About Me

2013/03/08

நேசத்தீ



என்.......
மனசின் வியர்வைத் துளிகளாய்
வருடும் உன்
நினைவுகளின் ஈரலிப்பு!

ஒவ்வொரு நொடியும்
உன் ஆத்மாவின் வரிகளுக்குள்
கரைந்துருக
பேனாக்கள்
யாகம் புரிகின்றன!

உன்...........
சிறகடிக்கும் வெள்ளைச் சிரிப்பும்
உறவு பற்றும் நெருடலும் - என்
மனசின் மானசீகப் படிவுகளாய்
சிதறிக் கிடக்கின்றன
மனவெளிகளில் !

நம்மைப் பிரிப்பதற்காய்
ஓநாய்கள்
ஒப்பாரி வைக்கையில்.......
நெருங்குகின்றேன்
இன்னும்......இன்னும்!

உன் பிரிவெனக்கு
முள்வேலிதான்!
இருந்தும்.............
உனக்கான சிறையிருப்புக்களால்.....
சுக கீறலில் விழுந்து கிடக்கின்றது
ஆத்மா!

ஸ்நேகிதா!
உனக்குப் புரியுமா!
என் மூச்சுக்குழலுக்குள் முத்தமிடும்
உன் சாரீரத்தில் - என்
சரீரம் பதியமிட்டு
விழுந்துகிடக்கின்றேன்
மானசீகமாய் உன் மனசோரம்!

Jancy Caffoor


 





வெந்த இதயம் பிழிந்து

என்
மனப்பாறைக்குள்
நீயின்னும் உறைந்துதான்
கிடக்கின்றாய்!

சமுக யதார்த்தங்கள்
அக்கினிப்பிழம்பாய் - நம்முன்
பூத்ததில்
சாம்பர் முகட்டிலிருந்து- நம்
மூச்சுக்காற்றுக்கு
முகவரி தேடுகின்றோம்!

நம்
இரவுகளின் இதயம்
சோகத்தின் விசாரிப்புக்களால்...
மரண விளிம்பில் நின்று
இரகஸியம் பேசுகின்றோம்
இதயம் பிளந்து!

நம்
நேசத்தின் தேடலுக்கு
கல்லறை கட்டும் முட்களின்
குருதிச் சுவட்டிலிருந்து
பயணம் குறிக்கின்றோம்
குற்றுயிராகி!

என்
வெந்த இதயம் பிளந்து
உன்னிடமோர் வார்த்தை......
உன்
மௌனத்துடிப்புக்களால் - என்னைக்
கொல்லாதே!


  Jancy Caffoor
         08.03.2013


இனிய அவஸ்தை



ஒவ்வொரு விடிகாலையும்
எனக்குள் நிச்சயமற்றவை!
சங்கூதும் மரண ஓலத்தின்
புலம்பலோடு
விழிக்கும் என் மடல்கள்!

இரவு கண்டெடுத்த கனாக்கள்
உயிரறுந்து
அக்கினி வேரின் நீட்சியாய்
அலைந்து திரியும்!

என் மெலிதான சுவாசத்தில்
வருங்காலம் சுருங்கி
சிறகறுந்து - உன்
உறவின்றி கதறும்!

நாளை
உனக்கும் சேதி வரும்!
வா  என் கல்லறைக்கு!
உன்னால்
கருக்கலைப்பு செய்யப்பட்ட
என்
கனாக்களுக்காய்
ஒரு துளி கண்ணீர் தா!


 Jancy Caffoor
 08.03.2013











யதார்த்தம்

ஆரோரோ 
ஆரிவரோ 

தங்க பௌர்ணமியே 
தாய் மடியில் கண்ணுறங்கு!

தாலி தந்த பூவரசே 
செல்லச் சிணுங்கலடங்கி
சீக்கிரமாய் கண்ணுறங்கு!

அப்பன் இங்கிருந்தா
அஞ்சு காசு கொண்டு வரும்!
நெசமா நானுனக்கு
நெறைய சாமான் வாங்கிடலாம்!

ஆத்துல பசி தீர்க்க
அரிசிக் கஞ்சி ஏதுமில்லை!
நாக்கும் வறளுதப்பா
நல்ல தண்ணி தொலைவிலப்பா!

ஏழையாப் பொறந்தாலே
ஏழு ஜென்மமும் கண்ணீரல்லோ!
பாட்டால படிச்சாக்கா
பட்ட துன்பம் போயிடுமோ!

குடிசைல விளக்கில்லை
குஞ்சு மகன் கண்ணுதானே விடிவிளக்கு!
பகலெல்லாம் வெளிச்சம் தரும்
பகலவனும் நீதான்டா!

நேரங்கெட்ட நேரத்தில
நெடுநேரம் அழுதிட்டா 
சாதி சனம் வீடெல்லாம்
சாமத்திலும் விளக்கெரியும்!

சின்ன நிலவே 
நீயும் அழுதிட்டால்
பெத்த மனம் ரணமாகும்
உன் கண்ணு கூட ரணமாகும்!


Jancy Caffoor






ஆராரோ

ஆரோரோ 
ஆரிவரோ 

தங்க பௌர்ணமியே 
தாய் மடியில் கண்ணுறங்கு!

தாலி தந்த பூவரசே 
செல்லச் சிணுங்கலடங்கி
சீக்கிரமாய் கண்ணுறங்கு!

அப்பன் இங்கிருந்தா
அஞ்சு காசு கொண்டு வரும்!
நெசமா நானுனக்கு
நெறைய சாமான் வாங்கிடலாம்!

ஆத்துல பசி தீர்க்க
அரிசிக் கஞ்சி ஏதுமில்லை!
நாக்கும் வறளுதப்பா
நல்ல தண்ணி தொலைவிலப்பா!

ஏழையாப் பொறந்தாலே
ஏழு ஜென்மமும் கண்ணீரல்லோ!
பாட்டால படிச்சாக்கா
பட்ட துன்பம் போயிடுமோ!

குடிசைல விளக்கில்லை
குஞ்சு மகன் கண்ணுதானே விடிவிளக்கு!
பகலெல்லாம் வெளிச்சம் தரும்
பகலவனும் நீதான்டா!

நேரங்கெட்ட நேரத்தில
நெடுநேரம் அழுதிட்டா 
சாதி சனம் வீடெல்லாம்
சாமத்திலும் விளக்கெரியும்!

சின்ன நிலவே 
நீயும் அழுதிட்டால்
பெத்த மனம் ரணமாகும்
உன் கண்ணு கூட ரணமாகும்!


Jancy Caffoor