சிப்பிக்குள் முத்து!


என்.........
வாழ்க்கைச் சாலையில்
அவன்............
பயணிப்பெல்லா மிப்போது
முகங்காட்டுகின்றன நேசச் சுவடுகளாய் !

விண் சுற்றும் மேகங்களில்............
பவ்வியமாய் தனையொளித்தே
எட்டிப் பார்ப்பவன்............
நனைந்தே கிடக்கின்றான்
மழைத்தூறல்களாய்.............
என் வீட்டுமுற்றங்களில்!

தோற்றுப் போகும் வாழ்விலும்
நேற்று முளைத்த காளானாய்- என்
மனப்பூமி வெம்மையெல்லாம்
உறிஞசியவனாய்...........
விட்டுச் செல்கின்றான் தன்
சரிதங்களை!

தரிசனங்கள் மறுக்கப்பட்ட
எம் பக்கங்களின்...................
முன்னுரையாய்
வீழ்ந்து கிடக்கின்றது
அவன் முகவரி!

அன்புத் துடிப்போடு...........
அலையு மெங்கள் நாட்காட்டியில்.........
வலைப்பின்னலின் வருடல்
தகவலாகின்றன தினமும் எங்கள்
வாசிப்புக்களைச் சுமந்த படி!

அவன் புன்னகைச் சாறைப்
பிழிந்தெடுத்தே.............
என் தோட்டத்துப் பூக்களெல்லாம்
சாயம் பூசிக் கொள்கின்றன
தம் மழகைப் பறைசாட்ட!காற்றின் மௌனம்
தொலைக்கும் அவன் குரலலைகள்.......
நினைவகத்தின் நரம்புகளில்
நசிந்து கிடக்கின்றன
நினைவுகளாய் !
.
"அக்கா"வென்பான் அடிக்கடி.........
அவன் பெருமிதம் கண்டு
ஆகாயம் குடைபிடிக்க
சமுத்திரங்கள் தரைக்குள் ஒடுங்கி
பாசவேலிக்குள் தனை
முடிந்து கொள்ளும்!

கனவுகள் புல்லரித்துக் கிடக்க
விரல் தருகின்றான்- என்
கன்னப் பருக்களாய் வீழ்ந்து கிடக்கும்
கண்ணீர் கழற்றி
தன்னுள் ஒற்றிக்கொள்ளவே!

நம்பிக்கையிருக்கின்றது!
நாளை..............
என் மூச்சின் வேரறுக்கப்பட்டாலும்
கண்ணீரஞ்சலி தரும்
பாச விழிகளாய் அவன்................
ஊடுறுவிக் கிடப்பான் ஆத்ம சரீரத்துள்!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை