வயது என்பது உடல் சார்ந்த பெறுமானமே தவிர அகத்தின் பெறுமதியல்ல. ஆனாலும் நமக்கு கிடைக்கும் அனுபவத்திட்கும், வயது எனும் எண் பெறுமானத்திற்கும் நேர்ப்பெறுமானத் தொடர்பு உண்டு. அந்த வகையில் வயது அதிகரிக்கும் போது அனுபவச் சேர்க்கை காரணமாக மனமுதிர்ச்சி உண்டாகிறது.
அன்று.................!
2012 ஆம் ஆண்டு நான் இணையத்தோடு தொடர்புள்ள பயிற்சியில் ஈடுபட்ட போது இந்த வலைப்பூவை உருவாக்கினேன். வலைப்பூ மூலம் முழு உலகையும் சில நொடிகளில் சுற்றிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் எதையாவது எழுதும் ஆர்வம் மனதைப் பிறாண்ட கற்பனைக்குள் நான் வசியமானேன்.
மனம் நினைப்பதை எல்லாம் விரல்கள் வாசித்தன ஆர்வமாய். எழுத்துக்களால் ஒரு அடையாளம் கிடைக்க நிறைய போராட வேண்டி இருந்தது. ஒரு ஆக்கம் எழுதும் போது மகிழ்ச்சி வசமானது. நானே என் எழுத்துக்களுக்கு வாசகியானேன். அந்த மகிழ்ச்சி தந்த ஆர்வம், அதிர்வு இன்னும் எழுதத் தூண்டியது. பக்கங்கள் நிறைய, நிறைக்க எழுதினேன். நான் எனும் உலகத்துக்குள் "நானே" வாசகியாய், விமர்சகியாய் உருக் கொண்ட தால் நிறைய எழுதவேண்டும் எனும் தாகம் மனதுக்குள் கருக் கொண்டது. ஆனால் அப்படைப்பின் கனதி பற்றி மனம் எடை போடவில்லை. என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தில் எனது படைப்புக்களுக்கு வெளியுலகில் விமர்சனம் இருக்கும் எனும் எதிர்பார்ப்பு ஏற்படவில்லை.
ஆனால் ............
காலம் கடந்தது. மனம் முதிர்ச்சி அடைய பட்டம், பதவிகள் அடையாளமாகின. என்னைச் சுற்றி இருந்த உலகம் விரிந்து சென்றது. விமர்சகப் பார்வைகளும் விசாலமாகின.
கற்பனைகள் ஒடுங்கிக் கொண்டன தானாக. யதார்த்தங்கள் சமீபமானது. ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் காண அருகே ஆயிரம் பேர்களின் விம்பப் பார்வைகள் விழுவதை போன்ற பிரமை. எதை எழுதினாலும் சரி எனும் நினைப்பு மறைந்து, எதை எழுதுவதென்று யோசித்து நின்றது. படைப்புக்களில் இருந்த அலங்காரம், கருத்துச்செறிவுள்ளதாக மாறப் போராடியது. வெளியே அவதானித்துக் கொண்டிருந்த விமர்சகர் உலகம் பெரும் அண்டமாக விழி விரித்துக் காத்து நிற்பது புரிந்தது.
ஒவ்வொரு அடியும் மிக நிதானமாக பயணிக்க வேண்டிய அவசியம் புரிந்தது. சின்ன வயதில் எதையும் எழுதலாம். ஆனால் இப்போது கருத்துச் செறிவுடன், புலமையும் கைகோர்த்து பயணிக்க வேண்டிய அவசியம் புரிந்தது. நிஜங்களின் செறிவின் முன் கற்பனைகள் யாவும் தடுமாறி ஓடி ஒளிந்து கொள்ள, மெதுவான என் எழுத்துப் பயணம் எனது அடையாளத்தைச் சிதைக்காதவாறு பயணிக்க ஆரம்பித்தது.
இப்பயணத்தின் பரிமாணம் இப்போதெல்லாம் நிதானித்து, மனசுக்குள் ஒரு தடவை எழுதியவற்றை சரி பார்த்து, கனதியுடன் படைப்பினை எனக்குள் விமர்சித்தே எழுதுகோல் பிடிக்கிறது. அலங்காரம், கற்பனை அதிகம் தொட்டுக்க கொள்ளாத யதார்த்தமான படைப்பினை நோக்கியதான அடுத்தவர் எதிர்பார்ப்பு பார்வையை நோக்கிய திசையில் எனது விரல்கள் பயணிக்க ஆரம்பித்து விட்டன.
- Jancy Caffoor -
22.06.2019