About Me

2014/07/29

உனக்கான என் வரிகள் - 5



நாளை தமிழ் புத்தாண்டு. ...2014

எங்கும் பட்டாசுகள் ஆக்ரோசமாக வெடிக்கின்றன..மனமோ உன் நினைவில் பின்னோக்கி ஓடுகின்றது...

அன்று

ஜனவரி முதலாம் திகதி...புதுவருடம் பிறந்து இன்றுபோல் பட்டாசுக்கள் வெடித்துக் கொண்டுதான் இருந்தன். எனக்கு புதுவருட முதல் வாழ்த்து உனதாக இருக்கவேண்டுமென்ற உன் அன்புக் கட்டளையில் நானும் காத்திருக்க.

டாண்....டாண்...

கடிகாரம் பனிரெண்டு அடித்தோய்ந்தது..தூக்கத்தை விரட்டி நானும் உனக்காக காத்திருந்தேன். ஆனால் திடீரென அன்று என் தந்தைக்கு மாரடைப்பு வந்ததில் வீட்டில் யாருமே உறங்கவில்லை.

தந்தையோ என்னை தன்னருகில் இருக்கும்படி கூறியதையும் பொருட்படுத்தாமல் உன்மீதான அந்த அன்புக்காக எனதறைக்குள் ஓடுகின்றேன்.

உன் தொலைபேசி அழைப்பு வருகின்றது. எனக்கு இது புது அனுபவம்...என் தந்தையின் உடல்நிலை தந்த சோகத்தையும் மறைத்து உன்னுடன் பேசுகி்ன்றேன்.  எவ்வளவு சந்தோசமாக அன்றைய நாட்கள் இருந்தன.

நாளை விடிந்தால் புதுவருடம் பட்டாசுக்களைப் போல இப்போதெல்லாம் நீயும் என்னுடன் வெடிக்கின்றாய். என் அன்பு இப்பொழுதெல்லாம் உனக்கு புரிவதில்லை. சண்டை பிடிப்பதற்காக காரணம் தேடுகின்றாய். என்றோ ஒருநாள் என் அன்பை புரிந்து கொள்வாய். ஆனால் அன்று நான் உன்னை விட்டு வெகுதொலைவில்!

- Ms. Jancy Caffoor -



மீள வருமோ டா...


முட்கள்
என் தேசத்தின் அரண்கள்!
இருந்தும்
வந்தாய்
சிறையறுக்கும் நலனாய்!

விகடமும் விநோதமும்
கற்கண்டாய் வீழ்ந்து நிற்கும்
சொற்கூட்டமும் உன்
அற்புதங்களாய் என் ரசிப்பில்!

இருபத்தி ரெண்டு
பருவத்தின் சாயல்
இருந்தும்
முதுமை யுன் வாக்கினில்!

அவ்வவ்போது...

அதிரசமாய் காதலும்
அக்கினித் தீயாய் தவறுரைக்கும்
நட்பும்
விழிநீர் துடைக்கும் உறவும்
நீ விட்டுச் செல்லும் தடங்களாய்
வீழ்ந்து கிடக்கின்றன!

இருள் துடைக்கும் விடியலில்
மருண்டு கிடக்கும் பிறையொளியாய்...
உருண்டு கிடந்தேன் - உன்
வருடு மன்பில்!

நம்மைத் தொட்டுச் சென்ற
ஏழு மாதங்கள்
அழகான காப்பியங்கள் நமக்கு!

அழுகையும்
ஆரத்தழுவலும்
ஆறுதல் பிழிதலும்
ஆரறிவார் நமக்குள்
ஆயிரமாயிரம்!

கடந்த
ஆண்டொன்று புரண்டு- வான்
கொன்றலும் கிழித்து
றமழானும் புன்னகைக்க
நமக்குள்ளும் முப்பது நோன்புகள்!

நோன்பின் மாண்பில்
ஒன்றியிணைந்த நாம் - நமக்குள்
அலாரமாய்
மணியுரைத்தோம் நமாஸூக்காய்!

இருளிலில்
தலையணையில் சிணுசிணுங்கும் - நம்
அலைபேசி அதிர்வில்
துயில் கலைத்த நம் ஸஹர்  நாட்கள்
மீள வருமோ!

இப்தார் அழைப்பிலும் கூட
இங்கிதமாய் யுன் குரல் ஒலித்தே
என்
நோன்பு திறத்தலை விசாரிக்கு முன்
அன்பு!

மறக்காத நிஜங்களாய்
விட்டுச் செல்கின்றது இவ் ரம்ழான்
என்னிடம்!

காகிதப் பூக்களுக்குள்ளும் வாசம்
சுரந்து
வானவில்லின் சாயம் பிழிந்து
கானலுக்குள் விரிந்து கிடக்கும்
பூவுக்கு - நீ
விட்டுச் செல்லும் சொத்து
தெவிட்டாத அன்பூ!.

நீ.....!
மறக்காத நிஜம்!
மறுக்காத சொந்தம்!!
வெறுக்காத வரிகள்!!!

இன்ஷா அல்லாஹ்!

இன்னொரு ஸஹ ரழைப்பில் - நம்
மனங்கள் ஒன்றிணைந்து
துஆக்களையும் நமாஸ்களையும்
ஞாபகப்படுத்து மந்த கணங்கள்
மீள
விரைந்தே வரட்டும்!

உனை எனக்குள் விட்டுச் சென்ற
வல்லோனே
அல்ஹம்துலில்லாஹ்!


- Jancy Caffoor-
 29.07.2014

என் செய்வேன்


பூ இதழ்கள் மெல்லன அசையும் தென்றலில்
அன்பா யுன் பெய ருரைத்தேன்
என் குரல் கேட்டும் காதலுரைக்க
உன் மனசோரம் அமைதியில்லை!

ஆதவன் ஆட்கொண்ட பகலது
துயில் கொள்ளும் இராப் பொழுதின் நூலிலையில்
நீ கோர்த்த கனாக்களின் ரம்மியம் கூட
காதோரம் நனைத்திட
உனக்கோ அவகாசமில்லை!

உனக்கென விழி நீர் சுரக்க நானிருந்தும்
உன் கவலைகள் தீரவில்லை
என் செய்வேன் உன் ஈர முலர்த்த
தண்ணீர் அமிழும் எல்லைகள் தொல்லை!

- Jancy Caffoor-
 29.07.2014

2014/07/28

வௌ்ளிக்கிழமையின் சிறப்பு



வௌ்ளிக்கிழமையின் சிறப்புப் பற்றி
------------------------------------------------------------------------

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகின்ற பொழுது,

“எவரொருவர் ஜந்து நற்செயல்களை அந்த நாளில் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவர்க்கவாசி என்று கருதுகின்றான். நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவில் கலந்து கொள்வது, வெள்ளியன்று நோன்பு நோற்பது, ஜும்-ஆவுக்கு செல்வது, ஒரு அடிமையை விடுதலை செய்வது போன்றனவாகும்”
(அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: இலக்கம் 1033)

“சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்”
(ஆதாரம்: முஸ்லிம்)

இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் வெள்ளிக்கிழமையின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும் பொழுது, நன்மைகள் அதிகமாக உள்ள நாள்:
சுவர்க்கத்தில் இருக்கின்ற இறைவிசுவாசிகளை (முஃமின்களை) இத்தினத்தில் இறைவன் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் விரும்புவது அதில் அவர்களுக்கிருக்கிறது. மேலும் (அதைவிட) அதிகமானதும் நம்மிடம் இருக்கிறது” அனஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் “ஒவ்வொரு வெள்ளியன்றும் இறைவன் அவ்ர்களை (முஃமின்களை) பார்வையிடுகின்றான்”
(ஆதாரம்: இப்னு பத்தா, அபூ நயீம்)

ரமழான் உணவு




இறைவனை அஞ்சி, அவன் ஏவியவற்றை மாத்திரம் செய்து முடிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. இஸ்லாம் ஈமானை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வாழ்க்கைநெறி..

இது புனித ரமழான் மாதம்...நோன்பிருப்பதும்.அதனை திறப்பதும் ஒவ்வொரு சக்தியுள்ள முஸ்லிமின் அன்றாட வாழ்வியலாக மாறியுள்ள இந்நாட்களில்...

நாம் கடைப்பிடிக்கக்கூடிய சில உணவு வழிமுறைகள் இவை

இப்தார் நோன்பு திறக்கும்போது 500 மி.லீ நீரில் 1 தேக்கரண்டி தேனைக் கலந்தும் பேரீச்சம்பழங்களைக் கொண்டும் நோன்பு திறக்கும்போது நாம் அதிக புத்துணர்ச்சி பெறுவோம். இது நம் சக்தியிழப்பைத் தவிர்ப்பதுடன் நோய் தொற்றுகையையும் தவிர்க்கும்.

பேரீச்சம்பழங்கள் நமக்கு விற்றமின்கள், கனியுப்புக்களைத் தருகின்றன. இம்மருத்துவ உண்மைகளை அன்றே நமது புனித இஸ்லாம் பல சந்தர்ப்பங்களில் முன்வைத்துள்ளது.

அவ்வாறே நோன்பு நோற்கும்போதும், நோன்பு திறக்கும்போது ரமழானுக்குப் பொருத்தமான பழங்கள், மரக்கறிகளைத் தேடிப் பெற்று உண்ண வேண்டும்.

பழங்களுள் சில -
ஸ்ரோபெரி, வாழைப்பழம், திராட்சை,பேரீச்சம்பழம், பப்பாசிப்பழம், அன்னாசிப்பழம், மாம்பழம் , தார்ப்பூசனி

பழங்களை தனியாகவோ அல்லது புறூட் சலட், யூஸ் போன்றவையாகவோ உண்ணலாம் அல்லது பருகலாம்.

தார்பூசனி (Watermelon ) ஐ ஜூஸாகவோ அல்லது தனியாகவோ சாப்பிடும்போது நமது சருமம் பொலிவடைவதுடன், நமது உடலுக்குத் தேவையான மங்கனீசு , மக்னீசியம். பொஸ்பரசு, இரும்பு, நாகம், செம்பு மற்றும் பொற்றாசியம் கனியுப்புக்கள் கிடைக்கின்றன.
அத்துடன் இது நமது உடலில் நீர் இழக்கப்படாமல் தடுக்கின்றது..

பழங்கள் நோன்பு காலங்களில் உண்பது தொடர்பான அல்குர்ஆன் திரு வசனங்கள் சில

The Holy Qur'an mentions fruits as a generic term فاكهة fourteen times.

1. And for them there is fruit, and for them there is what they ask for. [36:57]

2. Therein they will recline; therein they will call for fruit in abundance and drinks. [38:51]

3. Therein for you will be fruit in plenty, of which you will eat (as you desire). [43:73].

அவ்வாறே மரக்கறிகளான கீரை வகைகள், தக்காளி, கரற், கறிமிளகாய், போஞ்சி போன்றவையும் ரமழான் மாதத்தில் நமக்கு பொருத்தமான காய்கறிகளாகும். இவற்றை சோற்றுடனோ அல்லது சூப்பாகவோ பயன்படுத்தலாம்.

சுவை மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய இவை நம் ரமழான் மாத உணவுப்பட்டியலில் சேரட்டும்....

ரமழான் சிறப்பு




ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

ரமழானியப் பூக்கள்


ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்
2:185



“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி


நோன்பின் சில ஒழுக்கங்கள்



நோன்பின் சில ஒழுக்கங்கள்
-----------------------------------------------------

நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவை ஃபஜ்ருக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரைப் பிற்படுத்துவதும் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துவதும் நபிவழி ஆகும்.

பழுத்த பேரீத்தம்பழம் அது கிடைக்காவிட்டால் சாதாரணப் பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும் கிடைக்காவிட்டால் கிடைக்கும் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத் திறக்கலாம். எதுவுமே கிடைக்காவிட்டால் உணவு கிடைக்கும் வரை உள்ளத்தில் நோன்பு திறந்ததாக எண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளி வணக்க வழிபாடுகளை அதிகமாக்கிக் கொள்வதும் தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு தவிர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.

ஐவேளைக் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்.

ரமழான் சிந்தனைகள்


நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். நோன்பாளியின் வாய்வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்,”.

இப்படி நோன்பின் காரணமாக, எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை ரம்ஜான் மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது.உள்ளத்தூய்மையும், மனப்பக்குவமுமே இந்த நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும்.

“”நன்மை செய்வதையே விரும்புபவனே! நீ வருக!
அதிகமதிகம் நன்மை செய்வாயாக.
பாவங்களை நாடுபவனே! நீ பாவங்கள்
செய்வதைக் குறைத்துக் கொள்,”

என்கிறார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

பிறருக்கு நன்மை செய்வது பற்றி, இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில்
சிந்திப்போம்
----------------------------------------------------------------------------------------------

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!
எங்கள் இறைவனே! என்னுடைய  பிரார்த்தனையையும்  ஏற்றுக் கொள்வாயாக!
குர்ஆன் 14-40
---------------------------------------------------------------------------------------------

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

“நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், “நான்
நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிவிடுங்கள்,” என்கிறார்கள்
---------------------------------------------------------------------------------------------

"ரமழான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும்,தெளிவான சான்றுகளைக் கொண்டதும், (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்."
(அல்குர்ஆன் 2:185)
-------------------------------------------------------------------------------------------

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோறுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். (ரமளான் பிறை இருபத்தொன்பதாம் நாள் மாலை) உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பதாவது நாளும் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------------


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாவமான சொல்லையும் அதைக் கொண்டு செயல்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தன் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.
-------------------------------------------------------------------------------------------------


'ஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சி ஒன்று. மற்றது அல்லாஹ்வை சந்திக்கும் போது மறுமையில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி'

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


சந்தேகங்களும் விளக்கமும்





ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

1. ஊசி போடலாமா ?

உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

2. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ?

தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா? எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்.
 நூல் : அஹமத், அபூதாவுத்

3. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால்
நோன்பு முறிந்து விடுமா?

நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும்.
(அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

4. நோன்பு எதை கொண்டு திறப்பது ?
நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

சஹர் செய்தல்



சஹர் செய்தல்
---------------------

நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்)

அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர்.
நூல்:அபூதாவுது,நஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன்.  அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி)
நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்


நோன்பின் தற்காலிக சலுகைகள்
--------------------------------------------------
"நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்". (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை.

வந்தது ரமழான்


அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!

ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் நோக்கத்தை சரியாகப் புரிந்து நோன்பினை அனுஷ்டிக்கும்போது இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தக்கூடியதாகவும், செய்த பாவங்களுக்கான கறையைப் பிரார்த்தனைகளுடாகக் கழுவக்கூடியதுமான மாதமாகின்றது.

ரமளான் மாதகாலம் முழுவ‌தும் ஏழை, பணக்காரன் எனும் பாகுபாடின்றி நோன்பு நோற்கவேண்டும் எனும் இஸ்லாத்தின்  கடமையை நாம் ஏற்று நோன்பிருக்கும்போது, மறுமையை வெற்றி கொள்வதற்கான இறையாச்சமும் அதனை வளர்க்கும் ஆன்மீகப் பயிற்சியும் நமக்குக் கிடைக்கின்றன.

இந்தப் பயிற்சியானது எதிர்காலத்திலும் நம்மை பொறுமையோடு இருக்கச்செய்யும்.

நோன்பு என்றால் வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக்
கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமையும்.

அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில்செய்யப்படும்)

ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.

“நோன்பு எனக்குரியது.
அதற்கு நானே கூலி கொடுப்பேன்’

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ரமழானே


ரமழான் கலண்டர்
------------------------------------
பிறை பார்த்தே நம் ரம்ழான் நோன்பு ஆரம்பமாகின்றது. இந்த சந்திரன் தோற்ற நிலை, பயணங்களின் அடிப்படையைக் கொண்டு 2020 ம் ஆண்டு வரை எக்காலங்களில் புனித ரம்ழான் மாதம் நம்மை ஆரத் தழுவும் என்பதை விஞ்ஞானம் எதிர்வு கூறியுள்ளது. 

இந்நாட்கள் உண்மையா..அல்லாஹ்தான் அறிவான்..
இன்ஷா அல்லாஹ் நாமும் காத்திருந்து பார்ப்போம்..

ஹிஜ்ரி 1435 - வருடம் 2014 - June 29 - July 27
ஹிஜ்ரி 1436 - வருடம் 2015 - June 18 - July 16
ஹிஜ்ரி 1437 - வருடம் 2016 - June 07 - July 05
ஹிஜ்ரி 1438 - வருடம் 2017 - May 27 - June 25
ஹிஜ்ரி 1439 - வருடம் 2018 - May 16 - June 14
ஹிஜ்ரி 1440 - வருடம் 2019 - May 05 - June 03
ஹிஜ்ரி 1438 - வருடம் 2017 - April 24 - May 23

-----------------------------------------------------------------------------------------

தக்வா என்பது இறையச்சம். அல்லாஹ்விற்குப் பயந்து அவன் ஏவியவற்றைச் செய்தும் தடை செய்வதைத் தவிர்த்தும் வாழ்வதற்கான இப்பயிற்சியை நோன்பு வழங்குகின்றது. நோன்பில் இவ்வாறான உயரிய பண்புகள் இருப்பதனால்தான் நோன்பை ஒரு வணக்கமாக அல்லாஹ் அங்கீகரித்துள்ளான். 

எனவே .......

நோன்பிற்கு அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பதைப் போன்று நம் வாழ்வின் சகல விடயங்களிலும் அஞ்சி நடப்போமாக! 

ரமழான் இஸ்லாம் கூறும் நல்ல விடயங்கள் அனைத்தையும் நமக்கு ஞாபகப்படுத்தும்  மாதமாகையால்...

பசி, தாகம் கட்டுப்படுத்துவதனைப் போல் நமது அனைத்து பாவங்களையும் கட்டுப்படுத்துவோமாக.!
--------------------------------------------------------------------------------------------------



("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும்,என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!
குர்ஆன் 14-40

அல் குர்ஆன்

புனித அல்குர்ஆனில் .....

ஜூஸ்ஊக்கள் (பாகங்கள்) - ----30
மன்ஸில்கள் -------------------- ---07
சூறாக்கள்-------------------------- 114
மக்கி சூறாக்கள் ----------------- --86
மதனி சூறாக்கள் ------------------ 24
ருகூ கள் ---------- ----------------- 540
வசனங்கள் ---------- -------------6666
சொற்கள்--- ---------- -----------77934
எழுத்துக்கள்--- ---------- ------323760
ஸஹதாக்கள்-----------------------14


நோன்பு திறத்தல்


நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

1. நோன்பு திறக்கும் நேரம்:
---------------------------------------
'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)

சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.

2. விரைவாக நோன்பு திறப்பது:
------------------------------------------------
'விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

3. நோன்பு திறக்கும் உணவு:
-------------------------------------------
'உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்கட்டும்! அது கிடைக்கா விட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூற்கள்: திர்மிதி 631, இப்னுமாஜா 1699)

4. துஆ ஏற்றக்கொள்ளப்படும் நேரமிது
---------------------------------------------------------
'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள். ...' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668)

6. நோன்பு திறக்க உதவுவதன் சிறப்பு:
---------------------------------------------------------
'யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), நூல்: திர்மிதி 735)

7. நோன்பு திறத்தலின் போது ஏற்படும் மகிழ்ச்சி:
---------------------------------------------------------------
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

நல்வழி காட்டும் ரமழானே





سُبْحَانَ الَّذِى أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الاْقْصَى தன் அடியாரை (முஹம்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்”

(அல்குர் ஆன் 17:1)
--------------------------------------------------------------------------------------------------

“லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” ”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
----------------------------------------------------------------------------------------------------

“சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------------

எவரேனும் நோயாளியாகவோ,அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்
(என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

அவஸ்தை


இராக்களில்
கண்களில் கவிழ்ந்து கிடக்கின்றன
உன் கனவுகள் !

பகலிலோ...
மூடிய விழிகளைத் திறக்கின்றேன்
நினைவுகளில் உன் முகம்!

#காதல்_அன்பான_அவஸ்தை!

----------------------------------------------------------------------------------------

வாழ்க்கையை உன் னன்பில் கற்றுக் கொண்டேன்....
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்.....
நிழலாய் தொடரும் உன் ஞாபகங்களுடன்!

---------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு முறையும் உன்னை என்னிடம் விட்டுச் செல்கின்றாய்
முத்தங்களாய்!

---------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தையே அசைக்கின்ற வருடல் காதலில்தான் இருக்கின்றது.

காதல்..............!

வெறும் அன்பா....
வசீகர அன்பா........
இல்லையேல்......
உணர்வுகளும். உயிரும் ஒன்றோடொன்று பிசையும் ஸ்பரிசமா!

#என்னவனே_உன்_காதல்_இனிக்குதடா!

மனசின் வலி



நாம் தனிமையில் இருக்கும்போது, நம் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் செய்யும் கரங்கள் நமது சொந்தங்கள் ஆகின்றன........
உண்மையான உறவு தூர போகாது...
யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது...

---------------------------------------------------------------------------------
காதல்....
வேப்பங்காய்தான்...
காரணம்...
அன்பை அலட்சியப்படுத்தி மனதோடு விளையாடும் ஆண்கள் அதிகம்!

ஏமாற்றங்களால் சுமந்த என் மனம் ஒதுங்கித்தான் இருந்தது இனி எதுவும் வேண்டாமென...

வந்தாய்...
வசந்தமாகி நின்றாய்...
உணர்வோடு உடலும் கலந்து உயிரான நம் வாழ்வினில்....

இன்றோ நீ....

எனை மறந்து வேற்றுத் திசையில்!

வாழ்ந்து கொண்டே  சாகின்றேன்..
புதைகுழியே இனி என் தலையணையாய்!

நீயாவது உனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்திடு!
-----------------------------------------------------------------------------------

நம் நடத்தைதான் பிறருக்கு சந்தேகத்தை தோற்றுவிக்கின்றன. ஆனால் நாமோ பிறரைத் திட்டுகின்றோம் நம்மை புரிந்து கொள்ளவில்லையென...
--------------------------------------------------------------------------------------

எல்லாமே பொய்த்துப் போன பின்னர் வாழ்க்கையைத் தேடுகின்றேன். அதுவோ எட்டா தொலைவில்....

அன்பு கொள்ளும் மனதிற்குத்தான் வலி அதிகம். காரணம் ஏமாற்றுவோர் அதிகம்!


காதலாகி



காதல்.......
உனக்கான என் பரிசு!
இந்த உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஒலிக்கும் காதலின் உச்சரிப்புக்களும், காதலுக்கான பிரார்த்தனைகளும் நம் அன்புக்கான அடையாளங்கள்!
--------------------------------------------------------------------------------------


இட்ட மணலையும் தாண்டி தலை நீட்டும் செடிபோல்
கட்டிளங் காளையுன் பார்வையென்னில் படர்கையில்....
நாணம் அவிழ்ந்து விழி விரிக்கின்றேனடா - உன்
அன்பி லென்றும் கரைந்திருக்க!
---------------------------------------------------------------------------------------


பெருமழை கைக்குட்டை தாங்குமோ
பனிக்குளிரை மெழுகனல் தடுக்குமோ
உன் மௌன முணர்த்தும் பிரிவுத் துயரில்
என் வலி யாறுமோ
அன்பே சொல்!
--------------------------------------------------------------------------------------

வெட்கப்பட்டுக் கிடக்கின்றேன் - நீயென்
பக்கம் வந்து நின்றதால்...
பட்டுக் கன்னங்கள் சிவந்தும் நின்றேன் - நீ
தொட்டுச் சென்ற நினைவுகளைச் சிந்தி!

உன் வாசமாகி



உன் பார்வை ஒன்றே போதுமே
என் கண்ணீர் ஒற்றிக் கொள்ள!
-----------------------------------------------------------------------------------------

துன்பம் நெஞ்சைக் கரைக்கும்போதெல்லாம்
கைக்குட்டையாய் நீ!
வலி தீர்க்கும் உன் அன்பால் - என்
வாழ்வின் கற்கள்கூட பூக்களாய் மாறும் அதிசயம் பார்!
-----------------------------------------------------------------------------------------

காலம்தான் மனக்காயத்தின் மருந்து!
சில துன்பம் சீக்கிரம் கரைந்து விடும்...
சில துன்பம் நம்மை அரித்து விடும்...
------------------------------------------------------------------------------------------

இந்த உலகத்தில் ரொம்ப பாக்கியசாலி உண்மையான அன்பு கிடைத்தவர்கள்தான்...அந்த அன்பை உணரும் இதயத்தின் துடிப்பொலிகள் மகிழ்ச்சியின் அலைவரிசை! ஏனெனில் அந்த அன்பை வார்த்தைகள் அளவிடாது!




காதல் பிம்பங்கள்


உன் முத்தச் சத்தத்தில்தான் - என்
ஒவ்வொரு விடியலும்......
சோம்பல் முறித்துக் கொள்கின்றது

---------------------------------------------------------------------------------




தினம் சண்டையிட்டுக் கொண்டுதானி ருக்கின்றோம்
இருந்தும்.....
உன்னை நானும்
என்னை நீயும்
யாருக்கும் விட்டுக் கொடுப்பதாயில்லை!
இதுதான் காதலின் குணமோ!


நாம் தினம் சண்டையிடுவோம்
அப்பொழுதுதான்...........
 முத்தங்களும் கொஞ்சல்களும்
அதிகமாக கிடைக்கும் !

---------------------------------------------------------------------------------------

உன்னை தினமும் மனப்பாடம் செய்ததில்
என்னையே மறந்துவிட்டேன்
--------------------------------------------------------------------------------------

என் கருவிழியில் படரும் விம்பமாய் நீயானதில்
என் நடைபாதையெங்கும் உன் பாதச் சுவடுகள்தானடா!
-------------------------------------------------------------------------------------

காதல்....!

ஓர் அழகான உணர்வுதான் மறுக்கவில்லை. ஆனால் அந்தக் காதலின் ஒவ்வொரு உணர்வும் அன்பால் எழுதப்படும்போது எழுகின்ற ஏக்கம், தவிப்பு, கூடல், ஊடல், ஆசைகள்.........

எனப் பல மெதுவாக மனதில் ஊர்ந்து அதை அருட்டுமே!
அப்போது எழுகின்ற வலி கலந்த சுகம்....

அதனை வர்ணிக்க வார்த்தைகளேது!
-----------------------------------------------------------------------------------------
எனை மறந்து போனாய்
மனதில் வலி வார்த்து......

உயிரறுந்து போகின்றேன்
உனைப் பிரிந்ததில...

இருந்தும்....
உனக்காய் பிரார்த்திக்கின்றேன்

நிம்மதி தேடும் உன் மனதிற்குள்
இறைவன் அமைதி தருவானாக!

-----------------------------------------------------------------------------------------


உன் உதடுகள்  மௌனம் பிழிந்தால்.....
என் பார்வைகள்  
என்றுமினி தனிமைக்குள் மொய்க்கும்
யாருமின்றி!

உன் முத்தத்தில்


உன்னை நானும்....
என்னை நீயும்.....
மனதில் சுமந்து
மகிழ்ச்சியாய் மணிக்கணக்காய் பேசுகின்றோம்!

என்ன பேசுகின்றோம்
எதுவுமே புரியவில்லை...

இருந்தும்.....

பேச்சை நிறுத்தும்போதல்லவா - என்
சுவாச மூச்சு திணறுகின்றது!

----------------------------------------------------------------------------------------


நாம் மௌனிக்கும்போதெல்லாம்
உரத்துப் பேசி விடுகின்றது நம் முத்தம்!

நாம் சண்டையிடும் போதெல்லாம்
நம்மை அமைதிப்படுத்தி விடுகின்றது நம் முத்தம்!

முத்தங்களின் தித்திப்புக்கூட
காதலுக்குச் சுவைதானோ என் அன்பே!

---------------------------------------------------------------------------------------


காதல்......!

நம்மை ஸ்பரித்துச் செல்லும்போதெல்லாம்....

கூடலும்.....
ஊடலும்.....

நம் விதி நெய்யும்
ஆயுள் ரேகையாய்!

என்னவனே...
அன்பை உன்னிடம்தானே  கற்றுக் கொண்டேன்...!

காற்றும் நுழையா நம் நெருக்கத்தின்
சாட்சியாய் என்றும் நம் நினைவுகள்!


திகட்டா உறவாகி



என்னிதயத்தை நினைந்து பெருமைப்படுகின்றேன்...

ஏனெனில்....

கண்ணீர் கசியும் துன்பம், ஏமாற்றம், சோதனை எல்லாம் என்னை வருத்தும் போதெல்லாம் துடிப்பது இதயம்தானே!

--------------------------------------------------------------------------------

நீ எனும் ஒற்றைச் சொல்......என்
வாழ்வின் முடிவுப்புள்ளி!

-------------------------------------------------------------------------------
அகிலத்தின் உயிர்ப்போட்டத்திற்கு இயக்கமாக இருக்கும் உன்னதமான உறவே காதல்..

இது  மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒர் உணர்வு, தாம் நேசிக்கின்றவர், தன்னை நேசிக்கின்றவர் எனும் வட்டத்தின் சுழற்சியின் அச்சாணி..
தன் நினைவுகளுள் புரண்டு உயிரோடிணைந்து உயிரை வருடும் தன் நேசிப்பின் நெருடலோடு ஆயுள் முழுதும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற  ஆசை....இந்த அன்பு போராட்டத்தின் முதற்படியாகத் தொடங்கினாலும் இறுதியின் உச்சக்கட்டம் ரம்மியமான நினைவுகளின் சுகம்...

காதல் வெற்றி பெறலாம், தோற்றுப் போகலாம்....ஆனால் அதன் நினைவுகள் மரணம்கூட பிரிக்க முடியாதது!

--------------------------------------------------------------------------------


வான்குடை கவிழ்த்து தேன்துளி சிந்தும்
தருணம்......
சாரலாய் மெல்லத்தழுவியென்
ஈரமுறிஞ்சும் வண்டாய் உன்னிதழ்கள்!

--------------------------------------------------------------------------------


உன்னை மறந்துவிட்டு உறங்குவதாய்
திட்டுகின்றாய் இப்போதெல்லாம்.....

அட......

என்னவனே....

கனவுகளில் உன் கரம்பற்றி உலாவ வல்லவோ
இவ்வுறக்கம்!


முதல் காதல்



ஒரு சிறுமி பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அழகான ஓவியமொன்றை கண்டெடுத்தாள். ரம்மியமான அந்த ஓவியம் அவள் மனதைக் கவர்ந்திழுக்கவே, அதனை பத்திரமாக தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரப்படுத்தினாள். தினமும் ஐந்து நிமிடமாவது அந்த ஓவியத்தை பார்ப்பாள்.. ரசிப்பாள்.  மனமகிழ்வாள்.

காலம் உருண்டோடியது. அவளுக்கும் திருமணம் நடக்கின்றது. ஆனால் அவளின் ஓவிய ரசிப்பும் ஓயவில்லை. கணவன் உறங்கிய பின்னர் அதனை ரசிப்பது வழமையான விடயமாகி விட்டது.

ஒருநாள்

அவள் திருட்டுத்தனமாக ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது கணவன் எதிரில் நின்றான்.

"கையில் என்ன வச்சிருக்கிறே" - இது அவன்

அவளோ பட்டென்று சொன்னாள்
 "இது என்னுடைய முதல் காதல்"

அவனும் அதனை வாங்கிப் பார்த்து விழிகளை விரித்தவாறே கூறினான்.

"இது நான் எனது ஒன்பதாவது வயதில் தொலைத்த சித்திரம்"

பார்த்தீர்களா......!

இந்த உலகம் சுற்றிக் கொண்டிருப்பது எங்கோ ஒரு மூலையில் நமக்காக அன்பு செலுத்தும் நெஞ்சமொன்றைத் தேடித்தர

அந்த உயிரை நாம் சந்தித்து விட்டால், அதன்பின்னர் நம் மனம் அந்த மனதின் நினைவுகளுடனேயே சுற்றுகின்றது.

- Jancy Caffoor-

சித்தத்தில்



தனிமை இனிமையானதுதான்...

ஆனால் அதைவிட இனிமையானது - தினமும்
அன்பானவர்களால் சூழ்ந்திருப்பது!

--------------------------------------------------------------------------------------


நம் வாழ்க்கையின் இயல்பு நிலையை திசைமாற்றும் ஓர் பாதை.......
அவசரமான முடிவெடுத்தலாகும்!

எந்த ஒரு விடயமும் அவசரமாக முடிவெடுக்கும்போது அங்கு உணர்ச்சிகளுக்கு மாத்திரமே இடமளிக்கின்றோம். புத்திசாலித்தனம் எங்கோ மறைந்து போகின்றது.

எனவேதான் .............

அவசரமான முடிவுகள்
அவசியமான நம் வாழ்க்கையின் நிம்மதியைக் கலைத்து விடுகின்றது!

----------------------------------------------------------------------------------------






நீயாகி



பூக்கள் விரியும் ஒலியில்
உன்
மூச்சுக்காற்றின் பேச்சும்
துல்லியமாய் கேட்கின்றது!

நீ தள்ளிப்போகும்
ஒவ்வொரு சுவட்டிலும் - என்
தவிப்புக்கள்
அனலைத் தேக்கி
உன் னிழலோரம் அலைகின்றது!

என் தவிப்புக்களின் சுமையேற்றம்
உயிர் கொஞ்சம் வருத்த
நாளை - நான்
வருவேன் உன் தாயகம் தேடி!

- Jancy Caffoor-
 28.07.2014

மௌனத்தால்


மௌனத்தால்
தினம்
எனைக் கொல்லாதே!

உன் சூரியவிழிப் பார்வையால்
உனக்காய் உருகும்
என் னாவியையும் உலர்த்தாதே!

உன் குறுநகையால்
நானாக்கும் குறுந்தொகையை- இனி
வெறுக்காதே!

என் அன்பே

உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்
வலி தந்து
என்னிதயம் கொல்லாதே!

- Jancy Caffoor-
 28.07.2014

நிலா மோனா - 6




நிசப்தத்தின் இம்சையில் - நீ
விட்டுச் செல்லும் மௌனமே
இனி யென் கவிதையாய்!

-----------------------------------------------------------------------------------


வான் விதைக்கும் வைரங்கள் நடுவே
நானும் முத்தாய் - உன்
மார்போரம் அணைந்திடும் தவத்திற்காய்

இருள் தேய்விலும்
காத்திருக்கு முன் நிலா நான்.......

நீயோ.......
எனை ரசிக்காதவனாய்
மேகத்திரைக்குள் மறைகின்றாய்!
------------------------------------------------------------------------------------

அன்பை வருடித் தந்தாய்....
உன்னில் உணர்ந்தேன் தாய்மையையும் தூய்மையையும்!