள் யாவரும் இப்புத்தாண்டில் ஈமானிய எண்ணங்களுடன் மனநிம்மதியும், வெற்றிகளும் பெற்று வாழ வேண்டும் எனும் பிரார்த்தனைகளை அல்லாஹூ தஆலாவிடம் சமர்ப்பித்தவளாக...

என் மனசுக்குள் இன்னும் சிறுசிறு துளிகளாய் சிதறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் நிறைவேற்றப்படுகின்ற தளமாய்  2015 அமையட்டும் எனும் பிரார்த்தனை கலந்த எதிர்பார்ப்புடன் நாளைய விடியலுக்காக காத்துக்கிடக்கின்றேன்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை