About Me

Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

2014/08/04

கவாஸ்கர்






வாழ்க்கை அழகான கனவுகளின் கூடாரம். வாலிபம் அக் கனவுகளை மூடிக் கிடக்கும் திரை. இந்த வசந்த வனப்புக்களையும் அறுத்தெறியும் சதியாக விதி!

இன்னும் வாழத் தொடங்காத வயது..
இருபத்திரெண்டு!
பருவத்தின் விளிம்பில் நடமாடும் உணர்ச்சிப் பிழம்பாய்!

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. கலங்க வைத்து தன் ஆட்டத்தில் பலரை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை!

அதற்கு இவனும் விதிவிலக்கல்ல...

கவாஸ்கர்...!

வறுமைச் சிறையை உடைத்தெறிந்து வாழத் தெரிவு செய்த மார்க்கமாய் இஞ்ஜினியரிங் படிப்பு இவன் நிழலாகியது. ரொம்ப நல்லவன் என்பதால் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருப்போரை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். இவனது இந்த அழகான இரசனை அவனுக்கு பல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது..

வள்ளியூர் ....
திருநெல்வேலி....
இவன் பாதம் பட்ட  தரைச்சுவடுகள்!
M.E.T College of Engineering ..இவனைச் செதுக்கிய கல்விக்கூடம்..

இந்து , நாடார் குலம்...இவன் கலாசார சின்னம்..
வாழ்க்கையைக் கற்க புறப்பட்டவன் காலனிடம் சிக்கித் தவித்த போது, அவன் கனவுக்கூடாரங்கள் சிதைந்து கல்லறையாகியது..
தான் ஆசையாக வாங்கிய உந்துருளியில் பயணித்த போது விபத்துக்குள்ளானான். வேகமாகப் பயணித்ததில் ஏற்பட்ட விபத்தா அல்லது கொலைச் சதியா ...


இறைவன்தான் அறிவான். இவனுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் மொய்த்திருக்கும். அவற்றைத் தனக்குள் சேகரித்திருப்பான் அல்லது தன் மனதைக் கவர்ந்தவர்களிடம் பகிர்ந்திருப்பான்.


மெல்லன விரிந்த மொட்டொன்று, தன்னிதழ்களை விரிக்க முன்னரே வாடிப்போனதுதான் கவலை..

தன்னைக் கடந்துபோன ஒவ்வொரு நொடிகளிலும், தான் அற்ப ஆயுசில் போவேனென நினைத்திருப்பானா.... விதியின் சதிராட்டத்தில்....இவனும் ஒரு பங்காளி!

ஜூன் 5ம் திகதி தனது பிறந்த நாளைக் கொண்டாடியவன், நினைத்தும் பார்த்திருக்க மாட்டான் ஜூன் 24ல் தன் கல்லறையை மண் திரட்டுக்களும் அக்கினியும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்குமென்று!

மரணம்..............

இவனைத் தேடி வரவில்லை மாறாக மரணத்திற்கான அழைப்பானை இவனால் விடுவிக்கப்பட்டது மறக்க முடியாத சோக வடு! வாழ வேண்டிய வயது...அற்ப ஆயுசில் உயிர்ப்படங்கிப் போவது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத சோகம்தான்..


அவன்  சோகத்தினை வாசிக்கும் கண்ணீர்த்துளிகள்!

ஒவ்வொரு பெற்றோரும். தம் பிள்ளைக்கு உயிர்ப்பூட்டி வாழ்க்கையும் தந்து நடமாடச் செய்யும்போது பலரோ அந்த வசந்தத்தை ஏதோ ஒரு வகையில் கரைத்து விடுகின்றனர். விதி பறித்த அந்த உயிர் மீள வருமா..

நம் வாழ்க்கையின் பெரும் பகுதி குடும்பத்தினருடனான சந்தோசத்தில் பகிரப்பட வேண்டும். ஆனால் மாறாக பலரோ அவர்களைக் கண்ணீரில் தள்ளி விட்டு காணாமல் போய் விடுகின்றனர்.

மரணக் குகைக்குள் நுழைந்த அந்தச் சின்னவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

- Ms. Jancy Caffoor -

2013/04/14

பாடகர் பி.பி.சிறினிவாஸ்



பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவருக்கு எமது அஞ்சலி
----------------------------------------------------------------
 திரையுலகின் ஓரங்கமே திரையிசைப் பாடல்கள். அந்த வகையில் காலத்தில் அழியாத பாடல்கள் பலவற்றையும், அவற்றை உயிர்ப்பித்தோரையும் தென்னிந்திய திரையுலகு தந்து கொண்டுதான் இருக்கிறது. வயது வேறுபாடின்றி இன்று நாம் ரசிக்கின்ற பல பழைய பாடல்கள் இருக்கின்றன. சில நவீன இசையமைப்பில் துள்ளல் வடிவம் கூட பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் நான் ரசித்த பாடல்களுள் "நிலவே என்னிடம் நெருங்காதே" ஒன்றாகும். ஜெமினி கணேசன் பாடுவதைப் போன்ற பிரமிப்பினை ஏற்படுத்தியவர், தமிழ் சினிமாவில் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றால் மறுக்கவா போகின்றீர்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

 கடந்த சில நாட்களாக உடல்நலம் மோசமான நிலையில் இருந்து வந்த நிலையில் இன்று (14.4.2013) அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. இறக்கும் போது அவருக்கு வயது 82.

காலமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1934-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் நாள் ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார். தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். வெண்கலக் குரலில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

'காலங்களில் அவள் வசந்தம்', ‘மயக்கமா கலக்கமா’, ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என காலத்தால் அழியா பாடல்களை பாடிய அற்புதமான பாடகர். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரின் அனைத்துப் படங்களிலும் இவர்தான் பின்னணி பாடியுள்ளார்.

பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவிற்கு நாமும் எம் அஞ்சலியைச் செலுத்துவோமாக!

ஒரு கலைஞனின் உடல் அழியலாம், ஆனால் விட்டுச் சென்ற கலைகள் என்றும் வாழ்ந்து கொண்டுதான்  இருக்கும்.


-Jancy Caffoor-