நிஜத்தின் நிழல்கள்
கல்வியைத் தேடுபவனாலேயே வாழ்க்கையையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. கற்ற கல்வியின் அளவீடுதான் பரீட்சை. பரீட்சை எனும் போது வயது பேதமின்றி எல்லோருக்கும் ஒரு பயம், முயற்சி, டென்ஷன் வருவது இயல்பு. அதிக சிரத்தையுடன்  கல்வியைக் கற்பவன் உயர்புள்ளிகளைப் பெறுவதில் தவறுவதில்லை.

ஆனால் ...............

பெரும்பாலான மாணவர்கள் எவ்விதமான முன்னாயத்தமுமின்றி திறமையான மாணவர்களிடம் காப்பியடிக்க தயாரானவர்களாகவும் , வெற்றுப் பேப்பர்களை ஒப்படைக்கத் தயாரானவர்களாகவும் பரீட்சைக்கு செல்வதைப் பார்த்து வேதனை கலந்த வெட்கம்.

இவர்கள் கல்வியைப் பற்றி உணர ஆரம்பிக்கும்போது கல்வி ,வர்களை விட்டு விலகிப் போயிருக்கும் என்பது மட்டும் உண்மை!
-----------------------------------------

பாடசாலை வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அதன் இனிமையை உணர்வது பாடசாலையை விட்டு விலகிச் செல்லும்போதுதான்....
மீட்கப்படும் ஞாபகங்கள் சில நேரம் சந்தோசத்திலும், சில நேரம் ஏக்கத்திலும் சில நேரம் கண்ணீரும் கலைந்து நிற்கும். ஏனெனில் பள்ளி வரும் தொட்டு நிற்கும் நட்பு அப்படிப்பட்டது....

-------------------------------------------
பாடசாலை என்பது ஒழுக்கமுள்ள சமுதாயத்தின் தோற்றுவாய்க்கான தளம். சகல பாடசாலைகளும் இதனைத்தான் கல்வி இலக்காகக் கொண்டு தமது செயற்பாடுகளை வகுக்கின்றன. ஆனால் துரதிஷ்டமாக சில ஒட்டைகள் விழுந்து விழுமியம் தளர்ந்த முரண்பாட்டுக் கூட்டங்களும் வௌியேறி விடுகின்றன. பாடசாலை வௌி மதில்கள் அழகாக பெயின்ட் பூசப்பட்டிருக்கும்போது அவற்றில் தமது பெயர்களையோ ஏதாவது செய்திகளையோ கிறுக்கி விட்டுச் செல்வது இந்தக்கூட்டம்தான். விளம்பரம் ஒட்டாதீர்கள் எனும் அறிவித்தல்களைக் கூடப் புறக்கணிப்பவர்களாக இவர்கள்....

-------------------------------------------

பாடசாலை என்பது அங்கு கற்கும் அனைத்து மாணவர்களும் பாதுகாக்க வேண்டிய நிறுவனம். அதன் வளங்கள் அவர்களின் கற்றலுக்காக பயன்படுத்தப்படும் சொத்து. ஆனால் சில மாணவர்கள் வளர்ந்த மாணவர்கள் பாதுகாக்க வேண்டிய இச் சொத்துக்களை சேதப்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விளையாடும்போது யன்னல் கண்ணாடிகளை உடைப்பது, கதிரை, மேசைகளில் டிபெக்ஸால் கீறி நாசப்படுத்துவது, பெயின்ட் அடித்த சுவரில் தமது கால்களை உதைத்து அசுத்தப்படுத்துவது, கதிரை , மேசைகளை உடைப்பது இவையெல்லாம் ஆண் மாணவர்களிற் சிலர் செய்யும் சாதனைகள்....

-------------------------------------------

ஒரு பாடசாலையின் வளர்ச்சியின் தூண்கள் அதன் ஆசிரியர்கள்தான். இளைய ஆசிரியர்களிடம் வேகம் காணப்பட்டாலும் கூட அனுபவம் காணப்படுவது அதிக சேவைக்காலத்தைக் கொண்ட ஆசிரியர்களிடம். ஆனால் துரதிஷ்டவசமாக சேவைமூப்புக் கொண்ட ஆசிரியர்கள் பொதுவாக பாடசாலைகளிலிருந்து ஓரங்கட்டப்படுவது நடைமுறையாகக் காணப்படுகின்றது. இளைய ஆசிரியர் சமுதாயத்தின் கைகளில் பொறுப்புக்கள் வழங்கப்படுவது நல்ல விடயமே .......இருப்பினும் முதியவர்களை அலட்சியப்படுத்தி வழங்கப்படும் மலர்மாலைகள் சற்று சிந்திக்கத்தக்கது...

------------------------------------------சமூகத்தினுள் நுழையும் ஓர் பிரஜையை நற்பண்புள்ளவனாக மாற்றும் பணியில், இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு கல்வி வழங்கும் பணியை பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் பெற்றோர், சமூகத்தினர் ஒத்துழைப்பின்றி பாடசாலைகள் தனித்து இக்குறிக்கோளை நிறைவேற்ற முடியாது.
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பெற்றோர் கொடுக்கும் ஊக்கம், அவர்கள் வகுப்பேற ஏற குறைந்து கொண்டே செல்கின்றது. மாணவர்களை வெறுமனே பாடசாலைக்கு அனுப்பாது அவர்கள் எந்தளவில் கற்றலில் ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்பதை கண்காணித்து வழிகாட்டும் பெற்றோர்களின் பிள்ளைகளே கரிசனத்துடன் கற்க ஆரம்பிக்கின்றார்கள்.
எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்கும் ஆர்வம், ஊக்கத்தை மேற்பார்வை செய்து வழிகாட்டுவது கடமையாகும்

-------------------------------------------


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை