About Me

2013/05/22

மரணத்திலாவது


அன்பு தேடியலைந்தேன்
பாசம் தொலைத்த வெற்றுடல்களில்
சுயநலங்கள் சால்வை போர்த்திக்கிடந்தன!

நானும் விடுவதாயில்லை
என் யாக்கைக்குள் சிறு பருக்கையாவது
அன்பு கிடைக்காமலா  போகும்!

நடந்தேன் தொலைநோக்கி நடந்தேன்
தூரத்தே சிறு சமிக்ஞை
கரங்கள் அசைந்து அழைத்தன என்னை!

அன்பு கிடைத்ததென்ற போதையில்
கற்களும் முற்களும் கால்களைப் பதம் பார்க்க
புதுப் பிறவியெடுத்தோடுகின்றேன் அங்கே!

அங்கே..................

புகைந்து கொண்டிருக்கின்றன மனித உடல்கள்!
மயானத்தின் சமாதிகளுக்கிடையே ஆத்மாக்கள்
அழைத்துக் கொண்டிருந்தன என்னை!

மெல்ல புன்னகைத்தேன்
தேடியலைந்த அன்பு கிடைத்த மமதையில்!

மெல்ல மெல்ல கண்கள் சொருகுகின்றன
அட
நானும்  மரணிக்கின்றேனா!

என்னைச் சூழ்ந்திருப்போர் கதறும் ஓசை
காற்றினில் இழைந்து கரைய!
அட அன்பு கிடைத்துவிட்டது
மரணத்திலாவது!!


- Jancy Caffoor-
     22.05.2013




அவன்




இன்று விஞ்ஞானப் பாடம் கற்பிப்பதற்காக வகுப்பினுள் நுழைகின்றேன். வழமைபோல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மாணவர் கூட்டங்கள் என் தலையைக் கண்டால்தான் சற்று அடங்கிக்கிடப்பார்கள்........

அவன்...................

வகுப்பில் குழப்படியான மாணவன்...

ஆனால் ..........

ஏனோ என்னிடம் அடங்கி நிற்பான். நான் வகுப்பிற்குள் போகும்வரை வாசலில் காத்து நிற்பான். அல்லது என்னைத் தேடி நானிருக்கும் இடத்திற்கே வந்துவிடுவான்...

இன்றும் மூலகங்கள் பற்றியும் சோடியம் பற்றியும் கற்பித்துக் கொண்டிருந்தேன். எல்லோரின் கவனமும் பாடத்தில் ஒட்டிக் கிடக்க, அவன் மட்டும் அழுது கொண்டிருந்தான். நானோ பாடத்தை கற்பித்து முடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில், அவனைக் கவனிக்காமலே மற்றவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அவன் மேசையில் தலைசாய்த்திருந்தான்....

பாடம் நிறைவுற்று மணி அடித்தபோது, நானும் வகுப்பை விட்டு வெளியேறி சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தேன்............

"மிஸ்....மிஸ்"

யாரோ ஓடியவாறு வருவதை உணர்ந்து திரும்பினேன். அழுது கொண்டிருந்த மாணவன்தான் நின்று கொண்டிருந்தான்.

"போறீங்களா மிஸ்"...அவன் கேட்டபோது என் நடையும் நின்றது.

"ம்ம்........." நான்

"ஏன்டா அழுதே. விடாமல் தொடர்ந்து கேட்டேன்!......

அவனோ சில நிமிடம் மௌனித்த பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கினான்....

"போன வருஷம், இதே நாள் என் தம்பி செத்திட்டான் மிஸ், அவன நெனைச்சேன்...அதுதான்"

மீண்டும் அவனுக்குள் கண்ணீர் கருக்கட்ட ஆரம்பித்தபோது, எனக்குள்ளும் மனசு லேசாய் கலங்கத் தொடங்கியது! அவன் பாசத்தை எப்படி சமாதானப்படுத்துவது.......

இழப்புக்கள் வரும்போதுதான் அதன் அருமை புரியும்!

ஏனெனில்

"ஞாபகங்கள்......மறதிக்குள் ஒருபோதும் வீழ்வதில்லை"

நிழல்கள்

கனவில் லயித்திருக்கும் பல்லாயிரம் நிமிடங்களை விட ,
யதார்த்தத்தில் உறைந்திருக்கும் ஒரு சில நிமிடங்களே நம்மை உணர வைக்கும் தருணங்கள்!
--------------------------------------------------------------------------------------


ஆயிரம் விண்மீன்களை உன் கண்களில் கண்டேன்
நீ குறும்புகளால் எனைச் சிறைப்படுத்திய போது!
ஆயிரம் வாற்று மின்னும் உற்பத்தியானது
நீ கரும்பாகி என் வசமான போது!

--------------------------------------------------------------------------------------


நேசித்தல் மட்டுமல்ல நட்பு - நம்
வாழ்நாள் முழுவதும்
அவ் அன்பைப் பாதுகாக்கும் அறமே
அதன் சிறப்பு!
--------------------------------------------------------------------------------------


ஓய்வென்பது மன அழுத்தங்களைக்
குறைக்கும்  அரு மருந்து!
இயற்கையில் இதயம் நனைத்து ஓய்வெடுங்கள்
அயர்ச்சியுறும் மனதில் பசுமை படரும்!



- Ms. Jancy Caffoor -


உன்னை நினைந்து



உன்னை நினைக்கும்போது
எனக்குள் கவலை வருகின்றது!
உன் மனதை வாட்டிச் செல்லும்
என்னைக் கடிந்து!

ஆயிரம் பூத்தூவி காத்திருக்கும்
நட்சத்திரங்கள் மொய்த்திருக்கும் வேளையில்......

வெட்கம் தூவி மேனி நனையும்
உன் நேசத்தின் பூரிப்புக்குள் நம் ஞாபகமாய்  விழும்போது
மனசேனோ ...........
மாலையில் சுருங்கும் மலராய்
வீழ்ந்துதான் போகின்றது குற்றுயிராய்!

துக்கம் மூச்சோரம் இளைப்பாறி
துவட்டிச் செல்கின்றது என் நினைவுகளை ஆழமாய்!

2013/05/21

எனக்குள் தாயாகி



உன்னை இழக்கும் போதுதான் வலிக்கின்றது
கண்கள் சாட்சியாய் உன் முன்னால்!

சட்டத்திற்கு தெரிவதில்லை மனசு - உன்
இஷ்டத்திற்கு வீசிச் செல்லும் பட்டாசாய்
சுடும் வார்த்தைகள்!

வேதங்கள் சொல்லும் சத்தியங்கள்
உனக்குள்ளும் உண்டு ஆழமாய்!

எரி புழுக்களாய் மேனியூர்ந்து
பறந்து திரியும் அழகான வண்ணத்துப் பூச்சியாய்
உன் காதல்!

தினமும் அமிலமூற்றும் உன் பார்வையும்
காதலும்
வலிக்கின்றது வாழ்க்கையைப் பிசைந்து!

எனக்குள் பூ போர்த்துமுன் மனசும்
அன்பும்
வம்பு பண்ணுமுன் காதலும்!

 கிள்ளிச் செல்கின்றதென்னை
கள்ளமாய் ரசிக்கும் உன் கைகளால்
ஸ்பரித்தவாறு!

எனக்குள் தாயாகி
என்னைக் காக்கும் அன்பே

உன் குண்டுக் கன்னத்தில் சிரிப்பை நசித்து
பாசச் சாறூற்று எனக்குள்!


- Jancy Caffoor-
      21.05.2013