About Me

2015/02/27

மனசு



முருங்கை  இலை மென்று
சுருங்கி உறங்கி வளரும் மயிர்க்கொட்டியின்
கருமேனி  கண்டு
அருவருப்போடு பீதிசேர்த்து ஒதுங்கும் மனசு...
பறந்தோடும் வண்ணாத்தியி னழகில்
இறுமாந்து கிடக்கின்றது!


- Jancy Caffoor-
  27.02.2015

தொல்லை

தவழும் குழந்தைக்கு
கட்டுக்காவல் தொல்லை...

பருவ வயதில்
பருக்கள் தொல்லை....

வாலிபம் வந்தால்
காதல் தொல்லை.......

குடும்பஸ்தனுக்கோ
எடுக்கும் சம்பளம் தொல்லை...

வயோதிப மானால்
தள்ளாடும் தேகம் தொல்லை....

எல்லையில்லா தொல்லைகள்
இல்லாதவருண்டோ வாழ்வில்!



- Jancy Caffoor-
 

2015/02/26

இவர்கள்



வறுமை .....
இவர்கள் முகவரியா - சதை
மறுக்கும் தேகம் அறிவிக்கின்றதே!

பசி ......
இவர்கள் ஓலமா - அன்றேல்
நாசியோர  வலியின் பரிதவிப்பா!

நெஞ்சுக்கூட்டுக்குள் அஞ்சாமல்
யார் செருகினார்
எக்ஸ்ரேயின் இலவச அழைப்பிதழை!

பாலைவன குடைக்குள்
அடைக்கலம் தேடும் நிழல்களா
இவர்கள்!

பண ஆசியில் குவிந்திருக்கும்
வீண் பருக்கைகள்......
இவர்கள் உதரத்துக்குள்ளாவது
இருக்கை யாகி யிருக்கலாம்!

ஐயகோ.....

உணவின்றி உணர்விழக்கும் இவ்வுயிர்களுக்கு
தினமு மினி
துன்பம் துடைக்கும் கரங்கள்  யாதோ!


- Jancy Caffoor-
 

நானுமோர்


பாரதி கண்ட புதுமைப் பெண்
 
சாத்தான்கள் வேத மோத
சாத்திரங்களும் கோத்திரங்களும் போர்வை விரிக்க
கொத்தடிமைகளாய் பெண்டுகளை
கொத்திச் செல்லும் வல்லுாறுக்களுக்கு
சத்தமிட்டு கற்றுக் கொடுக்கும் நானும்
நித்திலம் சுமக்கும் புதுமைப் பெண்தான்!
.
களவாய் மேகங்கள் மறைத்தும்
உலா வரும் நிலவாய்....
பாறை மோதியும் பக்குவமாய் நௌிந்தோடும்
சிற்றாற்று நீராய்....
சளைக்க மாட்டேன் அற்பர்களை வேரறுக்க - நானும்
களையறுக்கும் புதுமைப் பெண்தான்!
.
எப்படியும் வாழ்ந்திடலாம் மாக்கள் - ஆனால்
இப்படித்தான் வாழ்க்கையென கோடு கிழித்து
தப்பில்லா வழி காட்டும் பாதைகளில்
அப்பிக் கிடக்கின்ற  மங்கையாய்
எப்பவும் தன்னம்பிக்கை சுமந்து வாழும் நானும்
இப்புவியின் புதுமைப் பெண்தான்!
.
அடுப்பங்கரை புகைக் கரியை
தடுப்புச் சுவராக்கி
தடுத்து வைக்கும் மூடர்களின் வலையறுத்து
விடுதலை பருகும் வீரப் பட்சி நானும்
நடுநிலை தவறா புதுமைப் பெண்தான்!
.
ஆணாதிக்க அகந்தைக்குள்
வன்முறை கோர்க்கும் கயவர்களை
கொன்றொழிக்கும் ஆயுதமாகவும்
நின்றடக்கும் அஹிம்சையுமாகவும் - சமுக
மன்றில் குரல்கொடுக்கும் நானுமோர்
பாரதி கண்ட புதுமைப்பெண்தான்!


- Jancy Caffoor-
 

2015/02/24

வாழ்வே மாயம்


வாழ்க்கை !

கடந்துபோன வாழ்க்கைய கிளறிப் பார்ப்பது  தப்புத்தான். ஏன் என்றால்  அதில்  நம் நிம்மதி கரைந்து  போன வடுக்கள் இருக்கும். அவை வலிக்கும். ஆனாலும் சில விசயங்கள நினைத்துப்  பார்க்கும் போதுதான் அது நம் வலிகளை  காய வைத்து  பக்குவப்படுத்தி எதிர்காலத்திற்கு தயார்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில இன்னைக்கு நான் நெனைக்கப் போறது என்னோட வாப்பாவ . அவர நெனைச்சு அவர்ட தெறமைகளை கண்டு நான் மலைச்சுப் போயிருக்கிறேன். என்னதான் தெரியாது அவருக்கு. ஓவியம், இலக்கியம் உட்பட எல்லா உபகரணத் திருத்த வேலைகளும்  அவர் பேசுற ஆங்கிலத்திற்கு நிகரே இல்ல. படித்தவர். அரசாங்க ஊழியர். எங்கள எல்லாம் படிக்க வச்சார். தன்னோட சம்பளத்துக்குள்ள  வட்டம் வரைஞ்சி  அதுக்குள்ள எங்களையும் உள்ளீர்த்துக் கொண்டார். அந்த உள்ளீர்ப்பு எங்க அம்மாட தெறமை அவருக்கேத்த வாழ்க்கை. அதுக்கு எங்களயும் பழக்கப்படுத்தி.

என்னோட சின்னக் கால வாழ்க்கய நெனைச்சா அவர்கிட்ட நெறைய அடி வாங்கியிருக்கிறேன். றோட்டுல விரட்டி விரட்டி செம்பரத்தை தடி பிய்ச்சி விளாசியிருக்கிறார்.  அப்படி அடிச்சு வார காயத்தில இருந்து ரெத்தம் வந்தா க கோபம் போனதும் அந்த கல்லுக்குள்ள கொஞ்சம் ஈரம் கசியும். மருந்து கட்டுவார். ஏதாவது தின்ன வாங்கி தருவார் அடிச்சதுக்கு இலஞ்சமா.

அவர் சிங்கம். தனிக்காட்டு ராஜா. யாருக்கும் கட்டுப்படாத அஞ்சா நெஞ்சன். ஆனால் அவரச் சூழ யாருமற்ற ஒரு மயானம் உருவாகியிருப்பதைக்கூட புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- Ms. Jancy Caffoor -
   24.02.2015